எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 23 ஜூலை, 2022

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

      தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள், வாழ்வியல் கூறுகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், தமிழ் இலக்கிய வடிவத்தில் சிறுகதை இலக்கியம் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

      கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

'பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்' 

என்று உரைப்பார்.

சிறுகதைக்கான இலக்கணம்

   அரைமணி முதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பார் எட்கர் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் இருத்தல் வேண்டும். சுவைமிக்கனவாக இருத்தல் வேண்டும் என்பர், செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி, செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.

சிறுகதை தோன்றிய சூழல்

   19ம் நூற்றாண்டில்  இலக்கியத்தின் மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கியப்  பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அச்சுப்பொறியின் வருகையால் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில் வந்தது வீரமாமுனிவரின் 'பரமார்த்த குருவின் கதை' அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிடபூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்

· வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து 'வினோத ரசமஞ்சரி'என்று வெளியிட்டார்.

· வ. வே. சு.ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை சிறுகதைக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

· செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற  கதைகள்  தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.

· ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது 'குசிகர் குட்டிக்கதைகள்' ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.

· மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத்தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

· கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.

· சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது. சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.

· மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்.

இதழ்களால் வளர்ந்த சிறுகதை

   தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம்,  சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். மேலும், மணிக்கொடி இதழில், சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாக க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், சுந்தரராமசாமி, கு.அகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, கி.ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்

     இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அயல்நாடுகளில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி

    தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்பத்தில் சிறுகதை

   இதழ்களால் வளர்ந்த சிறுகதை, இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கென பல இணையதளங்களும் வலைப்பூக்களும் காணப்படுகின்றன. மேலும், அலைபேசியிலும், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.

 முடிவுரை 

       காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்ததமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக்கதை என தன் வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி அடைந்துள்ளது.

......இராஜாலி......

வியாழன், 14 ஜூலை, 2022

சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை

 

“சிலப்பதிகாரம்  -   ஊர்காண் காதை”

  

முன்னுரை

          ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானதாக கருதப்படும் சிலப்பதிகாரம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்டதாகும். முதன்மைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக் காப்பியம் என அழைக்கப்படும், சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி,மாதவி இவர்களில் வரலாற்றைக் கூறுவதாகும். இக்காப்பியம், புகார் காண்டம் , மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும்  கொண்டதாகும். தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த இக்காப்பியத்தில், 5001 பாடல்கள் காணப்படுகின்றன.

ஊர்காண் காதை

          மதுரைக் காண்டத்தில், நான்காவது காதையாக விளங்குவது ‘ஊர்காண் காதை’ ஆகும். இதில், மதுரையை நோக்கி வந்த, கோவலனும் கண்ணகியும் கவுந்திஅடிகளுடன் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள். பொழுது விடிந்ததும், கோவலன்  கவுந்திஅடிகளைத் தொழுது, தனது மனத் துயரங்களை எடுத்துக் கூறியதோடு, தன்னால் கண்ணகிக்கும் நேர்ந்த துன்பங்களை கூறி  வருந்தினான். கவுந்திஅடிகள்  கோவலனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கோவலன் கண்ணகியை கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுவிட்டு,  மதுரை நகருக்குள் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டான். பல்வேறு கடைகளையும், தெருக்களையும் கண்டு மீண்டும் புறஞ்சேரிக்கு திரும்பி வந்தான். என்ற செய்தியை கூறுவதாக 'ஊர் காண் காதை' அமைந்துள்ளது.

பொழுது புலர்ந்தது

        புறஞ்சேரியில் காணப்பட்ட சோலைகளிலும், நீர் நிறைந்த பண்ணைகளிலும், கதிர் முற்றி வளைந்த வயல்களிலும் பறவைகள் துயிலெழுந்து ஒலி எழுப்பின. சூரியன் உதயம் ஆனதால் குளங்களில் உள்ள தாமரைகள் மலர்ந்தன. பகை அரசர்களுக்கு தலை நடுக்கத்தை கொடுக்கும் பாண்டிய மன்னனின் வாளில் இருந்து எழும் ஒளியைப் போல மதுரை முழுவதும் சூரிய ஒளி பரவி மக்களை துயில் எழுப்பியது.

சங்கும் முரசும் ஒலித்தன

        புறஞ்சேரியில், நெற்றிக் கண்களையுடைய சிவபெருமான் கோயிலும், கருடக் கொடியை உடைய திருமாலின் கோயிலும், வெற்றிதரும் கலப்பை படையினை ஏந்திய பலராமன் கோயிலும், சேவல் கொடியை உடைய முருகப் பெருமான் கோயிலும், அறத்தை போதிக்கும் அறவோன் பள்ளியும், வீரம் விளைந்த மன்னனின் கோயிலும் காணப்பட்டன. அங்கு,தூய வெண் சங்கும், காலை முரசும் முழங்கி காலைப் பொழுதை அறிவித்தன.

கோவலன் கவுந்தி அடிகளை வணங்கி தன் நிலையை கூறுதல்

        அப்பொழுது கோவலன், தியானத்தில் இருந்த கவுந்தி அடிகளைக் கண்டு கையால் தொழுது வணங்கி போற்றினான்.

 "நறுமலர் மேனி நடுங்குதுயர் எழுத

 அறியாத் தேயத்து ஆரிடை உழந்து

 சிறுமை உற்றேன் செய்தவத் தீர்யான்"

 

என கண்ணகிக்கு தான் இழைத்த தவறினை கூறினான். மேலும், சிறப்புமிக்க இம்மதுரையிலுள்ள பெரு வணிகர்களிடம் எனது நிலையினை கூறி திரும்ப வரும் வரைக்கும் கண்ணகியை கவுந்தியடிகளின்  பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்படி  வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

கவுந்தியடிகளின் அறிவுரைகள்

கோவலனின் துயர மொழி கேட்ட கவுந்தியடிகள் அவனைப்பார்த்து "முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாக காதலியுடன் பெரும் துயரம் அடைந்த கோவலனே! மனிதர்கள்,  'தீமையை விட்டு விலகுங்கள். விலக வில்லை எனில் தீய செயல் தன் பயனாகிய துன்பத்தை தருவிக்கும்' என அற நூல்களை கற்றறிந்த சான்றோர்கள் கூறிய கருத்துக்களை பொருட்படுத்தாமல்  செயல்பட்டு துன்பப்படுகிறார்கள். அவ்வாறு, அவர்கள் படும் துன்பத்தை கண்டு  ஞானிகள் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். பெண்களைப் பிரிந்தால் ஏற்படும் துன்பமும், பெண்களோடு புணர்ந்தால் ஏற்படும் துன்பமும் இல்லறத்தாருக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் ஒப்பற்ற தவ வாழ்க்கை மேற்கொள்ளும் ஞானிகளுக்கு அத்துன்பம் கிடையாது. இவ்வுலகில், பெண்டிரும் உணவுமே இன்பம் தரும் பொருட்கள்  எனக் கருதி வாழ்வோர் முடிவில் அளவற்ற துன்பத்தை அடைவார்கள் என்பதைத் துறவிகள் உணர்ந்து, காமத்தை விலக்கினார்கள். அவ்வாறு ஞானிகள் விலக்கிய காமத்தின் மீது பற்றுக் கொண்டு பலர் துன்பத்தையே அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வாறு  காதல் துன்பத்தில் விழுந்தவர்கள் காலங்காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தந்தையின் ஏவலால் தன் மனைவியுடன் கானகம் சென்று,அவளைப் பிரிந்து கடும் துயருற்ற வேதத்தின் நாயகனாகிய இராமனின் துன்பத்தை நீ அறிவாயா? அது இராமனின் வினைப்பயன் அன்றோ?. சூதாட்டத்தில் தோற்று,மனைவி தமயந்தியுடன் காட்டிற்குச் சென்று அவளைப் பிரிந்த நளனின் கதையை அறிவாயோ? அதுவும் வினைப் பயனே!

 நீ அவர்களைப்போல துன்பம் அடையவில்லை. மனைவியை பிரியாத வாழ்க்கையை பெற்றிருக்கிறாய். எனவே, வருத்தம் கொள்ளாமல் மதுரைக்குச் சென்று தங்குவதற்கு ஏற்ற இடம் ஒன்றை அறிந்து வருவாயாக" எனக் கோவலனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்.

கோவலன் மதுரை நகரை அடைதல்

          கோவலன் மதுரையை நோக்கி சென்றான். கடுமையான காவல் நிறைந்த கோட்டை மதிலைச் சுற்றி  அகழி எனப்படும் நீர்ப்பரப்பு காணப்பட்டது. அதில் யானைகள் செல்வதற்காக  குறுகிய பாதை ஒன்று காணப்பட்டது. அப்பாதையில் பகைவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கும் வகையில் ஒளி பொருந்திய வாள்களை கையில் ஏந்திய யவனர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு ஐயம் தோன்றாத வகையில் கோட்டைக்குள் புகுந்த கோவலன், ஆயிரம் கண்களையுடைய தேவேந்திரனின் அணிகலன்கள் சேர்த்து வைத்திருக்கும் அணிகலப் பெட்டியின் வாயைத் திறந்தது வைத்திருந்தது போல காணப்பட்ட கோட்டை வாயிலைக் கடந்து  நகருக்குள் சென்றான்.

அங்காடி வீதி

          மதுரை நகருக்குள் புகுந்த கோவலன் அங்காடி வீதியை கண்டான்.  அங்கு விற்கப்பட்ட பண்டங்களில் குறிப்பாக,

மூடாக்கு வண்டியும், பல்லாக்கும், தேரில் வைக்கப்படும்  கொடுஞ்சி  என்னும் இருக்கையும், மார்புக் கவசமும், மணி பதித்தத்  தோலாலான உடம்புக் கவசமும், தவம் புரிய உதவும் புலியின்  தோலும், வளைந்திருக்கும் குழியம் என்னும் படைக்கருவியும்,  விசிறும் வெண் கவரியும், அன்னப் பறவை போன்ற  துணிப் பொம்மையும், கேடயங்கள் போன்ற பொம்மைகளும், காடுகள் போன்று ஓவியம் வரையப்பட்ட  திரைத்துணிகளும், வயிர மாலையும், செம்பில் செய்த பொருள்களும்,  வெண்கலத்தில் செய்த பொருட்களும்,  முடிச்சுப் போட்டுச் செய்யப்பட்ட பொருள்களும், மாலையில் செய்யப்பட்ட பொருள்களும், பவளத்தால் கோக்கப்பட்ட பொருள்களும், சங்கினைக் கடைந்து செய்யப்பட்ட பொருள்களும், நறுமணப் புகைகளும், சந்தனப் பொருள்களும், பூ வேலைப்பாடுகள்  நிறைந்த பொருட்களும், அங்கு குவிந்து கிடந்தன. அரசனும் விரும்பும் கடைத்தெரு வாக அது காணப்பட்டது.  கோவலன் அந்தக் கடைத்தெரு வழியாகச் சென்றான்.

நகைக்கடையும், துணிக்கடையும்

          அங்கு, நகைக்கடைகள் மிகுதியாகக் காணப்பட்டன அவற்றில், சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்  என்ற நான்கு வகையான பொன் நகைகளை பகுத்து அறியும் வணிகர்களும், வாங்குபவர்களும் நிரம்ப காணப்பட்டார்கள். 'இது எங்கே இருக்கிறது' என அறிவிப்பதற்காக கொடிகள் கட்டப்பட்டிருந்த பொன் கடை வீதிகளை கடந்து கோவலன் சென்றான்.

 மேலும், பருத்தி, மயிர், பட்டுப்போன்ற நூல் இழைகளைக் கொண்டு மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்ட புடவைகள், பலநூறு அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிக்கடை வீதிகளையும் கோவலன் கடந்து சென்றான்.

கூல வீதிகள்

          மதுரை நகரில் கோவலன் கூல வீதியை கண்டான் அங்கு நிறுக்கும் துலாக்கோலை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், பறை என்னும் அளவு கருவியை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், நெல் அளக்கும் கருவியான மரக்காலை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், தரகு செய்யும் தரகர்களும் நிரம்ப காணப்பட்டார்கள். மேலும் அங்கு பெரிய மிளகு மூட்டைகளுடன் பல வகையான தானியங்களும் குவித்து வைத்திருப்பதை கோவலன் பார்த்துச் சென்றான்.

 கோவலன் மதிற்புறம் திரும்புதல்

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வகையினர் வாழும் தெருக்களையும், முச்சந்தியிலும்,நாற்சந்தியிலும், குறுக்கு தெருக்களிலும் சூரிய ஒளியே நுழையாதவாறு சிறிய, பெரிய கொடிகள் நெருக்கமாக கட்டப்பட்டிருந்தது. கொடிகளின் நிழலிலேயே நடந்து சென்று மதுரை நகர் வளத்தைக் கண்டு மகிழ்ந்த கோவலன், கொடிகள் பறக்கும் மதில் புறத்தே வந்து சேர்ந்தான்.

 முடிவுரை

 மதுரைக் காண்டத்தில், காணப்படும், ஊர்காண் காதையில் மதுரை நகருக்குள் சென்ற கோவலன்; அங்காடி வீதியின் அழகையும், துணிக்கடைகளின் சிறப்பையும், கூல வீதியின் அழகையும் கண்டு களித்த வனாக மீண்டும் புறஞ்சேரி அடைந்த செய்தியை கூறுவதாக  இக்காதை காணப்படுகின்றது.

********* இராஜாலி  **********

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - எளிய உரை

  அதிகாரம்  1    கடவுள் வாழ்த்து