எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 2 ஜூலை, 2024

தமிழ் இலக்கண நூல்கள் - ஓர் அறிமுகம்

      எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண மரபினைக் கொண்டது தமிழ் மொழி. தமிழ் மொழியின் இலக்கண மரபு காலத் தொன்மையானது. அத்தகைய தமிழ் இலக்கணத்தினை பல்வேறு இலக்கண ஆசிரியர்கள் நூல்களாக படைத்துள்ளார்கள். அவற்றில்,

தொல்காப்பியம்
இறையனார் களவியல் உரை
நம்பியகப் பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
தண்டியலங்காரம்
யாப்பருங்கலக் காரிகை 
போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

தொல்காப்பியம்

ஆசிரியர் - தொல்காப்பியர்
பிரிவுகள் - 3 ( எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்)
இயல்கள் - 27 (3×9=27)
சூத்திரங்கள்- 1610
காலம்- கி.மு  முதல் நூற்றாண்டு  

நூல் வரலாறு

    இதுவரையில் கிடைக்கப்பெற்ற தமிழ் நூல்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம். ஐந்து இலக்கணங்களைக் கூறும்  இந்நூல், அகத்தியம் யார்த்த  அகத்தியரின் மாணவர்களின் ஒருவராக கருதப்படும் தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியர் என்பது காரணப்பெயராகக் கருதப்படுகிறது. தொன்மையான தமிழ் மரபுகளை கூறும், தொன்மைக் காப்பியமான தொல்காப்பியத்தைப் படைத்ததால் அப்பெயர்  பெற்றதாகக் கூறுவர்.
   இந்நூல், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில், அதங்கோட்டு  ஆசான் முன்னிலையில் அரங்கேற்றியதாக இந்நூலிற்கு சிறப்புப்பாயிரம் பாடிய பனம்பாரனார்  கூறியுள்ளார். தொல்காப்பியத்தின் காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்றும், கி.மு மூன்றாம் நூற்றாண்டு என்றும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டு என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இறையனார் களவியல் உரை என்னும் இலக்கண நூல் தொல்காப்பியம், இடைச்சங்கத்திற்கும் கடைச் சங்கத்திற்கும் இலக்கண நூலாக விளங்கியது எனக் கூறுவதன் மூலம்  இதன் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என உறுதியாகக் கூறலாம்.

நூல் அமைப்பு

    சூத்திரயாப்பில் அமைந்த தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. அதிகாரங்களுக்கு 9 இயல்கள் வீதம் 27 இயல்களும் 1610 சூத்திரங்களும் இந் நூலில் இடம் பெற்றுள்ளன.

    எழுத்ததிகாரத்தில், தமிழ் எழுத்துக்களின் வகை தொகைகள், எழுத்துக்களின் பிறப்பியல்புகள், வரி வடிவம், புணர்ச்சி விதிகள் போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

  சொல் அதிகாரத்தில் திணைப் பாகுபாடுகள், வேற்றுமை உருபுகள், சொல்லின் வகைகள் போன்றவை விரிவாக கூறப்பட்டுள்ளது.

 தமிழுக்கே சிறப்பாக அமையும் பொருளதிகாரத்தில் அகப்பொருள் புறப்பொருள் பற்றியும், அகத்திணை புறத்திணை வகைகளையும் வகுத்துக் கூறுவதோடு செய்யுள் இயலில் யாப்பிலக்கண உறுப்புகளையும், உவமை இயலில் அணி இலக்கண மரபுகளையும் கூறுவதாக தொல்காப்பியம் காணப்படுகின்றது.

இறையனார் களவியல் உரை 

 ஆசிரியர்- இறையனார்
 பிரிவுகள்- 2 ( களவியல், கற்பியல்)
 நூற்பாக்கள் - 60 (33+27=60) 
 காலம்- கி.பி முதலாம் நூற்றாண்டு ( கடைச்சங்க காலம் )

 நூல் வரலாறு

     கடைச்சங்க காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சியின் போது தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை இல்லாத வற்கடம் என்ற கொடும் பஞ்சம் நிலவியது. புலவர்களும் சான்றோர்களும் பஞ்சம் நீங்கும் வரை வேறு தேசம் சென்று திரும்பும் படி மன்னன் அனுப்பி வைக்கிறான். அதன்படி வெளியேறிய புலவர்கள், பஞ்சம் நீங்கியதும் சில ஓலைச்சுவடிகளை எடுத்துக்கொண்டு பாண்டிய நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் கொண்டு வந்த தொல்காப்பிய ஓலைச்சுவடியில் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் இருந்தது. பொருள் அதிகாரம் இல்லாததால் மன்னன் வருந்தினான். மன்னன் மதுரை சொக்கநாதர் இடம் வருந்தி முறையிட்டான். மறுநாள் சொக்கநாதரின் பீடத்தில் இறையனார் களவியல் என்ற பெயரில் 60 நூற்பாக்களைக் கொண்ட செப்பேடு ஒன்று கிடந்தது. அதற்கு 49 கடைச் சங்கப் புலவர்களும் உரை எழுதினார்கள். எந்த உரை சிறந்த உரை என மன்னனுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதற்கு இறைவன்" உப்பூரிக்குடியில் உருத்திரசன்மன் என்ற பெயரில் ஊமை ஒருவர் இருப்பதாகவும், அவர் எந்த உரையைக் கேட்டு கண்ணீர் நீர் வடிக்கிறாரோ அந்த உரையே சிறந்த உரை" என அசரீரியாக கூறிச் சென்றார். அதன்படி நக்கீரர் உரையே சிறந்த உரையாக பாண்டிய மன்னன் தேர்வு செய்தான் என்பது வரலாறு.

 நூல் அமைப்பு

   இறையனார் அகப்பொருளில் 33 நூற்பாக்களைக் கொண்ட களவு என்ற பிரிவும்,27 நூற்பாக்களைக் கொண்ட கற்பு என்ற பிரிவும் காணப்படுகிறது. மொத்தம் 60 நூற்பாக்களைக் கொண்ட இந்நூலில் தான் மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறு காணப்படுகின்றது.

நம்பியகப் பொருள்

 ஆசிரியர்- நற்கவிராச நம்பி 
 பிரிவுகள்- 5
 நூற்பாக்கள் - 252
 காலம் - கி.பி 12 ஆம் நூற்றாண்டு 

 நூல் வரலாறு 
 
  தொல்காப்பியத்திற்கு வழி நூலாகவும், சார்பு நூலாகவும் விளங்குவது நம்பியாகப் பொருள் என்னும் இந்நூலாகும். இந்நூல் கி.பி 12ஆம் நூற்றாண்டில் நற்கவிரசநம்பி என்பவரால் இயற்றப்பட்டது. 

 நூல் அமைப்பு

     நம்பியகப் பொருள் அகத்திணையில், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. இந்நூலில் 252 நூற்பாக்கள் காணப்படுகின்றன.

 இந்நூலில் ஐந்திணைப் பாகுபாடுகள், களவியல் இலக்கணங்கள், எண் வகைத் திருமணங்கள், கற்பியல் கூறுகள் போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

புறப்பொருள் வெண்பாமாலை 

 ஆசிரியர் - ஐயனாரிதனார் 
 பிரிவுகள் -12 படலங்கள்
 சூத்திரங்கள்- 341
 காலம் - எட்டாம் நூற்றாண்டு

 நூல் வரலாறு

      காலத்தால் அழிந்து போன பன்னிரு படலம் என்னும் இலக்கண நூலின் வழி நூலாக விளங்கும் புறப்பொருள் வெண்பாமாலையை சேர மரபில் வந்த ஐயனாரிதனார் என்பவர் இயற்றியுள்ளார். இவரின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது எனக் கருதுவர். கா.சு. பிள்ளை அவர்கள் கி.பி எட்டாம் நூற்றாண்டு என உறுதிப்படக் கூறுகிறார்.
    ஐயனாரிதனார் இந்நூலுக்கு வெண்பாமாலை எனப் பெயரிட்டார். பின்னாளில் புற இலக்கணத்தை விரிவாகக் கூறுவதால் புறப்பொருள் வெண்பாமாலை என அழைக்கப்பட்டது.

 நூல் அமைப்பு

 இந்நூல் புறப்பொருளை 12 படலமாக பகுத்துக் கூறுகிறது. வெண்பா நிலையில் அமைந்த 341 சூத்திரங்கள் காணப்படுகின்றன.அவற்றின் பொருள் கூறும் கொளுக்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் புறத்திணைகள் பன்னிரண்டையும் விரிவாகக் கூறுவதோடு அவற்றின், துறைகளையும் வகுத்துக் கூறுகின்றது.

நன்னூல்


 ஆசிரியர் - பவணந்தி முனிவர் 
 பிரிவுகள் - 3
 நூற்பாக்கள் - 462
 காலம் - பன்னிரண்டாம் நூற்றாண்டு 

 நூல் வரலாறு

 தொல்காப்பியத்தின் வழி நூலான நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர் ஆவார். கி.பி 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த இவர், எழுத்ததிகாரம், சொல் அதிகாரம் ஆகிய இரண்டிற்கு மட்டும் இலக்கணம் கூறியுள்ளார்.

 நூல் அமைப்பு

 எழுத்ததிகாரம், சொலதிகாரம் ஆகிய இரண்டிற்கும் இலக்கணம் கூறும் இந்நூல் மூன்று பிரிவுகளைக் கொண்டது.இதில் பாயிரத்தில் 55 நூற்பாக்களும், எழுத்ததிகாரத்தில் 202 நூற்பாக்களும், சொல்லதிகாரத்தில் 205 நூற்பாக்களுமாக 462 நூற்பாக்கள் காணப்படுகின்றன.

 மேலும் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து ஐந்து இயல்கள் காணப்படுகின்றன. எழுத்து, சொல் ஆகியவற்றின் இலக்கணம் இந் நூலில் விரிவாகவும் எளிமையாகவும் கூறப்பட்டுள்ளது.


 தண்டியலங்காரம் 


 ஆசிரியர்- தண்டி 
 பிரிவுகள் - 3 
 நூற்பாக்கள் - 125
 காலம் - பன்னிரண்டாம் நூற்றாண்டு 

 நூல் வரலாறு

   ஐந்திலக்கணங்களில் ஒன்றான அணி இலக்கணத்தினைப் பற்றி கூறும் நூல் தண்டியலங்காரமாகும். இது கி.பி 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டி என்னும் புலவரால் இயற்றப்பட்டது. வடமொழியில் உள்ள 'காவிய தரிசனம்' என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

 நூல் அமைப்பு

    தண்டியலங்காரம், பொதுவணியியல், பொருள் அணியியல், சொல் அணியியல் என்னும் மூன்று பிரிவுகளையும் 125 நூற்பாக்களையும் கொண்டதாகும்.

யாப்பெருங்கலக் காரிகை 

 ஆசிரியர்- அமிர்தசாகர் 
 பிரிவுகள்- 3 இயல்கள்
 நூற்பாக்கள் - 44 
 காலம்- பதினோராம் நூற்றாண்டு 

 நூல் வரலாறு

    கி.பி பதினோராம் நூற்றாண்டில் தீபக்குடியில் வாழ்ந்தவர் அமிர்தசாகர் என்னும் சமணர் ஆவார். அவரால் இயற்றப்பட்டது யாப்பெருங்கலக் காரிகை என்னும் நூலாகும். இது,யாப்பிலக்கணத்தினை பற்றி கூறுகின்றது.

 நூல் அமைப்பு

    ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பிலக்கணத்தினைப் பற்றி கூறும் நூல் யாப்பெருங்கலக் காரிகை, இது உறுப்பு,செய்யுள், ஒழிபு என்ற மூன்று இயல்களையும் 44 கட்டளைக் கலித்துறை நூற்பாக்களையும் கொண்டதாகும்.

   மேற்கண்ட இலக்கண நூல்கள் ஏழும் தமிழ் மொழியில் காணப்படும் ஐந்திலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவற்றை விரிவாக எடுத்துக் கூறும் நூல்களாக விளங்குகின்றன.

******* இராஜாலி *******

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஜல்லிக்கட்டு காளை மல்லுக்கட்டும் காளையர்

கலித்தொகையில் ஏறுதழுவுதல்...

        சங்க காலத்தில் ஏறுதழுவுதல் என்பது ஆண்மகனின் வீரத்தை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாகக் கருதப்பட்டது. ஆண்களின் வீரத்தை விரும்பிய பெண்கள் தங்களோடு வளர்ந்த காளையை அடக்கும் வீரனையே கரம் பிடிப்பதாக உறுதியேற்று இருந்து, அவ் வீரன் வந்து காளையை  அடக்கி கைத்தலம் பற்றும் நிகழ்வு சங்க கால மக்களின் வாழ்வியலில் காணப்பட்டுள்ளது என்பதற்கு கலித்தொகை பாடல் 102 சான்றாக அமைகிறது.

     கலித்தொகையில், முல்லைக் கலி பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் என்ற மன்னர் ஆவார். அவர் சங்க கால தலைவியை தலைவன் ஏறு தழுவி மணமுடித்த செய்தியை பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்.

     மழை பொழிந்து ஓய்ந்த அழகிய கார்கால  மாலைப் பொழுதில் தலைவன் தோழனோடு இயற்கை காட்சிகளை கண்ணுற்றவனாக அக்காட்டுப் பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறான். அவ்விடத்தில் துள்ளி விளையாடும் மான்களைப் போல தலைவி தன் தோழிகளோடு சேர்ந்து பிடவம், தளவம், தோன்றி, கொன்றை போன்ற பல வகையான மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து கழுத்திலும், தலையிலும் அணிந்து மகிழ்ச்சி ததும்ப, தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள். துள்ளி விளையாடும் தலைவியின் அழகில் மயங்கிய தலைவன் தோழனைப் பார்த்து,

"இவள் யார் உடம்போடு என் உயிர் புக்கவள்"

எனக் கேட்கிறான். தலைவன் காட்டிய தலைவியைப் பார்த்த தோழன், 'ஓஒ.. இவளா? தான் வளர்க்கும் காளையை  யார் அடக்குகிறார்களோ அவரே, என் மெய் தீண்ட  தகுதியானவர்கள். என்ற உறுதியோடு இருப்பவள்' எனக் கூறுகிறான். எத்தனைக் கேட்டு புன்முறுவல் செய்த தலைவன்,  " உடனே சென்று, அவள் சுற்றத்தாரை கண்டு, 'ஏறு தழுவும் விழாவிற்குப் பறை அறைக!' மேலும், திருமண நிகழ்வுக்கு ஆயத்தம் செய்ய சொல்" எனத் தோழனைப் பார்த்துக் கூறினான்.

  தலைவியின் பெற்றோரிடம் தலைவனின் கருத்தைக் கூறினான் தோழன். தலைவியின் பெற்றோர்களும், சுற்றத்தாரும் இணைந்து ஏறுதழுவதற்கு  தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள். அதன்படி, ஏறுதழுவும் இடத்தில்  பரண் அமைக்கப்பட்டது. ஏறு தழுவுதல் தொடங்கியது. தலைவி தனது சுற்றத்தாருடன் அதில் அமர்ந்து ஏறு தழுவுதலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீறிவரும் காளையினை காளையர்கள் பலர் எதிர்கொண்டு அடக்க முயன்றனர். அப்பொழுது,

எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்

அவர்களுள் தலைவன் மலர் மாலை அணிந்த மார்புடன் காளையின் முன் தோன்றி, சீறி வரும் காளையின் இமிலை  பிடித்து வளைத்து காளையினை அடக்கினான்.  இதனைப் பார்த்த தலைவியின் சுற்றத்தார் மகிழ்ந்து அதிசயத்து, " நேற்று நடந்த ஏறுதழுவுதலில் இந்தக் காளை ஒரு வீரனின் மார்பை குத்திப் பிளந்தது. அதனைத் தெரிந்திருந்தும் இக்காளையை அடக்கிய  இவனே உண்மையான வீரன்". என வீரனின் செயலை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு,கேட்ட தலைவி நாணம் கலந்த புன்னகை  புரிந்தாள். தலைவனின் கண்ணில் நிறைந்தாள் தலைவி. அங்கு திருமண விழாவுக்கான  தண்ணுமை முரசு முழங்கியது.

     என ஏறு தழுவி தலைவியை தலைவன் அடைந்த செய்தியினை கலித்தொகையில்  சோழன் நல்லூருத்திரன் காட்சிப்படுத்தியுள்ளார்.

!!!! இராஜாலி!!!!


திருக்குறள் - கடவுள் வாழ்த்து - எளிய உரை

  அதிகாரம்  1    கடவுள் வாழ்த்து