எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

குறுந்தொகை - நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று

நூல் குறிப்பு

    'நல்ல குறுந்தொகை' என சிறப்பித்துக் கூறப்படும் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்நூலில், ஐந்திணைகளுக்கும் உரிய 400 பாடல்கள் காணப்படுகின்றன. 4 முதல் 8 அடி வரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ என்பவர் ஆவார். தொகுப்பித்தவர் யாரென தெரியாது. 

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று


திணை – குறிஞ்சி

பாடியவர் – தேவகுலத்தார்

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் – தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

         நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

         நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

         கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

         பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் விளக்கம்

    இயற்பழித்துக் கூறிய தோழியை பார்த்து தலைவி  “எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தோழிக்குத் தலைவி கூறுவதாக தேவ குலத்தார் பாடியுள்ளார்.

சனி, 2 செப்டம்பர், 2023

நற்றிணை - நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்

  நூல் குறிப்பு 

   எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை ஐந்திணைகளுக்கும் உரிய அகக்கருத்துகளைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டதாகும். இந்நூலில் 9 அடி முதல் 12 அடி வரையிலான பாடல்கள் இடம்  பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் யார் என தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவராவார். இந்நூலை நற்றிணை நானூறு எனவும் வழங்குவர்.

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்


 
திணை - குறிஞ்சி
      
பாடியவர் – கபிலர்

கூற்று - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி “தலைவ ன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றார்.

பாடலின் விளக்கம்

         தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியை பார்த்து தலைவி,  “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்” என்று தலைவி கூறுவதாக கபிலர் பாடியுள்ளார்.

**** இராஜாலி****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...