எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

மணிமேகலை - பாத்திர மரபு கூறிய காதை


 முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில், சீத்தலைசாத்தனாரால் இயற்றப்பட்டதாகும். சிலப்பதிகாரத்தின்  தொடர்கதையாக அமையும் இக்காப்பியம் இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பௌத்த சமயக் கருத்துக்களைக் கூறும் இக்காப்பியம், முப்பது காதைகளையும் 4755 அடிகளையும் கொண்டதாகும். ‘மணிமேகலை துறவு’ எனவும் இக்காப்பியம் அழைக்கப்படுகிறது.

 பாத்திர மரபு கூறிய காதை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படுவது ‘பாத்திர மரபு கூறிய காதை’ ஆகும். இதில் அறவண அடிகள்; மணிமேகலை, மாதவி மற்றும்  சுதமதி  ஆகியோரிடம், ஆபுத்திரனுக்கு அமுதசுரபி கிடைத்த செய்தியையும், அமுதசுரபியின் தன்மையையும் கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

அறவண அடிகள் அமுதசுரபியின் தன்மையை கூறுதல்

தனக்கு முன்னால் அமர்ந்திருந்த மணிமேகலையை பார்த்து அறவண அடிகள், "பூங்கொடியை போன்ற அழகு பொருந்திய மணிமேகலையே கேட்பாயாக!" என ஆபுத்திரன் அமுதசுரபி பெற்ற செய்தியை பின்வருமாறு கூறினார்.

வழிப்போக்கர்கள் ஆபுத்திரன் இடம் உணவு வேண்டுதல்

மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் இரவில் ஆபுத்திரன் தூங்கிக் கொண்டிருந்த சிந்தாதேவி ஆலயத்திற்குள் வந்த வழிப்போக்கர்கள், ஆபுத்திரனை எழுப்பி " வயிறு காய் பெரும் பசி மலைக்கும் "என தாங்கள் பசியால் வாடுவதைக் கூறினார்கள். அவர்களின் பசியைப் போக்க உணவு எதுவும் இல்லாத நிலையில் வருந்திய ஆபுத்திரன், சிந்தா தேவியின் முன் உள்ளம் உருகி வேண்டினான்.

சிந்தாதேவி அமுதசுரபியை கொடுத்தல்

          பிறர் துன்பம் கண்டு வருந்திய ஆபுத்திரன் முன்பு சிந்தாதேவி தோன்றி,

"நாடு வறம் கூறினும் இவ்   ஓடு வறம் கூறாது

 வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது

 தான் தொலைவு இல்லாத் தகைமையது "

எனக்கூறி, தனது கையில் இருந்த அமுத சுரபியை ஆபுத்திரனிடம்  கொடுத்து மறைந்தது.

 சிந்தா தேவியைப் போற்றுதல்

          அமுத சுரபியை பெற்ற ஆபுத்திரன்,"சிந்தா தேவியே! அழகு பொருந்திய இக்கோயிலில் நந்தா விளக்காக விளங்குபவளே! புலவர்களின் நாவில் இசையாக இருப்பவளே! தேவர்களுக்குத் தலைவியாகவும் மண்ணில் உள்ளோருக்கு மூத்தவளாகவும்   இருந்து துன்பப்படுபவர்களின் துயரத்தை போக்குபவளே!" என தேவியை வணங்கி அப்பாத்திரத்தை கொண்டு அவர்களின் பசியைப் போக்கினான். வாங்குவோரின் கை வருந்தும் படியாக மன்னுயிர் அனைத்திற்கும் உணவளித்தான். பழுத்த மரத்தை நாடி பறவைகள் வருவதுபோல ஆபுத்திரனை நாடி வந்து பசியாறி சென்றனர் பலர். ஆபுத்திரனின் புகழ் இந்திரலோகம் வரை சென்றது.

ஆபுத்திரனை காண இந்திரன் வருதல்

          ஆபுத்திரனின் செயலைக் கேள்விப்பட்டு வியந்த இந்திரன் அதனை காண்பதற்காக,  மறையவன் போல கம்பு ஊன்றி தளர்ந்த நடையுடன் ஆபுத்திரன் முன்பு வந்து "உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க" எனக் கூறினான். அதனைக் கேட்ட ஆபுத்திரன்  "பசி நோயினால் வருந்தியவர்களுடைய பசியினை தீர்த்து அவர்களுடைய இனிய முகத்தை நான் காணும்படி செய்கின்ற எனது தெய்வத்தன்மை பொருந்திய பாத்திரம் ஒன்றே எனக்குப் போதும். வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம்" எனக்கூறி, இந்திரனை அவமதித்தான். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன், கோபப்பட்டு, ஆபுத்திரனின் செருக்கினை போக்க எண்ணி 'பசிப்பிணியால் வருந்துவோர் இல்லாத நிலையை உருவாக்க விரும்பி  மழையினை பெய்வித்து, வறுமையைப் போக்கி’ அனைவருக்கும் வளத்தை கொடுத்தான். இதன் காரணமாக பசியினால் வருந்துவோர் இல்லாத நிலை அவ்வூரில் ஏற்பட்டது. பாண்டியநாட்டில் பெருமழை பொழிந்து, வயல் வளம் பெருகியதால் மக்கள் பசியில் வருத்தம் தெரியாமல் வாழ்ந்தனர். உணவு வேண்டி யாரும் ஆபுத்திரன் இடம் செல்லும் நிலை ஏற்படவில்லை. எனவே, ஆபுத்திரன் அமுதசுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சிந்தாதேவியின் ஆலயத்தை விட்டு வெளியேறி  “ஊரூர்  தோறும் உண்போர் உண்டோ” என வினவ, அதுகேட்டு  செல்வத்தில் களித்த மக்கள் ‘யார் இவன்?’ என இகழ்ந்து பேசினர். இதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் அங்கிருந்து சென்றான்.

சாவக நாட்டை நோக்கி ஆபுத்திரன் செல்லுதல்

          உணவு வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலையை கண்டு வருந்திய ஆபுத்திரனை, கப்பலில் வந்து இறங்கிய வணிகர்கள் சிலர் கண்டு  வணங்கி,

 " சாவக நல் நாட்டு தன் பெயல் மறுத்தலின்

 உன் உயிர் மடிந்தது உரவோய் "

எனக் கூறினார்கள். அதனைக் கேட்ட ஆபுத்திரன், அமுத சுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சாவக நாட்டிற்கு செல்வது இறைவனின் சித்தம் என எண்ணி சாவகம் செல்லும் கப்பலில் ஏறிப் பயணித்தான். கப்பல் மணிபல்லவத்தீவில் அருகே செல்லும்போது, பெருங் காற்று வீசியதால் மணிபல்லவத்தீவில் ஒரு நாள் பயணிகள் அனைவரும் தங்கும் நிலை ஏற்பட்டது. மறுநாள், கப்பலில் இருந்து இறங்கியவர்கள் எல்லோரும் ஏறி விட்டார்கள் என எண்ணி மாலுமி கப்பலை ஓட்டிச் சென்றுவிட்டார். மனிதர்களில் யாரும் இல்லாத தீவில் தானும் அப்பாத்திரமும் தனித்து இருப்பதை எண்ணி வருந்தினான் ஆபுத்திரன்.

கோமுகிப் பொய்கையில் அமுதசுரபியை வீசுதல்

 மணிபல்லவத் தீவில் தனித்திருந்த ஆபுத்திரன்,

" மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்

 என் உயிர் ஓம்புதல் யானோ பொறே என்

 தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்

 சுமந்து என் பாத்திரம்?"

என பாத்திரத்தை  தொழுது, எதிரே இருந்த கோமுகி என்னும் பொய்கையில்,

 " ஓர் ஆண்டு ஒருநாள் தோன்று"

எனக்கூறி வீசியது மட்டுமல்லாமல்,

" அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்

 உளர் எனில் அவர் கைப் புகுவாய் "

என வேண்டியவாறு ஆபுத்திரன் உண்ணாநோன்பு இருந்தான்.

பசுவின் வயிற்றில் மீண்டும் பிறத்தல்

          அப்பொழுது, மணிபல்லவத்தீவுக்கு வந்த அறவணஅடிகள் ஆபுத்திரனிடம் 'என்ன நடந்தது?' என கேட்க, அவன் மேற்கண்ட செய்திகளைக் கூறிவிட்டு, கிழக்கில் தோன்றிய சூரியன் மேற்கே மறைவது போல மணிபல்லவத்தீவில் தன் உடம்பை விட்டுவிட்டு, உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாவக நாட்டில் உள்ள ஒரு பசுவின் வயிற்றில் மீண்டும் பிறந்தான். என அறவண அடிகள் தானறிந்த செய்தியை மணிமேகலையிடம்  கூறினார்.

முடிவுரை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படும் ‘பாத்திர மரபு கூறிய காதையில்’, அறவணஅடிகள், மணிமேகலையிடம் ஆபுத்திரன் பெற்ற அமுதசுரபியின் தன்மையையும், பசித்தவர்களுக்கு உணவளித்த ஆபுத்திரனின் செயலையும் எடுத்துக்கூறுவதாக காணப்படுகிறது. என்பதனை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

                                                   ...........இராஜாலி............

சனி, 23 ஜூலை, 2022

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

      தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள், வாழ்வியல் கூறுகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், தமிழ் இலக்கிய வடிவத்தில் சிறுகதை இலக்கியம் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

      கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

'பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்' 

என்று உரைப்பார்.

சிறுகதைக்கான இலக்கணம்

   அரைமணி முதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பார் எட்கர் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் இருத்தல் வேண்டும். சுவைமிக்கனவாக இருத்தல் வேண்டும் என்பர், செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி, செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.

சிறுகதை தோன்றிய சூழல்

   19ம் நூற்றாண்டில்  இலக்கியத்தின் மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கியப்  பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அச்சுப்பொறியின் வருகையால் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில் வந்தது வீரமாமுனிவரின் 'பரமார்த்த குருவின் கதை' அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிடபூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்

· வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து 'வினோத ரசமஞ்சரி'என்று வெளியிட்டார்.

· வ. வே. சு.ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை சிறுகதைக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

· செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற  கதைகள்  தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.

· ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது 'குசிகர் குட்டிக்கதைகள்' ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.

· மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத்தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

· கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.

· சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது. சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.

· மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்.

இதழ்களால் வளர்ந்த சிறுகதை

   தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம்,  சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். மேலும், மணிக்கொடி இதழில், சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாக க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், சுந்தரராமசாமி, கு.அகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, கி.ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்

     இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அயல்நாடுகளில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி

    தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்பத்தில் சிறுகதை

   இதழ்களால் வளர்ந்த சிறுகதை, இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கென பல இணையதளங்களும் வலைப்பூக்களும் காணப்படுகின்றன. மேலும், அலைபேசியிலும், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.

 முடிவுரை 

       காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்ததமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக்கதை என தன் வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி அடைந்துள்ளது.

......இராஜாலி......

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...