எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பெரியபுராணம் - பூசலார் நாயனார் புராணம்

முன்னுரை

     தனியடியார்கள் அறுபத்து மூவரும், மற்றும் தொகையடியார் ஒன்பது பேரும் சேர்த்து எழுபத்திரண்டு சிவனடியார்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் பெருமை பெற்ற நூல் பெரியபுராணம் ஆகும். இந்நூலை இயற்றிய சேக்கிழார், இந்நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் எனப் பெயரிட்டார். இந்நூல் பன்னிரெண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது. இதில் இரண்டு காண்டங்கள், 13 சருக்கங்கள், 4286 விருதப்பாக்கள் காணப்படுகின்றன.

பூசலார் நாயனார் புராணம்

     தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்தில் தோன்றியவர் பூசலார். இவர் சிவனடியாராகிய அன்பர்களுக்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் என்றெண்ணி, பொருள்தேடி அடியவர்களுக்கு அளித்து  வந்தார். சிவபெருமானுக்குக் கோயில் அமைக்க எண்ணி, பொருளுதவி கிடைக்கப் பெறாமையால் மனதிலே கோயில் எழுப்பிய பூசலாரின் பக்திச் சிறப்பினைப் பூசலார் நாயனார் புராணம் எடுத்துரைக்கின்றது.

பூசலார்

 திருநின்றவூரில் வைதீக மரபினில் அவதரித்தவர் பூசலார். உடலாலும் உணர்வாலும் சிவபெருமானை முப்பொழுதும் நினைக்கின்ற அறநெறியாளராகத் திகழ்ந்தவர். உண்மைப் பொருளைப் பெறுதற்கு ஏதுவாகிய வேத நீதிக் கலைகள் அனைத்தையும் தெளிவு பெற்று உணர்ந்தவராகப் பூசலார் விளங்கினார்.

கோயில் கட்ட நினைத்தல்

  சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதே தம் பணியாக பூசலார் கருதினார், சிவபெருமானுக்குக் கோயில் கட்டுவதற்குப் பெருஞ்செல்வம் தம்மிடம் இல்லாமையைக் கண்டு மனம் வருந்தினார். சிவபெருமானுக்கு ஒரு கோயிலைக் கட்ட மனதில் எண்ணினார். கோயில் கட்டுவதற்குப் பொருள் எவ்வகையிலும் கிட்டாமையால், மனதில் கோவில் கட்ட எண்ணி,

"நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியமெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டு"
கோவில் காட்டும் பணியை மேற்கொண்டார்.

கோயில் கட்டி முடித்தல்

    கோயில் கட்டுவதற்குரிய சாதனங்களோடு தச்சர்களையும் மனதினால் தேடிக் கொண்டு, கோயில் கட்டுவதற்கு நல்ல நாளும், வேளையும், பார்த்து ஆகம விதிப்படி அடிநிலை (அஸ்திவாரம்) அமைக்கக் கருதினார். இரவு முழுவதும் உறங்காமல் கோயில் எடுக்கலானார். அடிநிலை வரி முதலாக வரும் அடுக்குகள் அனைத்தையும் முடித்து, சித்திர வேலைப்பாடுகள் மனதிலே அமைத்து சுண்ணச்சாந்து பூசி, மேல் சிற்ப அலங்கார வகைகளையும் செய்தார். தீர்த்தக் கிணறு அமைத்து, கோயிலைச் சுற்றிலும் மதிற் சுவர் எழுப்பினார். தடாகம் அகழ்ந்ததோடு, கோயிலுக்கு வேண்டிய அனைத்தையும் வகைபட செய்து, சிவபெருமானுக்குரிய நன்னாளில் தாபரம் (பிரதிட்டை ) செய்ய பூசலார் விரும்பினார்.

பல்லவ அரசன் கனவில் இறைவன்

    காடவர் பெருமானாகிய இராசசிங்கன் என்னும் பல்லவ அரசன் கச்சியம் (காஞ்சி) பதியில் சிவபெருமானுக்குத் திருக்கோவில் அமைத்து, வேண்டிய பணிகளை விரைந்து மேற்கொண்டு வந்தான். பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இவ்வாலயத்திற்குக் குடமுழுக்குச் செய்தும் பிரதிட்டை செய்தும், சிவபெருமானை எழுந்தருளச் செய்ய பூசலார் குறித்த அந்நன்நாளைக் குறித்தான். அன்நாளுக்கு முந்தைய நாள் கொன்றைமலர்ச் சூடிய சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றினார்.

"பல்லவ மன்னனே!

"நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
'நன்றுநீ பால யத்து நாளை நாம் புகுவோம்”

என தொண்டராகிய பூசலாரை உலகறியச் செய்யவேண்டும் என்னும் நோக்கில் சிவபெருமான், பல்லவ மன்னனின் கனவில் தோன்றி அக்கோயிலிலே 'நாளை நாம் புகுவோம்' என்றுரைத்து, உன் ஆலயப்பணி செய்கையை நாளைக்கழித்து வைத்துக் கொள்வாயாக!" என்று இறைவன் அருளினார். இறைவன் உரைத்த அத்தொண்டரின் திருப்பணியைக் கண்டு வணங்கிவர வேண்டும் என மன்னன் திருநின்றவூர் வந்து சேர்ந்தான்.

கோயில் எங்கே உள்ளது

    திருநின்றவூர் வந்து சேர்ந்த அரசன், 'பூசலார் என்னும் அன்பர் கட்டியக் கோயில் எப்பக்கத்தில் உள்ளது'? என்று அங்குள்ளோரிடம் வினவினான். 'பூசலார் கோயில் ஒன்றும் எழுப்பவில்லை' என்று அனைவரும் கூறவே, உண்மை நெறியினில் நிற்கும் மறையவர்கள் எல்லோரும் வருக என்று ஆணையிட்டான். வேதியர்கள் அனைவரும் அரசனைக் கண்டனர். மன்னன், பூசலார் யார்? என்று வினவியபோது, மறையோர்கள் எல்லோரும் அவர் குற்றமற்ற வேதியர் என்று பதிலுரைத்தனர். அரசன் பூசலாரை காண அவரது இல்லம் நோக்கி விரைந்தான். பூசலாரைக் கண்டு தொழுதான் அரசன். ‘பூசலாரே! இவ்வூரில் நீவிர் கட்டிய கோயில் எங்கே உள்ளது? சிவபெருமான் அத்திருக்கோயிலில் தாபித்தருளும் நாள் இன்றென தெரிவித்தார். ஆகையால் உங்கள் திருவடி கண்டு தொழுதற்கு வந்ததாக' அரசன் கூறினான்.

பூசலார் நிகழ்வினை விளக்குதல்

   பல்லவ அரசன் கூறியதைக் கேட்ட பூசலார் மருட்சியடைந்து,  எம்பெருமான் தன்னையும் ஒரு பொருளாகக் கொண்டு அருளினமையைக் கண்டு வியப்படைந்தார். கோயில் அமைக்க வேண்டிய பொருள் கிடைக்காமையால் மனத்தினாலே முயன்று நினைத்து, நினைத்து செய்த கோயில் இதுவாகும் என்று சிந்தனையினால் செய்தக் கோயிலை பூசலார் அரசனிடம் எடுத்துரைத்தார்.

நிலமிசை வீழ்ந்து வணங்குதல்

  பூசலார் உரைத்ததைக் கேட்ட அரசன் அதிசயம் அடைந்து, குற்றமற்ற சிந்தையினையுடைய அன்பரின் பெருமையைத் துதித்து, மணமிக்க மாலை கீழே படியும்படி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். முரசுகள் ஒலிக்க சேனைகளுடன் மீண்டும் அரசன் தன் ஊரினையடைந்தான்.

நிறைவுரை

 அன்பராகிய பூசலாரும் தாம் மனத்தினால் அமைத்த ஆலயத்திற்கு, பல நாள் அகம் குளிர, முகம் மலர பூஜைகள் செய்து துதித்து பொன்னம்பல நாதன் ஆகிய சிவபெருமானின் இணையடி நிழலில் இளைப்பாறினார். என்று சேக்கிழார், பூசலாரின் வரலாற்றைக் கூறுகிறார்.

 ******இராஜாலி ******

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை

முன்னுரை

        ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பட்டது. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான இக்காப்பியம், கோவலன் கண்ணகிக்கு பிறந்த மணிமேகலையின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதாக காணப்படுகிறது. 30 காதைகளையும் 4755 பாடல்களையும் கொண்டதாக இக்காப்பியம் விளங்குகிறது. பௌத்த சமயத்தைச் சார்ந்த இக்காப்பியம், மணிமேகலைத் துறவு, புரட்சிக் காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், கதைக்களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம் எனவும்  அழைக்கப்படுகிறது. 

பாத்திரம் பெற்ற காதை

       மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவ தீவில் விட்டுச் சென்ற பின்னர், அத்தீவை காவல் காக்கும் தீவத்திலகை என்னும் பெண் தெய்வம் மணிமேகலை முன் தோன்றியது. மணிமேகலை தனது முற்பிறவியினை  அறிந்ததை தெரிந்த பின்னர்,  புத்த பீடிகைக்கு முன் உள்ள கோமுகி பொய்கையில் காணப்படும் ஆபுத்திரனின் கையில் இருந்த அமுத சுரபியினை பெறுவதற்கான வழிகளை மணிமேகலையிடம் கூறியது. அதன் பின்னர் மணிமேகலை புத்த தேவனை வணங்கி அமுதசுரபியினை பெற்ற செய்தியை கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

மணிபல்லவத் தீவில் மணிமேகலை

       மணிபல்லவத் தீவிற்கு வந்த மணிமேகலை, மணிமேகலா தெய்வம் கூறியதன் படி புத்தரின் ஆலயத்தை வணங்கி தனது முற்பிறவியினை அறிந்து கொண்டாள்.

தீவத்திலகை வருதல் 

       மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் குளங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

          மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்

தீவதிலகை மறுமொழிக் கூறுதல்

       மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். அவளுக்கு தன்னைப் பற்றி சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. அதனை வலம் செய்து வணங்க இங்கு வந்தேன். குற்றமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் இப்பொழுது காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை அமுதசுரபியைப் பற்றி கூறுதல் 

      அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அவ்வாறு வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் குறைவு. அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். புத்தரின் அருள் பெற்ற உயர்ந்தவளே! நான் கூறுவதைக் கேட்பாயாக!

“மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும். அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது.

           'ஆங்கு அதின் பெய்த ஆர் உயிர் மருந்து

           வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

           தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்'

எனக் கூறியதோடு மேலும், இப்பாத்திரத்தின் சிறப்பினை அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

         தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

      மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசிப் பிணி மருத்துவம் 

      புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து,

            'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

            நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

           பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

           பசிப்பிணி என்னும் பாவி அது'

எனப் பசியின் கொடுமைகளை எடுத்துக் கூறி, 'இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது'  எனக் கூறினாள். 

நாய்யை தின்ற விசுவாமித்திரன் 

           தீவத் திலகை மேலும் மணிமேகலையை பார்த்து,"முன்பு ஒரு நாள், புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின. எனவே,கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர்.

           'மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

           உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

எனவே நீயும் அறநெறி வாழ்க்கையை மேற்கொண்டு, பசிப்பிணியைப் போக்கி மண்ணுயிர் வாழ வழி செய்வாயாக " என அறிவுரைகளைக் கூறினாள்.

மணிமேகலை மறுமொழிக் கூறுதல் 

     இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கினேன். அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது. மேலும், பெற்ற குழந்தையைப் பார்த்ததும் தாயின் மார்பகம் பால் சுரப்பது போல, பசியால் வாடுபவரை கண்டதும் இப்ப பாத்திரம் உணவை சுரந்தளிக்கும். அதனைக் கொண்டு பசித்தவர் பிணி களைவேன்" எனக் கூறினாள்.

வானத்தில் பறந்தாள்

         அதன் பின்னர் மணிமேகலை தீவத்திலகையின் கால்களில் விழுந்து வணங்கி, அமுத சுரபியைக் கையில் ஏந்தியவளாக புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி, மணிமேகலா தெய்வம் சொல்லித்தந்த மந்திரத்தைக் கூறி வானத்தில் பறந்து தனக்காக காத்திருக்கும் மாதவியின் முன்வந்து இறங்கினாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

     மணிமேகலையைக் கண்டதும், மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை, அவர்களிடம் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள்.

       பின்னர், 'அமுதசுரபியின் தன்மையினை அறவண அடிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்' என இருவரையும் அழைத்துக் கொண்டு அறவண அடிகளை காண்பதற்காக மணிமேகலைச் சென்றாள்.

முடிவுரை

        இவ்வாறு பாத்திரம் பெற்ற காதையில் மணிமேகலை அமுத சுரபியை மணிபல்லவத் தீவில் இருந்து பெற்று வந்த செய்தியை சீத்தலைச் சாத்தனார் கூறியுள்ளார்.

************ இராஜாலி ********



ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...