எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

இயேசு காவியம் - ஊதாரி மைந்தன் கதை

 நூல் குறிப்பு

  1981.ஆம் ஆண்டு வெளிவந்த இயேசு காவியம், கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டதாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கதை வடிவில் கூறும், இக்காவியம் கண்ணதாசனின் 'இறவாக் காவியம்' என அழைக்கப்படுகிறது. 149 தலைப்புகளில், 5 பாகங்களாக இக்காப்பியம் காணப்படுகிறது.

ஊதாரி மைந்தன் கதை

 இயேசு கிறிஸ்து பாவிகளை நேசித்து, அவர்களோடு விருந்துண்டு மகிழ்வதைக் கண்ட சீடர்கள், இயேசு நாதரிடம் அதற்கான காரணம் கேட்க, அதற்கு இயேசுநாதர் இறைவன் எனும் அன்புத் தந்தையின் இதயம் எத்தகையது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூற 'ஊதாரி மைந்தன் கதையினை' பின்வருமாறு கூறுகிறார்.

தந்தைக்கு இரு மைந்தர்கள்

    ஒரு தந்தைக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். அதில் மூத்தவன் தந்தை சொல் கேட்டு நடப்பவன்.  இளையவன் ஊதாரியாக திரிந்தவன். ஒருநாள், இளையவன் தந்தையிடம் வந்து 'தன்பாக சொத்துகளை பிரித்து தர வேண்டும்'  எனக் கேட்டான். வருந்திய தந்தை வேறு வழியில்லாது சரிபாதி சொத்தை பகிர்ந்து அளித்தார். தன் மகன் விருப்பப்படி வாழட்டும் என தந்தை கொடுத்ததை பார்த்து அண்ணன் வருந்தினான்.

இளைய மகன் செல்வத்தை இழத்தல்

     தனது பாகத்தைப் பெற்ற இளைய மகன், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்று வெளி நாட்டிற்குச் சென்று நண்பர்களோடு சேர்ந்து மதுவோடும் மாதுவோடும் இணைந்து மனம் போன போக்கில் செலவுகளை செய்து சிறிது நாளிலே செல்வத்தை இழந்து தெருவில் நின்றான்.

பன்றிகளின் உணவை உண்ணுதல்

     அப்பொழுது அந்நாட்டில் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. வாழ வழி தெரியாமல் இளைய மகன் அங்குமிங்கும் அலைந்தான். ஒரு செல்வந்தரின் பன்றிகளை மேய்க்கும் வேலையினைப் பார்த்தான். பன்றிக்கும் அவனுக்கும் ஒரே உணவு கொடுக்கப்பட்டது. வேறு வழி இன்றி அதனை உண்டு காலத்தைக் கழித்தான்.

இளைய மகன் சிந்தை தெளிதல்

   தந்தையை விட்டு வந்து பல துன்பங்களை அனுபவித்த இளைய மகன் சிந்தை தெளிந்தான். தன் தந்தையை நாடிச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். தன் வீட்டை நோக்கிச் சென்றான். இவனுக்காகவே காத்திருந்த தந்தையை கண்டான். அவர் காலில் விழுந்து, 

 உன் வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய் 
 உன் பிள்ளை என்று சொலத் தகுதியில்லை காப்பாய் 

 எனக் கண்ணீர் விட்டு அழுதான்.

தந்தையின் செயல்

      தந்தையும் உடனே 'அப்பா என் மகனே' என அன்போடு தழுவி வீட்டு பணியாளர்களை அழைத்து

 யாரங்கே பணியாள்வா பட்டாடை நகைகள்
 அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்
 பேர் சொல்லும் மகனுக்குப் பெருங்கன்றின் கறிகள்
 பிழையாமல் செய்யுங்கள் விரைவில்

 எனக் கட்டளையிட்டார்.

மூத்த மகனின் செயல்

     மாலையில் மூத்த மகன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் ஆடல் பாடல் கொண்டாட்டம் நிகழ்வதைக் கண்டான். வீதியில் நின்றபடியே 'என்ன சத்தம்?' எனக் கேட்டான். பணியாளர் ஒருவர்' உங்கள் தம்பி வந்துள்ளார்.' எனக் கூறவே ஆத்திரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

   இதனைக் கண்ட தந்தை அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல வந்தான். மூத்த மகன் ஆத்திரத்தில் தந்தையிடம்

 உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்
 ஒரு நாளும் எனக்கென்று விருந்து வகை உண்டா? 

என வருத்தத்தோடு கேட்டான்.

 தந்தையின் ஆறுதல் வார்த்தைகள்

    மூத்த மகனின் வருத்தமான வார்த்தைகளைக் கேட்ட தந்தை,

 என்னோடு என்றும் நீ இருப்பவனே யன்றோ!
 என் செல்வம் எந்நாளும் உன்னுடைய தன்றோ!
 உன் தம்பி இறந்தபின் உயிர்பெற்று வந்தான்!
 உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

எனக்கனிவுடன் கூறினார். அதனைக் கேட்டு மூத்த மகன் சமாதானமடைந்து வீட்டுக்குள் சென்றான்.

 முடிவுரை

       என்ற கதையினை இயேசு நாதர் சீடர்களுக்கு கூறி பாவிகளை நேசிக்க வேண்டும் என அறிவுரை கூறியதாக இயேசு காவியத்தில் கண்ணதாசன் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

பத்துப்பாட்டு நூல்கள்

முன்னுரை

   சங்க இலக்கியங்களில் ஒரு பிரிவான பத்துப்பாட்டு, 10 தனி பாடல்களைக் கொண்டதாகும். பத்து புலவர்களால் பாடப்பட்ட நூல் தொகுப்பு. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நெறியையும் அக, புற ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்துப்பாட்டு இலக்கியங்களில்  சிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்கள்


      பத்துப்பாட்டு நூல்கள் எவை, என்பதைப் பற்றி பழம்பாடல் ஒன்று கூறும் போது,

        முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
        பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
        கோலநெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
        பாலை கடாத்தொடும் பத்து - எனக் குறிப்பிடுகிறது.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வகையை சார்ந்த இலக்கியங்கள் ஐந்து காணப்படுகின்றன. மேலும், அகம் சார்ந்த இலக்கியங்கள் மூன்றும், புறம் சார்ந்த இலக்கியம் ஒன்றும், அகப்புறம் சார்ந்த இலக்கியம்கள் ஒன்று என ஆக பத்து இலக்கியங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.

பத்துப்பாட்டில் காணப்படும் ஆற்றுப்படை நூல்கள்.

       ஆற்றுப்படுத்துதல் என்பது 'வழிகாட்டுதல்' ஆகும். பரிசு பெற்று வரும் பாணன் அல்லது கூத்தன் தன் எதிரே வரும் இன்னொரு ஏழை பாணன் அல்லது கூத்தனை பார்த்து தனக்கு பரிசளித்த மன்னரின் சிறப்புகளை எடுத்துக் கூறி, அவரிடம் சென்று பரிசுகளை பெற்றுக் கொள்ளும் படி வழிகாட்டுவதாக அமைவது. ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். அவ்வகையில் பத்துப்பாட்டில்,

  • திருமுருகாற்றுப்படை,
  • பொருநராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்.

ஆகிய ஐந்து இலக்கியங்களும் ஆற்றுப்படை வகையைச் சார்ந்தவை ஆகும்.

திருமுருகாற்றுப்படை

    நக்கீரர் என்னும் புலவர் பாடியது திருமுருகாற்றுப்படை. இந்நூல், 317அடிகளைக் கொண்டது. இதனை 'முருகு' என்றும் 'புலவராற்றுப்படை' என்றும் கூறுவர். முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு. அவனின் அருள் பெற்ற அடியவர் ஒருவர், தன் எதிரே வரும் இன்னொரு அடியவரை பார்த்து முருகப்பெருமானின். அறுபடை வீடுகளில் சிறப்புகளையும், முருகப்பெருமானின் பெருமைகளையும், எடுத்துக் கூறி அவரிடம் ஆற்றுப்படுத்துவதாக. அமைந்தது திருமுருகாற்றுப்படை ஆகும். குறிப்பாக, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனின் தோற்றப் பொலிவை சிறப்பித்து கூறுவதோடு, திருச்செந்தூரில் இருக்கும் முருகப்பெருமானின் ஆறு முகங்களையும் 12 கைகளையும் சிறப்பித்து கூறுகிறது. மேலும், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை போன்ற அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் சிறப்புகளை எடுத்துக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பொருநராற்றுப்படை

 கரிகால் பெருவளத்தான் சிறப்புகளை, முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. குறிப்பாக, கரிகால் பெருவளத்தான் இடம் பரிசில் பெற்று வரும் பொருநர் ஒருவன் தன் எதிரே வரும் இன்னொரு பொருநரை, கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக, இந்நூல் காணப்படுகிறது. 384 அடிகளைக் கொண்ட இந்நூல், கரிகாலனின் சிறப்பை கூறுவதோடு. பொன்னி நதியின் சிறப்பையும். வெண்ணிப் பறந்தலையில் நடைபெற்ற போரையும் கூறுவதாகக் காணப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படை

  ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் மன்னனின் சிறப்புகளை. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது, சிறுபானாற்றுப்படை ஆகும் 269 அடிகளைக் கொண்ட, ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல், சிறுபாணன் ஒருவன் நல்லியக்கோடன் என்னும் மன்னனிடம் சென்று பரிசு பெற்று வரும் செய்தியையும், தன் எதிரே வரும் இன்னொரு பாணனை மன்னன் பால் ஆற்றுப் படுத்துவதாகவும் இந்நூல் காணப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை

  500 அடிகளைக் கொண்ட இந்நூல், தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனின் சிறப்புகளை, அவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் பெரும்பாணன் ஒருவன், மற்றொரு பெரும்பாணனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக,  உருத்திரகண்ணனார் என்னும் புலவர் பாடியுள்ளார். யாழைப் பற்றிய வர்ணனை, ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் ஒழுக்கங்கள், தொண்டைமான் இளந்திரையனின் கொடைத்திறன், ஈகை பண்பு, வீரம் போன்றவற்றைக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்

   ஆற்றுப்படை நூல்களில் மிகப்பெரியதாக காணப்படும் இந்நூல் 583 அடிகளைக் கொண்டது. பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், தன் எதிரே வரும் இன்னொரு கூத்தனை தனக்கு பரிசளித்த மன்னனிடம்  ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் காணப்படுகிறது. குறிப்பாக, நன்னன்சேய்நன்னன் என்னும் மன்னனிடம் பரிசுப் பெற்று திரும்பும் கூத்தன், தன் எதிர்வரும் கூத்தனிடம் மன்னனுடைய சிறப்புகளையும் அவனுடைய பண்புகளையும், வீரத்தையும் கூறுவதாகப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர்  பாடியுள்ளார். குறிப்பாக, நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழியில் தன்மை. நாட்டின் பெருமை மழைவளம், சோலை அழகு போன்றவையும், நவிர மலையின் சிறப்பு, சேயாறு போன்றவற்றின் வளம் ஆகியவற்றை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள்

  பத்துப்பாட்டில் அகக்கருத்துக்களைக் கூறும் நூல்களாக முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை  ஆகிய மூன்று நூல்களும் காணப்படுகின்றன.

முல்லைப்பாட்டு

  பத்துப்பாட்டு நூல்களிலேயே, மிகவும் சிறிய நூலாகக் காணப்படுவது முல்லைப்பாட்டு ஆகும். இதில் 103 அடிகளில் காணப்படுகின்றன. ஆசிரியப்பாவால் ஆன இந்நூலைப் பாடியவர் நப்பூதனார். முல்லைத் திணைக்குரிய, உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பாடப்பட்டதாக்கும். போருக்குச் சென்ற தலைவன், கார் காலம் வந்த பின்பும் திரும்பாததை கண்டு வருந்திய தலைவியின் துயரத்தையும், போர்க்களத்தில் தலைவன், படைகளை ஆயத்தம் செய்த நிலையையும், பாசறையில் இருந்து சிந்தித்து நிலையையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டு

   கபிலரால் பாடப்பட்ட குறிஞ்சிப்பாட்டு, 261 அடிகளைக் கொண்டது. ஆரிய மன்னன் 'பிரகதத்தன்' என்பவனுக்கு தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறுவதற்காக, இந்நூல், பாடப்பட்டது. இந்நூலை, 'பெருங்குறிஞ்சி' என நச்சினார்கினியார் பாராட்டுகிறார். வரையாது வந்து ஒழுகும் தலைமகனின் வரவு ஒருநாள் தடைபட்டது. அது, தலைவிக்கு வருத்தத்தை கொடுத்தது. இது கண்ட செவிலி துன்புற்றார். இருவருக்குமிடையில் தோழி அறத்தொடு நின்றாள். தலைவி தோழிகளோடு புனலாட சென்று, பூக்களைக் கொய்து அவற்றை வைத்து விளையாடுகிறாள். குறிப்பாக 99 வகையான மலர்களை இந்நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

பட்டினப்பாலை

    301 அடிகளைக் கொண்ட பட்டிணப்பாலை. 'வஞ்சி நெடும்பாட்டு' எனவும் வழங்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்புகளைப் பாடுவதாக இந்நூல் காணப்படுகிறது. காவிரி கடலோடு கலக்கும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும், கரிகால் பெருவளத்தான் பெருமையையும் கூறுவதோடு, காவிரிபூம்பட்டினம் கடற்கரையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் பொருள்களைப் பற்றிய செய்தியும் இந்நூலில் விரிவாகப் பேசப்படுகிறது.

பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்

  பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது.

மதுரைக்காஞ்சி

    பத்துப்பாட்டில் மிகவும் பெரியதாகக் காணப்படும் மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புகளையும், அவருடைய வீரத்தையும், கொடைப்பண்பையும் மாங்குடி மருதனார் என்னும் புலவர்  பாடியுள்ளார்.  இதனை 'பெருகு வளமதுரைக் காஞ்சி' என புகழ்வர். இதற்கு. 'கூடற்றமிழ்' என்ற பெயரும் உண்டு. மதுரை மாநகரத்தின் சிறப்பையும், அல்லங்காடி, நாளங்காடி என்ற வணிக ஸ்தலங்களின் பெருமையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது. மேலும், வைகை ஆற்றில் சிறப்பு இந்நூலில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூல்கள்

   பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூலாக நெடுநல்வாடை காணப்படுகிறது.

நெடுநல்வாடை

  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது நெடுநல்வாடை. 188 அடிகளைக் கொண்ட இந்நூல், தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு வாடைக்காற்று துன்பத்தை கொடுத்த செய்தியையும், தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்தில் மேற்கொண்ட உத்திகளைப் பற்றி  கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

முடிவுரை

   பத்துப்பாட்டு நூல்களில், பத்து தனிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை சங்க கால மக்களின் வாழ்வியல் கூறுகளையும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும்  அக்கால மன்னர்களின் ஈகை மற்றும் வீரத்தையும் கூறுவதாகக் காணப்படுகின்றன.

***** இராஜாலி*****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...