எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 2 செப்டம்பர், 2023

சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம்

நூல் குறிப்பு

         இஸ்லாமிய பேரிலக்கியங்களில் ஒன்று சீறாப்புராணம் ஆகும்.   இக்காப்பியம்  வள்ளல்  முகமது  நபி  அவர்களின் வரலாற்றை  கூறுவதாக அமைந்துள்ளது. இதனை உமறுப்புலவர் பாடியுள்ளார். கி.பி  17ஆம் நூற்றாண்டை  சார்ந்த இக்காப்பியத்தில்    விலாதத்துக் காண்டம்,  நுபுவத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்  என மூன்று காண்டங்களும், 92 படலங்களும்,  5027  பாடல்களும் காணப்படுகின்றன.

மானுக்குப் பிணை நின்ற படலம் 

  நுபுவத்துக் காண்டம் என்னும்  இரண்டாவது காண்டத்தில் மானுக்குப் பிணை நின்ற படலம் இடம்பெற்றுள்ளது.  இப்படலம். நபிகள் நாயகம் வேடனிடம் சிக்கிய ஒரு பெண்மானுக்காகத் தாமே பிணையாக நின்று, அம்மானை அவனிடமிருந்து மீட்ட பெருங்கருணைத் திறத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

 முகமது நபி மானை காணுதல் 

     முகமது நபி ஒருநாள், நகர்ப் புறத்தினை நீங்கிச் செழுமையான மேகங்களைத் தனது முடியினில் தாங்கியதும், மணமிக்க மலர் வனங்களைக் கொண்ட ஒரு மலையினை அடைந்தார்.

         அங்கு, காட்டில் திரியும் விலங்குகளைக் கொன்று அவற்றின் தசைகளை அறுத்துப் பக்குவமாகச் சுட்டுத் தன்னந்தனியே அவற்றை உண்டு, தனது ஊனைப் பெருக்கி வரும் வேடன் ஒருவன், பெண் மான் ஒன்றை வலையில் பிடித்துக் கட்டி வைத்திருப்பதனை முகமது கண்டார்.

  முகமது நபிகள் மானைக் கண்டபின், அரும்புகளும் தளிரும்மிக்க சோலையையும் காணார்; அருவியையும் காணவில்லை. அருகில் உள்ள நிழலையும் நோக்கார்; தம் மீது ஈச்சங்காயங்கள் மழை போலச் சொரிவதையும் நோக்காராகி மானையே நோக்கிச் சென்றார்.

மானின் நிலை

         தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போல மானின் மடியில் இருந்து பால் சிந்தியது. கண்களில் நீர் பொழிய உடல் பெருமூச்சு விட்டது. திரும்ப முடியாமல் காலில் கட்டுண்டு நிலத்தில் கிடந்தது. வேடுவனின் வலைக்குள் சுருங்கி வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையை நபிகள் கண்டார்.

             அக்காட்டில் உள்ள மரங்களில் பூத்துக் குலுங்கிய  மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்தைக் காண முடியாமல் கண்ணீர் சிந்துவதைப் போலிருந்தது. 

      மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல பறவைகள் தனது இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.

           அப்போது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசை முகமது நபிகள் வருவார். வருத்தப்படும் மானை மீட்பார் என்று கூறுவது போலிருந்தது.

நபிகளிடம் பெண்மான் முறையிடல் 

        முகமது நபி அவர்கள் மானின் அருகில் வந்து நின்றார். தன்னருகே வந்து நின்ற நபியை நோக்கி, தனது குட்டையான வாலை அசைத்து, நெடுங்கழுத்தை நீட்டிக் "கறையற்ற நிலவுபோன்றவரே! வள்ளல் முகமதே!" என விளித்துப் போற்றித் தடையின்றி எவர்க்கும் கேட்கும்படியாக, வணங்கிச் சலாமிட்டுப் பின் கூறலாயிற்று.

  “வல்லவனாகிய இறைவனது உண்மைத் தூதரே! விரைந்து எனது சொற்களை  கேட்டு உமது அருளைத் தருவீராக!” எங்களுக்கு ஒரு இளங்கன்று வேண்டுமென ஆசைப்பட்டு நானும் என் கலைமானும் இருக்க, நான் கருவுறாததால் வருத்தத்துடன் வாழந்தோம். அப்போது முகமதாகிய உங்கள் பெயரைப் போற்றினேன். எனக்கு இளஞ்சூல் உருவாகிக் கரு வளர்ந்தது.”

            "யானும் எனது துணையும் சேர்ந்து ஒன்றானதைப் போன்ற உருவோடு ஓர் இளங்கன்று பிறந்தது. இன்பக் கடலில் ஆழ்ந்து இம்மலையிடத்தைச் சார்ந்து துன்பம் அகன்றிருந்தேன். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. எனது உயிர் போன்ற கன்றும் ஆண்மானும் நானும் எங்கள் சுற்றமும் மலைச்சாரலில் ஓரிடத்தில் வயிராறத் தழையுண்டு, பசி தீர்ந்து பின் நீர் அருந்தி எள்ளளவு அச்சமும் இன்றி நின்று உலவிய நேரம்! நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்து ஒரு மலைக் முகத்தில் இருந்து, மத யானையும் அஞ்சி நடுங்கும்படியாக  இடிமுழக்கம் போன்று ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்டு நாங்கள் ஒவ்வொரு திசையிலும் தனித் தனியாகச் சிதறி  ஓடினோம்."

             "நானும் எனது கன்றைக் காணாது வாடிய மனத்தோடும் உடம்பானது ஆடிக்காற்றில் துரும்பு போல் ஆட, வேறோர் கானகம் புகுந்தேன். அக்காட்டினை அடைந்த போது, அங்கு மறைந்திருந்த இவ்வேடன், வலையில் மாட்டிக் கொண்டேன். புலி வாயிலிருந்து தப்பிச் சிங்கத்தினிடம் சிக்கினாற் போல, என் உடல் பதை பதைக்க நடுங்கி நிற்கின்றேன்." எனக் கூறியது. 

மானின் மனநிலை

   மேலும், மான் முகமது நபி அவர்களை பார்த்து,     "நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான்  என் கன்று பிறந்தது; இன்னும் புல்லை மேய்ந்தறியாது; நீரும் பருகாது;  என் கன்று பூமியில் கிடந்து என்ன பாடுபடுகின்றதோ? அறியேன். எனது கன்று தனது தந்தையாகிய கலைமானிடம் சோ்ந்ததோ? அல்லது வேறொரு புறமாக ஓடிச் சென்றதோ, தன் இனத்தைச் சேர்ந்து பெற்றோருக்காக ஏங்கியதோ? அல்லது புலியின் வாயில் அடிபட்டு இறந்ததோ? என்னைத் தேடி இங்குமங்குமாக ஓடி அலைகின்றதோ ? நான் அறியேன்." எனக் கூறி கண்ணீர் வடித்தது. மேலும் நபிகளை பார்த்து 

    "மாந்தர் எவரும் சொர்க்கத்தில் புகச்செய்யும் புண்ணியனே! நான் இவ்வேடனின் பசியைத் தீர்க்கச் சித்தமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணித்துள்ள பிணைப்பை நீக்கி என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால், என்னுடைய கலை மானைச் சேர்ந்து, அதன் கவலையை மாற்றி எனது நிலையை என் இனத்திற்குத் தெரிவித்து எனது கன்றினுக்கு இனிய தீம்பால் ஊட்டி, எனது குலத்தோடு சேர்ந்து இருந்து விட்டுச் சில நாழிகைப் போதில் திரும்புவேன்" என்று அப்பெண்மான் நபியிடம் முறையிட்டது.

மானுக்குப் பிணையாக நபிகள் நாயகம் நிற்றல் 

    மான் இவ்வாறு உரைக்கக் கேட்ட நபி, மனத்தில் கருணை பொங்க, வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான், இதற்குப் பிணை; எனவே இதனை விடுக” என்றார். 

          அதைக் கேட்ட வேடன் சினத்துடன் சிரித்து "முட்கள் நிரம்பிய காட்டில் உச்சந்தலையில் உள்ள வியர்வை உள்ளங்கால் வரை நனைக்கும்படி ஓடி எந்த வேட்டையும் கிடைக்காத நிலையில் இந்த மானைப் பிடித்து வந்தேன். இந்த மானின் தசையால் என் பெரும்பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நான் வருத்தப்படும்படி பேசி விட்டீர்கள். மேலும், காட்டில் பிடித்த மானை விட்டு விட்டால் அது மீண்டும் மனிதரிடம் திரும்பும் செயல் முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை. எனவே நீங்கள் கேட்பது சரியல்ல" என வேடன் மறுத்துக் கூறினான். 

     அதனைக் கேட்ட  முகமது நபிகள், வேடனை பார்த்து  "என்னைப் பிணையாகக் கொண்டு இந்தப் பெண்மான் விடுவிக்கவும். மான்  ஒரு நாழிகைப் போதில் வராவிட்டால், நான் உனது பசியைத் தீர்ப்பதற்காக ஒன்றிற்கு இரண்டாக அன்புடன் தருவேன்! கவலைப் படாதே!" என்று இனிமையுடன் நபிகள் உரைத்தார். 'ஒன்றுக்கு இரண்டு மான்கள் கிடைக்கும்' என்பதை எண்ணி வேடனும் சம்மதித்தான். மானை விடுவித்தான்.

வேடனின் செயலை மான் தன் கூட்டத்திற்கு உரைத்தல்         

     அப்பெண்மான், தன் இனத்தினுள் சென்று சேர்ந்து கவலை நீங்கியது. தனது கலையின் வருத்தத்தையும் போக்கித் தனது கன்றுக்குப் பாலூட்டி, மென்மையான முதுகையும் வாலினையும் நாவினால் நக்கிக் கொடுத்துக் கழுத்தை வளைத்து மோந்து அதன் வேட்கையையும் போக்கியது.

            கன்றிற்கு அமுதம் ஊட்டிய பின்னர்க் காட்டகத்தில் ஓடிச் சென்று, தனது இனத்திற்கெல்லாம் தான் வேடன் கைப்பட்ட வரலாறும், நபிகள் அதை மீட்டு வர விட்டதும் எடுத்துரைத்தது. 'பிணையாக நபிகள் இருந்தனர்' என்ற மொழியைக் கேட்டுப் மானினம்  அனைத்தும் உள்ளப் பதைப்படைந்து துன்பம் எய்தின. துணையாகிய ஆண்மானும் உடல் சோர்ந்து பெருமூச்சு எய்தி நின்றது. ’பெண் மானை மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டாம்' என ஆண் மான் கூறியது. 

பெண்மான் எடுத்த முடிவு 

         அதனைக் கேட்ட பெண் மான் ஆண் மானிடம் "முகமது நபி அவர்கள், வேடனுடன்  பேசி,  தானே பிணையாக நின்றார். பெரியவன் தூதராகிய நபிகள், இவ்வுலகத்தில் எல்லா உயிர்களையும் அணைத்துக் காப்பதற்கு அவரல்லது வேறு ஒருவர் இல்லையல்லவா? எனது உயிரை வேடனது பசிக்காக ஈந்து, நபியினது பிணையை மீட்க நான் செல்லவில்லை என்றால் சொர்க்கத்தை இழந்து நரகத்தில் வீழ்வேன். எனவே நான் மீண்டும் முகமது நபிகளிடம் சென்று வேடுவனின் பசியாற்ற போகிறேன்" என ஆன்மானிடம் கூறிவிட்டு முகமது நபி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது.  

வேடனின் மனமாற்றம்

      மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதனை நபிகள் பெருமான் கண்டு மகிழ்ந்து, வேடனை பார்த்து  "ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்" என்றுரைத்தார். அதனைக் கண்ட வேடன் அதிசயத்தான். மானின் செயலால் மனம் மாறிய வேடன், முகமது நபியின் கால்களில் விழுந்து வணங்கினான். பெண் மானும் அதன் கன்றும் வள்ளல் முகமதுவை வணங்கியது. மீண்டும் காட்டிற்குச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்தது.

    இவ்வாறு வள்ளல் முகமது நபிகள் மானுக்கு பிணையாக நின்று மானை விடுவித்ததோடு வேடனை மன மாற்றம் அடைய செய்தார் என்ற செய்தியை மானுக்கு பிணை நின்ற படலத்தில் உமறுப்புலவர் பாடியுள்ளார்.

***** இராஜாலி ******

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

முல்லைப்பாட்டு - நப்பூதனார்

 நூல் குறிப்பு

       சங்க இலக்கிய நூல் தொகுதிகளில் ஒன்றான பத்துப்பாட்டில், அகப்பொருள் நூலாக விளங்குவது முல்லைப்பாட்டு. பத்துப்பாட்டு நூல்களில் மிகவும் சிறியதாக,103 அடிகளைக் கொண்டதாக முல்லைப்பாட்டு காணப்படுகிறது. இதனைப் பாடியவர், காவிரிப்பூபட்டிணத்து  பொன் வணிகர் மகன் நப்பூதனார் ஆவார். முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமான, "இருத்தலும் இருத்தல் நிமித்தமும்" என்ற ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.

கார்கால மாலைப் பொழுது


    முல்லைப்பாட்டில் துவக்கமாக நப்பூதனார் கார்கால வரவையும், தலைவியின்மாலைப் பொழுதில் நிலையினையும் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளார்.சங்கு சக்கரத்தை கையில் ஏந்திய திருமால், வாமன அவதாரம் எடுத்த போது மகாபலிச் சக்கரவர்த்தி நீர் வார்த்துக் கொடுக்க, நெடிய உருவம் எடுத்து, இவ்வுலகத்தை அளந்தது போல, மலையில் இருந்து வந்த மேகக்கூட்டங்கள், குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலப்பக்கமாக எழுந்து, மலையில் மோதி, மழையாகப் பொழிந்த மாலைப் பொழுது வந்தது.

நல்லோர் விரிச்சி கேட்டல்

       மழைபெய்த அம் மாலைப்பொழுதில், தலைவியின் துயரைக் கண்டு வருந்திய பெருமுது பெண்டி, காவல் நிறைந்த அவ்வூர் எல்லையைக் கடந்து, நாழியில் கொண்டு சென்ற நெல்லையும்,  புத்தம் புது முல்லைப் பூவையும் இறைவனுக்குத் தூவி, விரிச்சிக்காகக் காத்திருந்தனர். அப்பொழுது சிறு கயிறால் கட்டப்பட்ட பசுக்கன்று ஒன்று தன் தாய் பசுவைத் தேடி தவித்துக்கொண்டிருந்தது. அப்போது,ஆயர்குலப் பெண் ஒருத்தி குளிரில் நடுங்கியவாறு வெளியே வந்து, கோவலர் ஆடுகள், மாடுகள் ஒட்டி வரும் சத்தத்தைக் கேட்டு "இன்னே வருகுவர் தாயர்”எனக் கூறினாள். இதனைக் கேட்ட முது பெண்கள் 'நல்ல வார்த்தையைக் கேட்டோம் அதனால் தலைவன் விரைவாக வினைமுடித்து விரைந்து வந்து சேருவான். எனவே,நீ கவலையை விடுவாயாக' எனத் தலைவியிடம் சென்று ஆறுதல் மொழி கூறினார்கள். ஆனால், தலைவியோ மனம் வருந்திய படி கண்களில் நீர் வடிந்த நிலையில் காணப்பட்டாள். என மாலைப்பொழுதில் தலைவியின் துன்பத்தை முல்லைப்பாட்டு கூறுகிறது.

பாசறையின் இயல்பு


    'கார்காலம் வந்ததும் வருவேன்' எனத் தலைவியிடம் கூறிவிட்டு, தலைவியை பிரிந்து போருக்குச் சென்ற தலைவன், போர்க்களத்தில்,  காட்டாறுகள் பாயும் பரந்துவிரிந்த மணற்பரப்பில், காணப்பட்ட பிடவம் போன்ற செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்து, அங்கே கடல் அலைகளை போன்று பரந்து விரிந்த பாடி வீடுகளை அமைத்து அதில், மன்னனும் படைவீரர்களும் தங்கியிருந்தார்கள்.

யானைப்பாகன் செயல்

   வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பாடி வீடுகளின் முற்றத்தில், சிறு கண்களை உடைய யானைகள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைகள் உண்பதற்காக, ஓங்கி வளர்ந்த கரும்புகளையும், நெற்கதிர்களையும், இன்குளகு எனப்படும் அதிமதுரத் தளைகளையும் போடப்பட்டிருந்தது. யானைகள் அவற்றை உண்ணாது தனது தும்பிக்கையில் அதிமதுரத் தளைகளை எடுத்து தனது நெற்றியை துடைத்தவாறு நின்று கொண்டிருந்தது. அப்போது அங்குசம் எனப்படும் கருவியை கையில் கொண்ட, கல்வி அறிவு அற்ற யானைப் பாகர்கள், வடமொழியில் சில வார்த்தைகளை கூறி யானைக்கு கவளம், கவளமாக உணவுகளை ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

 படை வீரர்கள் தங்குவதற்காக தனியாக வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. முனிவர்கள் கையில் வைத்திருக்கும் முக்கோல் போன்ற கம்புகளை நாட்டி, அவற்றில் கயிறுகளை இறுகக் கட்டி, துணியினால் கூரை அமைத்து, கிடுகு எனப்படும் கேடயங்களை பக்கச் சுவற்றுக்கு பதிலாக நாட்டி, வரிசை, வரிசையாக படைவீடுகளை அமைத்திருந்தார்கள்.

அரசனுக்கு அமைத்த பாசறை

  அரசன் ஓய்வெடுப்பதற்காக தனியாக பாசறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அப்பாசறையில் மாலை நேரத்தில் அழகிய வளையல் அணிந்து, ஒளிவீசும் வாளேந்திய பெண்கள், சுரைக் குடுவையில் நெய்யைக் கொண்டு வந்து பாசறையில் இருக்கும் விளக்குகளில் நெய்யையும், திரியையும் வைத்து விளக்குகளை ஏற்றி விட்டு சென்றனர்.

மெய்க்காப்பாளர்கள் காவல் புரிதல்

      இந்நிலையில், இரவு மணி அடித்து ஓய்ந்து பின்னர், அதிரல் பூத்துக்குலுங்கும் நேரத்தில், குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போது, நேரத்தை கணக்கிட்டு சொல்லும் நாளிகை கணக்கர்கள் மன்னனைப் பார்த்து "பரந்து விரிந்த கடலை கடந்து சென்று வெற்றிவாகை சூடும் மன்னனே!இப்பொழுது நேரம் இன்னது" என வாழ்த்தி, கூறிச் சென்றனர்.

அரசன் படுக்கையில் தூங்காமல் சிந்தித்து இருத்தல்

       அந்த இரவுப் பொழுதில் மன்னன், தூக்கம் கொள்ளாதவனாக காணப்பட்டான். மன்னனுடைய பள்ளியறை இரண்டு அறைகளாக  காணப்பட்டது. அங்கு அழகான விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வலிமையான உடலை உடைய யவனர்களும், வாய் பேச முடியாத ஊமை மிலேச்சர்களும் அங்கு காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது மன்னன் ஒரு கையை படுக்கையில் ஊன்றியவாறு, மற்றொரு கையை தலையில் வைத்தவாறு, தூக்கம் இல்லாதவனாய் இன்றைய நாள் நடந்த போரைப் பற்றி சிந்தித்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்தான்.மறுநாள் பகைவர்களை வென்ற வெற்றி ஆரவாரமும், வெற்றி முரசு முழங்கும் ஒலியும் பாசறையில் கேட்டுக்கொண்டிருந்தது.

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

    தலைவனைப் பிரிந்த தலைவி கார்காலம் வந்த பின்பும் தலைவன் திரும்பாததால், துயரம் அடைந்து, நீண்ட நேரம் தூக்கம் இல்லாதவராக காணப்பட்டாள். பசலை நோயால் உடல் நலிவுற்று கையிலிருந்த வளையல்கள் கழன்று விழுந்த நிலையில் காணப்பட்டாள். பெருமூச்சு விட்டவளாய், பாவை விளக்கு எரியும் ஏழு அடுக்கு மாளிகையில் தலைவி தூங்காமல் விழித்திருந்தாள் அப்பொழுது மழை நீர் அருவி போல் பாயும் ஓசை காதில் கேட்டது. மறுநாள் காலை அரசனும், படைகளும் எதிரியை வென்றுbஅவருடைய நிலத்தை கைப்பற்றிக்கொண்டு, வெற்றிக் கொடியை ஏந்தியவாறு ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர்.

மழையில் செழித்த முல்லை நிலம்


    வெற்றி பெற்று வரும் மன்னன், இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வந்து கொண்டிருந்தான், அப்பொழுது, முல்லை நிலத்தில் காயா மலர்கள் பூத்துக் காணப்பட்டன. பொன் போன்ற கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கின, முல்லை அரும்புகள் மலர்ந்து காணப்பட்டன. செல்லும் வழி எங்கும் தோன்றி மலர்கள் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த வரகு செடியில் கதிர்களை பெண் மானும், ஆண் மானும் இணைந்து மகிழ்ச்சியுடன் மேய்ந்து கொண்டிருந்தன. மன்னனை வரவேற்கும் நிலையில்  சிறுதூறல் பெய்து கொண்டே இருந்தது.

    என முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையையும், கார்கால சூழலையும், மன்னன் அமைத்திருந்த பாசறையின் தன்மையினையும், மழையால் முல்லை நிலம் செழித்த காட்சியையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் அழகாக விவரித்துள்ளார்.

******* இராஜாலி******

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...