எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 5 செப்டம்பர், 2024

சமயக் காப்பியங்கள் - அறிமுகம்


முன்னுரை

       தமிழ்மொழியில் சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. குறிப்பாக, ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் சமணம் மற்றும் பௌத்த சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் காப்பியங்கள் ஆகும்.  பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம் போன்ற  சமயங்களில் கருத்துக்களையும், போதனைகளையும் வெளிப்படுத்தும் காப்பியங்கள்  பல தோன்றியுள்ளன. அத்தகைய காப்பியங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

வைணவ சமயக் காப்பியங்கள் 

     திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள் வைணவர்கள் எனப்பட்டனர். அவர்கள் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தும் காப்பியங்களில் குறிப்பிடத்தக்கவை, கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்றவை ஆகும்.

1. கம்பராமாயணம்

     கம்பராமாயணம் ஒரு வைணவ சமயக் காப்பியம். கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்ட இக்காப்பியம், தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தழுவி தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர். இக்காப்பியம் கம்பநாடகம், கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. 

     கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

     கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆதித்தன். காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றது. இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். கம்பர், இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

 2.வில்லிபாரதம் 

      கிபி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் இயற்றிய காப்பியம் வில்லிபாரதம் ஆகும். மகாபாரதத்தின் சுருக்கமாக இக்காப்பியம் காணப்படுகிறது. இதில் 10 பருவங்களும்,4337 பாடல்களும் காணப்படுகின்றன. இது வைணவ சமயக் காப்பியமாகக் கருதப்படுகிறது.

சைவ சமயக் காப்பியங்கள் 

 சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டார்கள். சைவ சமய கருத்துக்களை வெளிப்படுத்தும்  காப்பியங்களில் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 

1.பெரியபுராணம்

       பெரிய புராணம்  12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. சைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டு  பெரியபுராணம் இயற்றப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றது. பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

  இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில், சேக்கிழார் குடியில் தோன்றிவர். இயற்பெயர் அருண்மொழித் தேவர். சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன், சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான். இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

 2.திருவிளையாடல் புராணம்

   மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை மையமாகக் கொண்டு பாடப்பட்டது  திருவிளையாடல் புராணமாகும்.  இந்நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.இதில் மூன்று காண்டங்களும்,68 படலங்களும் 3363 பாடல்களும் காணப்படுகின்றன. இது ஒரு சைவ சமயக் காப்பியம் ஆகும்.

3.கந்தபுராணம் 

    சைவ சமய சார்புடைய இப்புராணம்,வடமொழியில் காணப்படும் பதினெண் புராணங்களில் ஒன்று. இதனைப் பாடியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இதில், ஆறு காண்டங்களும், 135 படலங்களும்,10345 பாடல்களும் காணப்படுகின்றன.  

இஸ்லாமிய காப்பியங்கள்

   இஸ்லாமிய சமயக் காப்பியங்கள் பல தமிழ் மொழியில் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது சீறாப்புராணம் என்னும் காப்பியமாகும். 

சீறாப்புராணம்

   முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியங்களில் ஒன்று சீறாப்புராணம் ஆகும். இக்காப்பியத்தை கிபி 16 ம் நூற்றாண்டில்  இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. 

   இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 92 படலங்களும், 5027 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

  இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்

கிறிஸ்தவ சமயக் காப்பியங்கள் 

     கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளை வலியுறுத்தி தமிழ் காப்பியங்கள் பல தோன்றின, அவற்றில் குறிப்பிடத்தக்கவை இயேசு காவியம், தேம்பாவணி போன்றவையாகும்.

1.இயேசு காவியம்


     இயேசு காவியம் என்னும் இக்காப்பியம், இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். திருச்சி கலைக்காவிரி என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இக்காவியத்தைப் படைத்தார் என்பர். 

    இக்காப்பியம், 5 பாகங்களையும், 149 அதிகாரங்களையும் கொண்டதாகும். 4729 அடிகள் இக்காபியத்தில் காணப்படுகின்றன. 1982-ஆம் ஆண்டு அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் M. G. ராமச்சந்திரன் அவர்களால் வெளியிடப்பட்டதாகும். 

கண்ணதாசன்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர்.

2.தேம்பாவணி

 கிறிஸ்தவ காப்பியங்களில் சிறந்ததாகக் கருதப்படும் தேம்பாவணி, கி.பி 17 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரால் பாடப்பட்டதாகும். இக்காப்பியம், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது பாடப்பட்டதாகும்.

 தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது.ஒவ்வொரு காண்டங்களிலும் 12 படலங்கள் வீதம் 36 படலங்களை கொண்டது. இக்காப்பியத்தில் 3615 பாடல்கள் காணப்படுகின்றன.

வீரமாமுனிவர்

 இத்தாலிய நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவ மதப் போதகர். இயேசு சபை என்னும் அமைப்பின் சார்பாக, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காக 1710 இல் தமிழகத்திற்கு வந்தார். தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்து, 23 தமிழ் நூல்களைப் படைத்துள்ளார். தமிழில் 4400 சொற்களைக் கொண்ட  முதல் அகரமுதலி  மற்றும் சதுர அகராதி போன்றவற்றைப் படைத்துள்ளார்.

பகுத்தறிவு காப்பியங்கள்

   இருபதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் தமிழ் மொழியில் பகுத்தறிவு சிந்தனைகள் தாங்கிய இலக்கியங்கள் பல தோன்றின. அவற்றில் குறிப்பிடத்தக்கது இராவண காவியம் என்பதாகும்.

 இராவண காவியம்

   இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இது ஒரு பகுத்தறிவு காப்பியமாகக் கருதப்படுகிறது. 

புலவர் குழந்தை

   இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார். 

 முடிவுரை 

   சமயக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமயச் சான்றோர்கள் பலர் தங்கள் சமயம் சார்ந்த கருத்துக்களையும், கொள்கை கோட்பாடுகளையும் இலக்கியங்களாகப் படைத்துள்ளனர். அவ்வகை  இலக்கியங்கள் யாவும் தமிழ் மொழியின் சிறப்புக்கு மணி மகுடமாக விளங்குகின்றன.

 

***** இராஜாலி *****

செவ்வாய், 16 ஜூலை, 2024

கலித்தொகை - அன்னாய்! இவனொருவன் செய்தது காண்

நூல் குறிப்பு 

 எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகை 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என சிறப்பித்துக் கூறும் சிறப்பினை உடையது. அக கருத்துக்களை கூறும் 150 பாடல்களைக் கொண்டது. இதில் 11 அடி முதல் 80 அடி வரையிலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்து திணைகளுக்கும் உரிய பாடல்களை ஐந்து புலவர்கள் பாடியுள்ளார்கள். இந்நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார்.

குறிஞ்சிக்கலி 

 கலித்தொகையின் குறிஞ்சிக்கலி பாடல்களைப் பாடியவர் கபிலர் ஆவார். குறிஞ்சிக் கலியில் 29 பாடல்கள் காணப்படுகின்றன.

அன்னாய்! இவனொருவன் செய்தது காண்



துறை விளக்கம் 

    தலைவன் உணவு வேளையில் தலைவியின் மனையில் புகுந்து 'உண்ணுநீர் வேட்டேன்' என வேண்ட தலைவி தலைவனுக்கு நீர் கொடுக்கிறாள். அந்த நிகழ்ச்சியினை தோழிக்கு கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 பாடல் விளக்கம்

  தலைவி தோழியைப் பார்த்து "ஒளி வீசும் வளைகளை அணிந்தவளே! ஒரு செய்தி சொல்கிறேன், கேள். தெருவில் நாம் கட்டி விளையாடும் மணல் வீட்டைக் காலால் எற்றி அழித்து, தலையில் பொருந்திய பூமாலையை இழுத்து அறுத்து, சித்திரம் எழுதிய நமது பந்தைப் பறித்துக்கொண்டு ஓடி - இவ்வாறெல்லாம் நாம் வருந்தும்படி வன்மை செய்யும் அந்தச் சிறுபட்டி, அன்று ஒரு நாள் நானும் அன்னையும் வீட்டில் இருந்த பொழுது வந்து, வாயிலில் நின்று, “வீட்டினுள் இருப்போரே! நான் நீர்வேட்கை கொண்டேன்” என்று கூவினான். அன்னை பொற்செம்பில் நீர் ஊற்றி, "அவனுக்குக் கொடுத்துப் பருகச் செய்க” என்றாள். வந்தவன் அந்தப் பட்டிதான் என்று அறியாமல், தண்ணீர் கொண்டு சென்றேன். அவன் என்கையை, வளைகளோடு சேர்த்து இறுகப் பிடித்து இழுத்தான். யான் திடுக்குற்று அஞ்சி, “அம்மா! இவன் செய்த செயலைப் பார்” என்று கூவினேன். அன்னையும் அலறிக் கொண்டு ஓடிவர, யான் நடந்ததை மறைத்து, "தண்ணீர் பருகியபோது விக்கினான்” என்றேன். அன்னை அதை நம்பி, அவனை, "மெல்லவே பருகலாகாதா? என்று கோபித்துக் கொண்டு, அவனது தொண்டையைத் தடவி விட்டாள். (அவள் அறியாமல்) அந்தக் கள்ளன் கடைக்கண்ணாலேயே என்னைக் கொன்றுவிடுபவனைப் போலப் பார்த்தான். இத்தகைய அவனது குறும்பால் ஒரு மகிழ்ச்சி தரும் சந்திப்பு நடந்தது." எனக் கூறுவதாக குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடியுள்ளார். 

**** இராஜாலி ****

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - எளிய உரை

  அதிகாரம்  1    கடவுள் வாழ்த்து