எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 3 அக்டோபர், 2024

பதினெண் சித்தர்கள் - ஓர் அறிமுகம்

'சித்தர்’ என்ற  சொல்லுக்கு       சித்தி  பெற்றவர் என்பது பொருள்.  சிவத்தை நினைத்து   அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, எண்    பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் ஆவர்.

சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.

இப்படி பெருமைமிகு சித்தர்களில், பதினெட்டு சித்தர்கள் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை பதினெண் சித்தர்கள் என்றும் அழைக்கின்றோம். 

1. அகத்தியர்:

சித்தர்-சித்த வைத்தியம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருபவர் அகத்திய மாமுனி தான். பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். அகத்தியர் சித்தர்கெல்லாம் சித்தராக அருள்பாலித்தவர். தமிழ் முனி, கும்ப முனி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டார். அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்திய ரத்னாகரம், போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றார். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதினார். அகத்தியர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

2. திருமூலர்:

இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முந்தையது. இவரால் அருளப்பட்ட திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு இவர் திருமந்திர மாலை என்ற பெயர். இதனை தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கின்றனர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் ஜீவசமாதி அடைந்தார்.

3. போகர்:

பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவரை நவபாஷானங்களை கொண்டு செய்து வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.இவர், போகர் நிகண்டு, போகர் ஏழாயிரம், போகர் கற்பம், போகர் வாசியோகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும் அனைவராலும் போற்றபடுகின்றார்.போகர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.

4. இடைக்காடர்:

இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவர் வருடாதி மருத்துவம், தத்துவப் பாடல்கள், ஞானசூத்திரம் எழுபது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் உலக இயல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் என்ற பொது அடிப்படைக் கருத்தைக் கொண்டது. இவர் தன் “வருடாதி வெண்பா” என்னும் நூலில், இந்த 60 வருடங்களுக்கும் மழை, வெய்யில் மற்றும் காலநிலை எப்படி இருக்கும் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்.இடைக்காடர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.

5. கமலமுனி:

இவருக்கு பிரம்மனே எல்லா வகைச் சித்துகளையும் நேரில் வந்து உபதேசித்தார் என்று கூறுவர். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் எழுதியதாக கூறப்படுகிறது. இவர் யோக ஞானத்தால் அஷ்டமா சித்திகளை பெற்றவர். சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். கமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருவாரூரில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

6. கருவூரார்:

தஞ்சை பெரிய கோவில் உருவாகியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. நெல்லையப்பரும், காந்திமதியம்மையாரும் இவருக்கு நடனக்காட்சி காட்டியருளியுள்ளனர். கருவூரார் வாத இலக்கியம், வைத்தியம் ஐநூறு, யோக ஞானம் ஐநூறு, கருவூரார் பலதிரட்டு, பூஜா விதி, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், கற்ப விதி, மெய்ச் சுருக்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கருவூரார் சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது சமாதி கருவூரில் (தற்போதைய கரூர்) உள்ளது.

7. கோரக்கர்:

கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. வட நாட்டில் “நவநாத சித்தர்” என்ற சித்தர்கள் தொகுதியின் தலைமை சித்தராக இவரை போற்றுகின்றனர்.vசந்திரரேகை இருநூறு, கோரக்கர் கண்ணசூத்திரம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.

8. குதம்பை:

இவர் ஞான மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது பாடலில் “குதம்பாய்” என்று பலமுறை வரும். “குதம்பை” என்று விளித்துப்பாடல் இசைத்ததாலேயே இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இவர் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததால் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார். . இவர் மாயவரத்தில் சமாதியடைந்தார். 

9. பாம்பாட்டி:

இவர் தன் தவவலிமையால் சிவபெருமானின் ஆட்டத்தைக் காண்பவர் என்பதால் இவர் கூறும் பாடல் யாவற்றிலும் “ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியுள்ளதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற மாற்று கருத்தும் இருக்கின்றது. வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன இவர் எழுதிய பாடல்களாகும். பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் சங்கரன்கோயிலில் சமாதியடைந்தார். 

10. சட்டைமுனி:

இவர் ஈழ நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார். எப்போதும் கம்பளத்தில் மேலாடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். இவர் சட்டைமுனி நிகண்டு 1200, வாதகாவியம் 1000, சரக்குவைப்பு 500, நவரத்தின வைப்பு 500, வாக்டம் 200, முன்ஞானம் பின் ஞானம் 200, கற்பம் 100, உண்மை விளக்கம் 51 உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார். சட்டைமுனி சித்தர் ஆவணி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருவரங்கத்தில் சமாதியடைந்தார். 

11. சிவவாக்கியர்:

“சிவ சிவ” என்று சொல்லியபடி இவர் பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்படுகிறார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவர் தன் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாக்கியம்’ என்று அழைக்கப்படுகிறது. நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. இவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. இவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. போகர் தனது சப்த காண்டத்தில் சிவவாக்கியார் தை மாத மக நட்சத்திரத்தில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார். சிவவாக்கியருக்கு கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருக்கோவிலில் ஜீவசமாதி உள்ளது.

12. சுந்தரானந்தர்:

இவர் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார். வைத்திய திரட்டு, காவியம், விஷ நிவாரணி, வாக்கிய சூத்திரம், கேசரி, சுத்த ஞானம், தீட்சா விதி, அதிசய காரணம், சிவயோக ஞானம், மூப்பு, தாண்டகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.bசுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் மதுரையில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. 

13. கொங்கணர்:

கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். கொங்கணர் வாதகாவியம் 3000, முக்காண்டங்கள் 1500, தனிக்குணம் 200, வாதசூத்திரம் 200, தண்டகம் 120, ஞான சைதன்னியம் 109, சரக்கு வைப்பு 111, கற்ப சூத்திரம் 100, வாலைக்கும்பி 100, ஞானமுக்காண்ட சூத்திரம் 80, ஞான வெண்பா சூத்திரம் 49, ஆதியந்த சூத்திரம் 45, முப்பு சூத்திரம் 40, உற்பத்தி ஞானம் 21, சுத்த ஞானம் 16 ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருப்பதியில் ஜீவசமாதியடைந்தார்.

14.வான்மீகர்:

வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப்படுகின்றார். போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூறு ஆண்டுகள் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும். உலகிற்கு இராமாயணத்தை தந்ததாகவும், தமிழ் புலமை மிக்கவர் என்றும், காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகின்றார். வான்மீகர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார். மேலும் இவரது மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சன்னதியில் தீர்த்தகுளத்தின் அருகே சமாதி கொண்டுள்ளார்.

15. மச்சமுனி:

இவர் பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர். நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டு அஷ்டமாசித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். மச்சமுனி சூத்திரம், மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30, மச்சமுனி பெரு நூல் காவியம் 800, மச்சமுனி வைத்தியம் 800 , மச்சமுனி கடைக் காண்டம் 800, மச்சமுனி சரக்கு வைப்பு 800, மச்சமுனி திராவகம் 800, மச்சமுனி ஞான தீட்சை 50, மச்சமுனி தண்டகம் 100, மச்சமுனி தீட்சா விதி 100, மச்சமுனி முப்பு தீட்சை 80, மச்சமுனி குறு நூல் 800, மச்சமுனி ஞானம் 800, மச்சமுனி வேதாந்தம் 800, மச்சமுனி திருமந்திரம் 800, மச்சமுனி யோகம் 800, மச்சமுனி வகாரம் 800, மச்சமுனி நிகண்டு 400, மச்சமுனி கலை ஞானம் 800, மாயாஜால காண்டம் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவருடைய ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. 

16. பதஞ்சலி:

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர் என்று கூறப்படுகிறது. இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார். வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டவர். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார். இவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் இராமேஸ்வரத்தில் ஜீவசமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. 

17. இராமதேவர்:

பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக சிறப்பிக்கப்படும் இராமதேவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தார். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயின்றவர். அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாத பெருமானை வணங்கி, தாம் அரபு நாடுகளில் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார். இராமதேவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார். இராமதேவர் சித்தர் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் அழகர்மலையில் ஜீவசமாதியடைந்தார்.

18. தன்வந்திரி:

தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுவதுடன் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். இவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதியடைந்ததாக  சொல்லப்படுகிறது.

மேலும் பல சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததற்கான குறிப்புகள் சித்தர் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

***** இராஜாலி *****

வியாழன், 5 செப்டம்பர், 2024

சமயக் காப்பியங்கள் - அறிமுகம்


முன்னுரை

       தமிழ்மொழியில் சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. குறிப்பாக, ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் சமணம் மற்றும் பௌத்த சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் காப்பியங்கள் ஆகும்.  பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம் போன்ற  சமயங்களில் கருத்துக்களையும், போதனைகளையும் வெளிப்படுத்தும் காப்பியங்கள்  பல தோன்றியுள்ளன. அத்தகைய காப்பியங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

வைணவ சமயக் காப்பியங்கள் 

     திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள் வைணவர்கள் எனப்பட்டனர். அவர்கள் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தும் காப்பியங்களில் குறிப்பிடத்தக்கவை, கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்றவை ஆகும்.

1. கம்பராமாயணம்

     கம்பராமாயணம் ஒரு வைணவ சமயக் காப்பியம். கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்ட இக்காப்பியம், தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தழுவி தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர். இக்காப்பியம் கம்பநாடகம், கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. 

     கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

     கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆதித்தன். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். கம்பர், இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

 2.வில்லிபாரதம் 

      கிபி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் இயற்றிய காப்பியம் வில்லிபாரதம் ஆகும். மகாபாரதத்தின் சுருக்கமாக இக்காப்பியம் காணப்படுகிறது. இதில் 10 பருவங்களும்,4337 பாடல்களும் காணப்படுகின்றன. இது வைணவ சமயக் காப்பியமாகக் கருதப்படுகிறது.

சைவ சமயக் காப்பியங்கள் 

 சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டார்கள். சைவ சமய கருத்துக்களை வெளிப்படுத்தும்  காப்பியங்களில் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 

1.பெரியபுராணம்

       பெரிய புராணம்  12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. சைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டு  பெரியபுராணம் இயற்றப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது. பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

  இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில், சேக்கிழார் குடியில் தோன்றிவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர். சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன், சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான். இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

 2.திருவிளையாடல் புராணம்

   மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை மையமாகக் கொண்டு பாடப்பட்டது  திருவிளையாடல் புராணமாகும்.  இந்நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.இதில் மூன்று காண்டங்களும்,68 படலங்களும் 3363 பாடல்களும் காணப்படுகின்றன. இது ஒரு சைவ சமயக் காப்பியம் ஆகும்.

3.கந்தபுராணம் 

    சைவ சமய சார்புடைய இப்புராணம்,வடமொழியில் காணப்படும் பதினெண் புராணங்களில் ஒன்று. இதனைப் பாடியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இதில், ஆறு காண்டங்களும், 135 படலங்களும்,10345 பாடல்களும் காணப்படுகின்றன.  

இஸ்லாமிய காப்பியங்கள்

   இஸ்லாமிய சமயக் காப்பியங்கள் பல தமிழ் மொழியில் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது சீறாப்புராணம் என்னும் காப்பியமாகும். 

சீறாப்புராணம்

   முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியங்களில் ஒன்று சீறாப்புராணம் ஆகும். இக்காப்பியத்தை கிபி 16 ம் நூற்றாண்டில்  இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. 

   இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 92 படலங்களும், 5027 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

  இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்

கிறிஸ்தவ சமயக் காப்பியங்கள் 

     கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளை வலியுறுத்தி தமிழ் காப்பியங்கள் பல தோன்றின, அவற்றில் குறிப்பிடத்தக்கவை இயேசு காவியம், தேம்பாவணி போன்றவையாகும்.

1.இயேசு காவியம்


     இயேசு காவியம் என்னும் இக்காப்பியம், இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். திருச்சி கலைக்காவிரி என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இக்காவியத்தைப் படைத்தார் என்பர். 

    இக்காப்பியம், 5 பாகங்களையும், 149 அதிகாரங்களையும் கொண்டதாகும். 4729 அடிகள் இக்காபியத்தில் காணப்படுகின்றன. 1982-ஆம் ஆண்டு அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் M. G. ராமச்சந்திரன் அவர்களால் வெளியிடப்பட்டதாகும். 

கண்ணதாசன்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர்.

2.தேம்பாவணி

 கிறிஸ்தவ காப்பியங்களில் சிறந்ததாகக் கருதப்படும் தேம்பாவணி, கி.பி 17 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரால் பாடப்பட்டதாகும். இக்காப்பியம், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது பாடப்பட்டதாகும்.

 தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது.ஒவ்வொரு காண்டங்களிலும் 12 படலங்கள் வீதம் 36 படலங்களை கொண்டது. இக்காப்பியத்தில் 3615 பாடல்கள் காணப்படுகின்றன.

வீரமாமுனிவர்

 இத்தாலிய நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவ மதப் போதகர். இயேசு சபை என்னும் அமைப்பின் சார்பாக, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காக 1710 இல் தமிழகத்திற்கு வந்தார். தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்து, 23 தமிழ் நூல்களைப் படைத்துள்ளார். தமிழில் 4400 சொற்களைக் கொண்ட  முதல் அகரமுதலி  மற்றும் சதுர அகராதி போன்றவற்றைப் படைத்துள்ளார்.

பகுத்தறிவு காப்பியங்கள்

   இருபதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் தமிழ் மொழியில் பகுத்தறிவு சிந்தனைகள் தாங்கிய இலக்கியங்கள் பல தோன்றின. அவற்றில் குறிப்பிடத்தக்கது இராவண காவியம் என்பதாகும்.

 இராவண காவியம்

   இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இது ஒரு பகுத்தறிவு காப்பியமாகக் கருதப்படுகிறது. 

புலவர் குழந்தை

   இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார். 

 முடிவுரை 

   சமயக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமயச் சான்றோர்கள் பலர் தங்கள் சமயம் சார்ந்த கருத்துக்களையும், கொள்கை கோட்பாடுகளையும் இலக்கியங்களாகப் படைத்துள்ளனர். அவ்வகை  இலக்கியங்கள் யாவும் தமிழ் மொழியின் சிறப்புக்கு மணி மகுடமாக விளங்குகின்றன.

 

***** இராஜாலி *****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...