எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை

முன்னுரை

        ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பட்டது. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான இக்காப்பியம், கோவலன் கண்ணகிக்கு பிறந்த மணிமேகலையின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதாக காணப்படுகிறது. 30 காதைகளையும் 4755 பாடல்களையும் கொண்டதாக இக்காப்பியம் விளங்குகிறது. பௌத்த சமயத்தைச் சார்ந்த இக்காப்பியம், மணிமேகலைத் துறவு, புரட்சிக் காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், கதைக்களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம் எனவும்  அழைக்கப்படுகிறது. 

பாத்திரம் பெற்ற காதை

       மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவ தீவில் விட்டுச் சென்ற பின்னர், அத்தீவை காவல் காக்கும் தீவத்திலகை என்னும் பெண் தெய்வம் மணிமேகலை முன் தோன்றியது. மணிமேகலை தனது முற்பிறவியினை  அறிந்ததை தெரிந்த பின்னர்,  புத்த பீடிகைக்கு முன் உள்ள கோமுகி பொய்கையில் காணப்படும் ஆபுத்திரனின் கையில் இருந்த அமுத சுரபியினை பெறுவதற்கான வழிகளை மணிமேகலையிடம் கூறியது. அதன் பின்னர் மணிமேகலை புத்த தேவனை வணங்கி அமுதசுரபியினை பெற்ற செய்தியை கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

மணிபல்லவத் தீவில் மணிமேகலை

       மணிபல்லவத் தீவிற்கு வந்த மணிமேகலை, மணிமேகலா தெய்வம் கூறியதன் படி புத்தரின் ஆலயத்தை வணங்கி தனது முற்பிறவியினை அறிந்து கொண்டாள்.

தீவத்திலகை வருதல் 

       மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் குளங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

          மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்

தீவதிலகை மறுமொழிக் கூறுதல்

       மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். அவளுக்கு தன்னைப் பற்றி சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. அதனை வலம் செய்து வணங்க இங்கு வந்தேன். குற்றமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் இப்பொழுது காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை அமுதசுரபியைப் பற்றி கூறுதல் 

      அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அவ்வாறு வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் குறைவு. அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். புத்தரின் அருள் பெற்ற உயர்ந்தவளே! நான் கூறுவதைக் கேட்பாயாக!

“மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும். அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது.

           'ஆங்கு அதின் பெய்த ஆர் உயிர் மருந்து

           வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

           தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்'

எனக் கூறியதோடு மேலும், இப்பாத்திரத்தின் சிறப்பினை அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

         தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

      மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசிப் பிணி மருத்துவம் 

      புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து,

            'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

            நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

           பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

           பசிப்பிணி என்னும் பாவி அது'

எனப் பசியின் கொடுமைகளை எடுத்துக் கூறி, 'இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது'  எனக் கூறினாள். 

நாய்யை தின்ற விசுவாமித்திரன் 

           தீவத் திலகை மேலும் மணிமேகலையை பார்த்து,"முன்பு ஒரு நாள், புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின. எனவே,கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர்.

           'மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

           உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

எனவே நீயும் அறநெறி வாழ்க்கையை மேற்கொண்டு, பசிப்பிணியைப் போக்கி மண்ணுயிர் வாழ வழி செய்வாயாக " என அறிவுரைகளைக் கூறினாள்.

மணிமேகலை மறுமொழிக் கூறுதல் 

     இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கினேன். அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது. மேலும், பெற்ற குழந்தையைப் பார்த்ததும் தாயின் மார்பகம் பால் சுரப்பது போல, பசியால் வாடுபவரை கண்டதும் இப்ப பாத்திரம் உணவை சுரந்தளிக்கும். அதனைக் கொண்டு பசித்தவர் பிணி களைவேன்" எனக் கூறினாள்.

வானத்தில் பறந்தாள்

         அதன் பின்னர் மணிமேகலை தீவத்திலகையின் கால்களில் விழுந்து வணங்கி, அமுத சுரபியைக் கையில் ஏந்தியவளாக புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி, மணிமேகலா தெய்வம் சொல்லித்தந்த மந்திரத்தைக் கூறி வானத்தில் பறந்து தனக்காக காத்திருக்கும் மாதவியின் முன்வந்து இறங்கினாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

     மணிமேகலையைக் கண்டதும், மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை, அவர்களிடம் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள்.

       பின்னர், 'அமுதசுரபியின் தன்மையினை அறவண அடிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்' என இருவரையும் அழைத்துக் கொண்டு அறவண அடிகளை காண்பதற்காக மணிமேகலைச் சென்றாள்.

முடிவுரை

        இவ்வாறு பாத்திரம் பெற்ற காதையில் மணிமேகலை அமுத சுரபியை மணிபல்லவத் தீவில் இருந்து பெற்று வந்த செய்தியை சீத்தலைச் சாத்தனார் கூறியுள்ளார்.

************ இராஜாலி ********



வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கம்பராமாயணம் - குகப் படலம்

 அறிமுகம்

           இராமபிரானின் வரலாற்றைக்கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராம காதையைத் தழுவி, கம்பர் இதனைத் தமிழில் இயற்றினார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப இராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு 'இராமாவதாரம்' எனப் பெயரிட்டார். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும். இவற்றில் பதின்மூன்று படலங்கள் உள்ளன. குகப்படலம் ஏழாம் படலமாகும். இப்படலத்தினைக் 'கங்கைப்படலம்' எனவும் கூறுவர். வனம் புகுந்த இராமன், குகனோடு தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியாதலின் குகப்படலம் எனப் பெயர் பெற்றது.

குகன் இராமனைக் காண வருதல்

     அலைகளையுடைய கங்கைக்கரையின் பக்கத்திலுள்ள சிருங்கி என்னும் நகரில் வாழும் வேடுவக் குலத் தலைவன் குகன். இவன் முனிவர் தவச்சாலையில் தங்கியிருந்த  வள்ளல் இராமனைக் காணத் 'தேனும் மீனும்' கொண்டு சென்றான். நெஞ்சமதில் இராமனின் மீது அளப்பரிய அன்பினைக் கொண்டு, இன்றே நின்பணி செய்திட வந்துள்ளதாக குகன் தெரிவித்தான்.

          இளையவனாகிய இலக்குவன் அவனை நெருங்கி யார் நீ? என வினவியபோது, குகன் அன்போடு வணங்கி,

"தேவா! நின்கழல் சேவிக்க வந்தனன்

நாவாய் வேட்டுவன் நாய்அடி யேன்

என "தேவா, கங்கையாற்றில் நாவாய்களை இயக்குகின்றவனும் நாயினும் அடியவனாகிய வேட்டுவன் நான், தங்களின் திருவடிகளை வணங்க வந்துள்ளேன்” என்று கூறினான்.

இராமன் குகனைப் பாராட்டுதல்

       இலக்குவன், இராமனைத் தொழுது, "வெற்றிப் பொருந்திய தலைவனே! தூய உள்ளம் உடையவன், தாயினும் சிறந்த அன்பினன், கங்கையாற்றில் செல்லும் நாவாய்களுக்குத் தலைவன், குகன் என்னும் பெயரினன், தன் உறவினருடன் தங்களைக் காண வந்துள்ளான்") என இலக்குவன் இராமனிடம் கூறினான். இராமன் குகனை, 'அழைத்து வருக' என்று இலக்குவனிடம் மொழிந்ததும், குகன் விரைந்து வந்து இராமனைத் தன் கண்களால் கண்டுகளித்தான். இருள் போன்ற நீண்ட முடியை உடைய தலை, மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான். பின் எழுந்து வாயைக் கையால் பொத்தி உடலை வளைத்து அடக்கமாக நின்றான்.

        உள்ளத்து அன்பு முதிர்வினால் எழுந்த பரிவின் காரணமாகக் குகன் கொண்டு வந்த இப்பொருள்களை (தேன், 'மீன்) அடைத்தற்கரியன என்றும் அமுதத்தை விடச் சிறந்தன என்று இராமன் கூறினான். இவை எத்தகையனவாய் இருப்பினும் அன்பு கலந்ததெனில் தூய்மையானவையே இப்பொருட்கள் நாங்கள் விரும்பி உண்டதற்குச் சமம் என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளும், உணர்வு நிலையும்

      ஆண் சிங்கத்திற்கு நிகரான இராமன் குகனிடம், "நாங்கள் இத்தவச் சாலையில் தங்கியிருந்து அலைவீசும் கங்கையாற்றைக் கடந்து செல்ல எண்ணியுள்ளோம். ஆதலால் உன் நகர் சென்று மகிழ்வுடன் இனிமையாகத் தங்கியிருந்து நாளை விடியலில் நாவாயோடு (மரக்கலங்கள்) வருவாயாக" என்றுரைத்தான்.

       கருமுகில் வண்ணனாகிய இராமன் கூறியதைக் கேட்ட குகன், "இவ்வுலகு அனைத்திற்கும் செல்வம் போன்றவனே! தங்களை இத்தவக் கோலத்தில் பார்த்த என்னிரு கண்களை எடுக்க முடியாத நிலையில் உள்ளேன். இம்மனத் துயரோடு என்னிருப்பிடம் செல்லத் துணியேன், ஐயனே! தங்களுக்கு வேண்டிய தொண்டு செய்வேன்” என்றான்.

        இராமன் இன்று எம்மோடு தங்குக எனக் குகனிடம் கூறியதும், திருவடிகளை வணங்கினான். கடலையொத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப்படைகளை அழைத்து இராமன் தங்கியுள்ள தவச்சாலைக்கு விலங்குகளால் ஏதேனும் 'துன்பம் நேரிடாதவாறு பாதுகாப்பு வழங்கிடுமாறு கட்டளையிட்டான். இடியோடு கூடிய மழை மேகம்போல உரத்த சத்தமிட்டு இராமன், சீதை, இலக்குவன் மூவரையும் காவல் செய்து நின்றான். அரச குமாரனாகிய இராமன் தரையில் உறங்கும் காட்சியைக்கண்டு மலையிலிருந்து விழும் அருவிபோல கண்ணீர் சொரிந்து நின்றான்.

நாவாய் கொண்டு வருக

   வைகறை காலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் விரும்பிச் செய்து, அச்சம் தரும் வில்லை ஏந்திய இராமன் அன்புள்ளம் கொண்ட குகனைப் பார்த்து, ஐயனே! இவ்விடத்திலிருந்து செல்வத்திற்குரிய தரம்வாய்ந்த மரக்கலங்களை (நாவாய்) விரைவாகக் கொண்டு வருவாயாக என்று கட்டளையிட்டான்.

குகனின் வேண்டுதல்

          "மாலையை அணிந்தவனே! எம் மக்கள் வஞ்சகம் அறியாது இக்காட்டில் வசித்து வருகின்றனர். எவ்வித குறைவுமின்றி, பகைவரை அழிக்கும் ஆற்றல் மிகுந்துள்ள நாங்கள் முறைப்படி உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைத் தொண்டர்களாக இருந்து முறைப்படி செய்வோம். எங்களை உம்முடைய முறையான உறவினர்கள் எனக்கருதி எங்களுடைய இவ்வூரிலே நீண்டகாலம் இனிமையாக இருப்பாயாக!" என்று குகன் இராமனிடம் வேண்டினான்.

         தேவர்கள் தூய்மையானது எனக்கருதும் தேனும், திணையும் இங்கு கிடைப்பதோடு, உண்ணுதற்குரிய புலால் (ஊன்) இங்குண்டு. எங்களுடைய உயிர் உங்களுக்குத் தொண்டு செய்யவே உள்ளன. சீதா தேவியோடு விளையாடிப் பொழுதுபோக்க காடும், நீரிலே முழுகி விளையாட கங்கையாறும் இருக்கின்றன. நான் உடன் உள்ளவரையும் நீ எம்மிடத்தில் இனிதிருப்பாயாக” என இராமனிடம் குகன் வேண்டினான்.

   "நூலாடைகள் போல உள்ள மென்மையான தோல்கள், சுவையுடைய இனிமையான பல பொருள்கள், தூங்குவதற்குக் கயிற்றால் பிணித்த தொட்டிற் கட்டில் போல பரண்கள், தங்குவதற்குக் குடில்கள் மட்டுமல்லாது, விரைந்து சென்று எதையும் கொண்டுவந்து தரவல்ல எனது கால்கள், தடுப்பாரை அழிக்கவல்ல, வில்லை ஏந்திய கைகள் எம்மிடம் உள்ளன. ஆகாயத்தின் மேலே உள்ள பொருளாக இருந்தாலும் அதனையும் விரைந்து கொண்டு வருவோம்" என்றும் குகன் வேண்டினான்.

    "தேவர்களை விட வலிமை படைத்த வில்லேந்திய ஐந்து இலட்சம் வீரர்கள் நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கின்றனர். இராமபிரானே! நீ எம் குடிசையிடத்து ஒருநாள் தங்குவாயானால் இதனைக்காட்டிலும் மேலானதொரு வாழ்க்கை இல்லை" என்று குகன் இறுதியாக வேண்டினான்.

மீண்டும் வரும்போது வருகிறேன்

   குகனின், வேண்டுதலைக் கேட்ட இராமன், கருணை மிகுந்தவனாய், வெளிப்படையாக புன்முறுவல் செய்து,

"புண்ணிய நதியாடிப் புனிதரை வழிபாடுற்று

எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிதென்றான்"

குகனே! நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, அங்குள்ள முனிவர்களை வழிபாடு செய்துவிட்டு, வனவாசத்துக்குக் குறித்த சில நாள்களில், உன்னிடத்துக்கு இனிமையாக வந்து சேர்வோம்” என்று கூறினான்.

      இராமனின் மனக்குறிப்பை அறிந்த குகன் மிக விரைவாகச் சென்றான். பெரியதோர் படகினைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமன் அந்தணர்களிடம் விடைபெற்று, பிறைநிலவு போன்ற நெற்றியை உடைய சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் படகில் இனிதாக ஏறினான்.

நிறைவுரை

      விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவதுபோலக் குகனும் படகினை விரைவாகச் செலுத்தினான். மடங்கி வீழும் அலைகளை உடைய கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதினைப் போன்று படகு சென்றது. அவர்களின் பிரிவால் அனலில் பட்ட மெழுகைப்போல துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றனர்.

********* இராஜாலி **********

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - எளிய உரை

  அதிகாரம்  1    கடவுள் வாழ்த்து