எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 2 செப்டம்பர், 2026

முதுமொழிக்காஞ்சி - எளிய பத்து

 


நூல் குறிப்பு

 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில், அறக்கருத்துக்களைக் கூறும் நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி ஆகும். மதுரை கூடலூர் கிழார் என்பவரால் பாடப்பட்ட இந்நூல், குறள் தாழிசை என்னும் பா வகையால் ஆனது.  10 அதிகாரங்களையும் அதிகாரங்களுக்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்களையும் கொண்டது. பாடல்களின் முதல் அடி "ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்" என்று தொடங்குவதாக அமைந்தது நூலின் சிறப்பாகும்.

எளிய பத்து 

 முதுமொழிக்காஞ்சி எட்டாவது பத்தாக விளங்குவது எளிய பத்து என்பதாகும். இதில் வாழ்க்கைக்குத் தேவையான எளிய கருத்துக்களைத் தொகுத்துக் கூறியுள்ளார்.

 கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் எவை எவை எளிதில் வந்தடையும் என்பதை கூடலூர் கிழார் கூறும்போது..

"புகழுடைய அறச்செயலை யார் செய்கிறார்களோ, அவர்கள் விண்ணாடு எனப்படும் சொர்க்கத்தை அடைவது எளிது"

"எப்பொழுதும் கலகத்தை விரும்புபவர்களுக்கு துன்பம் தரும் போர் எளிதில் உண்டாகும்"

" இரக்கக் குணம் உடையவர்களுக்கு ஈகைப்பண்பு எளிதாகும்."

"முயற்சியால் உண்டாகும் துன்பத்தை விரும்புபவர்களுக்கு, இன்பம் எளிதாக கிடைக்கும் "

" இன்பத்தை மட்டும் விரும்பி இருப்பவர்களுக்கு துன்பம் எளிதில் வந்து சேரும்."

" அதிகப்படியான உணவை விரும்புபவர்களுக்கு, பல வகையான நோய்கள் எளிதில் வந்து சேரும். "

" பெண்கள் மீது மோகம் கொண்டு திரிபவர்களுக்கு, பழிச்சொற்கள் வந்து எளிதில் சேரும். "

" பிறர் துன்பம் கண்டு வருந்துபவர்களுக்கு, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பது எளிதாகும். "

" நல்ல நண்பர்களின் தொடர்பு இல்லாதவர்களுக்கு, கொலை குற்றம் எளிதில் வந்து சேரும். " 

 இவை போன்று எளிதில் மனிதர்களை வந்தடையும் நன்மை, தீமைகளை எளிய பத்தில் மதுரை கூடலூர் கிழார் தொகுத்துக் கூறியுள்ளார்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

நாலடியார் - கல்வியின் சிறப்பு




நூல் குறிப்பு 

 பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்களில் முதன்மையானது  நாலடியார் ஆகும். சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட இந்நூல், 'நாலடி நானூறு', 'வேளாண் வேதம்', என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. திருக்குறளைப் போன்று முப் பிரிவுகளைக் கொண்டது. 400 வெண்பாக்களால் ஆன இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார் என்பவர் ஆவார். "நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"  என்ற அடிகள் இதன் சிறப்பை உணர்த்தும். G.U.போப் என்பவர் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

கல்வி

நாலடியாரில் கல்வி என்னும் அதிகாரத்தில் கல்வியின் சிறப்பு, பயன்கள், கல்வியின் அவசியம் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கல்வியே அழகு!

சமுதாயத்தை மேம்படுத்தும் ஆற்றல் உடையது கல்வி. ஒருவரின், கருமையான தலைமுடியும், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையும், மஞ்சள் நிற மேனியும், உண்மையான அழகு ஆகாது. அவருக்கு, அறநெறியில் நடுவுநிலைமை தவறாமல் வாழ்கின்றோம் என்ற பெருமையைக் கொடுக்கும் சிறந்த கல்வியே உண்மையான அழகாகும்.   என்பதை நாலடியார்,

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு                                (நாலடி - 131)

எனக் கூறுகின்றது. 

மேலும் கல்வியின் சிறப்புகளை பற்றி நாலடியார் கூறும் போது,

  • சிறந்த கல்வியானது ஒருவர் இப் பிறவியில் பெற்ற பிறவிப் பையனை அடைய செய்யும். தான் பெற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுத்தாலும் குறையாத தன்மை கொண்டதாக இருக்கும். கற்றவரின் புகழை உலகறியச் செய்யும். அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாக  கல்வி விளங்கும்.
  • களர் நிறத்தில் விளைந்த உப்பை சான்றோர்கள் உயர்வாகக் கருதுவார்கள். அது போல கற்று அறிந்த ஒருவர் தாழ்ந்த குடியில் பிறந்து இருந்தாலும் மற்றவர்களால் மதிக்கப்படுவார்.
  • ஒருவர் பெற்ற கல்வியை மற்றொருவரால் திருடிச் செல்ல முடியாது. அரசாலும் அரசர்களாலும் அக்கல்வியை அபகரித்துக் கொள்ள முடியாது. ஒருவர் தன் குழந்தைக்கு விட்டுச் செல்லும் உயர்ந்த செல்வம் கல்வி மட்டுமே ஆகும்.
  • மனிதர்களின் ஆயுள் காலம் மிகக் குறைவாக உள்ளது. ஆனால் கற்க வேண்டிய நூல்களோ கடலளவு உள்ளன. எனவே, அவற்றில் சிறந்த நூல்களைக் கண்டறிந்து அவற்றைக் கற்றறிதல் வேண்டும். 
  • படகோட்டியின் குலத்தின் தன்மையை அறிந்து யாரும் பயணம் செய்வது இல்லை. அவன் எந்த குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவனைத் துணைக் கொண்டு படகு பயணம் செய்வார். அதுபோல் கற்றறிந்த சான்றோர்கள் யாராக இருந்தாலும் அவர் கூறும் நற்கருத்துக்களை கேட்டு அறிதல் வேண்டும்.
  • கரும்பின் நுனியில் இருந்து உண்டால் அடிப்பகுதிச் செல்லச் செல்ல கரும்பின் சுவை கூடிக் கொண்டே செல்வது போல, நல்ல நூல்களைக் கற்றறிந்த சான்றோர்களின் நட்பானது இனிமையானதாகவும், ஆழமானதாகவும் மாறும்.
  • தண்ணீர் நிறைந்த குடத்தில் பாதிரி பூவை சேர்க்கும் போது அத்தண்ணீர் முழுவதும் வாசம் வீசுவதைப் போல, கற்றவரோடு நட்புக் கொண்டால் அறிவு வளர்ச்சி அடையும்.
  • வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களை மட்டுமே கற்காமல், மெய்ஞான அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடி கற்க வேண்டும். அதுவே உண்மையான அறிவு வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
என்பன போன்ற சிறந்த கருத்துக்களை  நாலடியார், கல்வி என்னும் அதிகாரத்தில் எடுத்துக் கூறுகின்றது. 

***** இராஜாலி*****


வெள்ளி, 24 ஜூலை, 2026

நின்ற திருத்தாண்டகம் - முதல் மூன்று பாடல்கள்


 எங்கும் நிறைந்த இறைநிலை: நின்ற திருத்தாண்டகம்

முகவுரை

சைவச் சமயக் குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) தேவாரம் பாடிச் சைவ நெறியை வளர்த்தவர். தாண்டகம் எனும் பாவகையை மிகச் சிறப்பாகப் பாடியதால் "தாண்டக வேந்தர்" என்றும் போற்றப்படுகிறார். அவரது ஆறாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ‘நின்ற திருத்தாண்டகம்’ பாடல்கள், சிவபெருமானின் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையையும், உலகம் மற்றும் உயிர்களாக அவனே வீற்றிருக்கும் அத்வைதத் தத்துவத்தையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கின்றன.

1. அட்டமூர்த்தியாகவும் முக்காலமாகவும் திகழும் இறைவன்

நின்ற திருத்தாண்டகத்தின் முதல் பாடல், இறைவனின் 'அட்டமூர்த்தி' (எட்டு வடிவங்கள்) தத்துவத்தையும், காலத்தைக் கடந்த தன்மையையும் விளக்குகிறது.

ஐம்பூதங்களும் உயிரும்: இறைவன் நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களாகவும்; சூரியன், சந்திரன் மற்றும் உயிராகிய ஆன்மா ஆகிய எட்டு வடிவங்களில் இயங்குகிறான். மற்றும் உலகத்தில் உள்ள நன்மை மற்றும் தீமை,ஆண் மற்றும் பெண், தன்னுடைய உருவம் மற்றும் பிறரின் உருவம் என அனைத்திலுமே இறைவனே உறைகிறான்.

காலத்தின் வடிவம்:நேற்று, இன்று, நாளை எனும் முக்காலங்களின் வடிவமாகவும் செஞ்சடையுடைய சிவபெருமானே திகழ்கிறான்.

 என முதற் பாடல் இறைவனின் தன்மைகளைக் கூறுகிறது.

2. அறிவாகவும் அருவமாகவும் திகழும் பேரொளி

இரண்டாம் பாடல், இறைவன் பருப்பொருட்களாக மட்டுமன்றி, மனிதனின் உணர்வாகவும், அறிவாகவும், நுண்பொருளாகவும் வீற்றிருப்பதை விவரிக்கிறது.

இயற்கையும் மணிகளும்: மண்ணாகவும், விண்ணாகவும், மலையாகவும் திகழும் இறைவன்; அரிய வைரமாகவும், மாணிக்கமாகவும் மிளிர்கிறான்.

உணர்வும் அறிவும்:உடலுக்குக் கண்ணாகவும், அக்கண்ணிற்குள் இருக்கும் கருமணியாகவும் இருக்கிறான். மேலும், கலைகளாகவும் (கல்வி), அக்கலைகளின் மெய்ஞ்ஞானப் பொருளாகவும் (அறிவு) விளங்குகிறான்.

எண்ணும் எழுத்தும்: பிரளயக் காலத்தைக் கடந்த பேரண்டமாகவும், கணிதத்தின் எண்ணாகவும், மொழியின் எழுத்துமாகவும் ஓங்கி உயரும் ஜோதிச் சுடராய் வீற்றிருக்கிறான்.

 என இரண்டாவது பாடல் இறைவனின் இயல்புகளை எடுத்துக் கூறுகிறது. 

3. உயிர்கட்கு ஆதாரமான உலகப் பெருஞ்சுடர்

மூன்றாம் பாடல், இயற்கை, தாவரங்கள், மொழியமைப்பு மற்றும் உலக உயிர்களின் வாழ்வாதாரமாக இறைவன் திகழும் நிலை பற்றிப் பேசுகிறது.

இயற்கையின் கூறுகளும் தாவரங்களும்: கல், களர்நிலம், காடு, காவிரி நதி, வாய்க்கால், உப்பங்கழி போன்ற நீர்நிலைகளாகவும்; புல், புதர், பூண்டு போன்ற தாவரங்களாகவும் இறைவனே உருவெடுத்துள்ளான்.

வீரமும் சொல்லும்: ஆணவத்தை குறிக்கும் திரிபுரங்களை அழித்த இறைவன்; நாம் பேசும் சொல்லாகவும், அச்சொல்லின் ஆழ்ந்த பொருளாகவும், சூலாயுதத்தின் சுழற்சியாகவும் திகழ்கிறான்.

வாழ்வாதாரம்: உலக உயிர்கள் வாழத் தேவையான நெல்லாகவும், நிலமாகவும், நீராகவும் ஆதாரமாகி, ஓங்கி நிமிர்ந்த பேரொளிச் சுடராய் இறைவனின் திருவடிகள் நிலைபெற்றுள்ளன.

 என மூன்றாவது பாடல் இறைவனின் தன்மைகளை விளக்குகிறது.

முடிவுரை

திருநாவுக்கரசரின் இந்நின்ற திருத்தாண்டகப் பாடல்கள், "சிவபெருமானைத் தவிர வேறு எந்தப் பொருளும் உலகத்தில் இல்லை"என்ற உயரிய மெய்யியலைத் தெளிவுபடுத்துகின்றன. உலகத்தில் உள்ள நல்லவை, கெட்டவை, உயிரினங்கள், இயற்கையின் மாறுபாடுகள், அறிவு, மொழி என அனைத்தும் இறைவனின் வடிவங்களே என்பதை உணர்த்தி, எவ்வுயிரையும் இறைவனாகக் கருதி அன்பு செய்ய வேண்டும் என்ற உயரிய சிந்தனையை இக்கவிதைகள் நமக்குக் கற்பிக்கின்றன.

***** இராஜாலி*****

வெள்ளி, 17 ஜூலை, 2026

பிற நீதி நூல்கள்

 



பிற நீதி நூல்கள்

தமிழ் இலக்கியத்தில் சங்க காலத்திற்குப் பிறகும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பிறகும், பிற்காலச் சோழர் காலம் மற்றும் நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் எளிய தமிழில் பல அரிய வாழ்வியல் நீதி நூல்கள் தோன்றின. அவற்றில், சிறந்தப் பத்து நீதி நூல்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பிற நீதி நூல்கள்

1.  ஆத்திச்சூடி

2.  கொன்றை வேந்தன்

3.   மூதுரை

4.   நல்வழி

5.  அறநெறிச்சாரம்

6.   வெற்றி வேற்கை

7.   நீதிநெறி விளக்கம்

8.   நன்னெறி

9.  உலக நீதி

10. நீதிநூல்

1.ஆத்திச்சூடி

ஆசிரியர்: ஔவையார். (12 -ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்து நீங்கலாக 109 ஒற்றை வரிப் பாடல்கள்

நூல் குறிப்பு: தமிழின் உயிர் எழுத்துக்கள் மற்றும் உயிர்மெய் எழுத்துக்களின் அகரவரிசையில், அமைந்த மிக எளிமையான தொடக்கநிலை நீதி நூல் இது. "அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்" போன்ற எளிய கருத்துக்களைச் சிறுவர்கள் எளிதில் மனப்பாடம் செய்து ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொள்ளும் வகையில் மிகச் சுருக்கமாக இயற்றப்பட்டது. சிவபெருமானின் ஆத்திப் பூ மாலையைக் குறிப்பிட்டுத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது.

2. கொன்றை வேந்தன்

 ஆசிரியர்: ஔவையார். (12 -ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்து நீங்கலாக 91 இருசீர் ஓரடிப் பாடல்கள்.

நூல் குறிப்பு: ஆத்திச்சூடியைப் போலவே அகரவரிசையில் அமைந்த ஓரடி நீதி நூல். ஆனால், இது சற்றே வளர்ந்த பிள்ளைகளுக்கான உலகியல் நெறிகளையும் குடும்ப ஒழுக்கங்களையும் போதிக்கிறது. "அன்னையும் பிதாவும் முன்னணித் தெய்வம்", "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" போன்ற புகழ்பெற்ற வாழ்வியல் பழமொழிகள் இந்நூலில்தான் இடம்பெற்றுள்ளன. கொன்றை மலர் அணிந்த சிவனைப் போற்றித் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது.

3. மூதுரை

 ஆசிரியர்: ஔவையார். (12 -ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்து உட்பட மொத்தம் 31 வெண்பாக்கள் (4 வரிப் பாடல்கள்).

 நூல் குறிப்பு: மூதுரை என்பதற்கு 'மூத்தோர் கூறும் அறிவுரை' என்று பொருள். இந்நூலுக்கு 'வாக்குண்டாம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எளிய உவமைகளின் மூலம் ஆழமான தத்துவங்களையும், கல்வியின் சிறப்பையும், செய்நன்றி அறிதலையும் பதின்பருவத்தினருக்கும் பெரியவர்களுக்கும் எடுத்துரைக்கும் உன்னத நூல்.

 

4. நல்வழி

ஆசிரியர்: ஔவையார். (12 -ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்து நீங்கலாக மொத்தம் 40 வெண்பாக்கள்.

நூல் குறிப்பு: மனிதன் தன் வாழ்வில் நேர்மையான நல்வழியில் நடப்பதற்கான முதிர்ந்த அறக்கருத்துக்களைக் கொண்ட நூல். விதியின் பயன், வறுமையின் கொடுமை, ஈகையின் சிறப்பு ஆகியவற்றை இது விரிவாகப் பேசுகிறது. உலகில் "கொடுப்பவர் உயர்ந்த சாதி, கொடாதவர் தாழ்ந்த சாதி" என இரண்டே சாதிகள்தான் உண்டு எனப் புரட்சிகரமாக உரைத்த நூல் இதுவே ஆகும்.

5. அறநெறிச்சாரம்

ஆசிரியர்: முனைப்பாடியார் (13-ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்து நீங்கலாக மொத்தம் 225 வெண்பாக்கள்.

நூல் குறிப்பு: 'அறநெறிகளின் திரண்ட பிழிவு (சாரம்)' என்பது இதன் பொருள். சமண சமயத் துறவியான முனைப்பாடியார் இதனை இயற்றினாலும், இது மதக் கோட்பாடுகளைத் தாண்டி மனித குலத்திற்கான பொதுவான ஒழுக்கங்களை வலியுறுத்துகிறது. வாய்மை, இன்சொல் பேசுதல், புலனடக்கம், மற்றும் இல்லறத்தில் பெண்களின் மாண்பு ஆகியவற்றை மிக விரிவாக எடுத்துரைக்கும் பெரிய நீதி நூல் இதுவாகும்.

6. வெற்றி வேற்கை

ஆசிரியர்: அதிவீரராம பாண்டியன் (கொற்கை நாட்டு அரசர் / புலவர், 16-ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்து உட்பட மொத்தம் 85 அடிகள்

நூல் குறிப்பு: இந்நூலுக்கு 'நறுந்தொகை' என்ற மற்றொரு பெயரும் உண்டு. "வெற்றி வேற்கை வீரர் பாவை..." எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது. மன்னர் குலத்தைச் சேர்ந்தவர் எழுதியதால், இதில் கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றுடன் சமுதாய அமைப்புகள், அரச நெறிமுறைகள், சான்றோர்களை மதித்தல் மற்றும் எளியோரைத் தாழ்த்தக் கூடாது போன்ற சமூக யதார்த்தங்கள் மிகவும் கூர்மையாக, எளிய அடிகளில் விளக்கப்பட்டுள்ளன.

7. நீதிநெறி விளக்கம்

ஆசிரியர்: குமரகுருபரர் (17-ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட மொத்தம் 102 வெண்பாக்கள்.

நூல் குறிப்பு: திருமலை நாயக்க மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க, திருக்குறளின் ஆழமான அறக்கருத்துக்களைப் பிழிந்து தந்த நூல் இது. கல்வி, நாவுடக்கம், பெரியோரின் நட்பு, செல்வம் மற்றும் துறவறம் போன்ற வாழ்வின் முக்கியப் பரிமாணங்களைத் தெளிவாக விளக்குகிறது.

8. நன்னெறி

ஆசிரியர்: சிவப்பிரகாச சுவாமிகள் ( 17-ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: கடவுள் வாழ்த்து நீங்கலாக மொத்தம் 40 வெண்பாக்கள்.

நூல்குறிப்பு: மனிதர்களை நல்வழியில் நடத்துவதற்காக இயற்றப்பட்ட இந்நூலின் தனிச்சிறப்பு, இதன் அற்புதமான உவமைகள் ஆகும். ஒவ்வொரு பாடலின் முதல் இரண்டு வரிகளில் ஒரு வாழ்வியல் நீதியும், அடுத்த இரண்டு வரிகளில் அதற்குப் பொருத்தமான இயற்கை உவமையும் அமைந்திருப்பது மனதைக் கவரும் வண்ணம் இருக்கும்.

9. உலக நீதி

ஆசிரியர்: உலகநாத பண்டிதர்.

அமைப்பு: விநாயகர் துதி தவிர்த்து 13 விருத்தப் பாடல்கள்

நூல் குறிப்பு: அன்றாட உலகியல் வாழ்க்கையில் ஒரு மனிதன் செய்யக் கூடாத தற்தவறுகளை "வேண்டாம்" என்ற எதிர்மறைச் சொல்லாட்சியோடு மிக எளிமையாகப் பட்டியலிடும் நூல் இது. "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்", "ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்", "மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்" போன்ற எளிமையான வரிகள் மூலம் பாமர மக்களும், சிறு பிள்ளைகளும் அன்றாட ஒழுக்கங்களை எளிதாக நினைவில் கொள்ளுமாறு இது எழுதப்பட்டுள்ளது.

10. நீதிநூல்

ஆசிரியர்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை (19-ஆம் நூற்றாண்டு).

அமைப்பு: தற்காலச் செய்யுள் வடிவில் அமைந்த விரிவான நீதி நூல்.

நூல் குறிப்பு: நவீன தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்களால் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல் இது. பழைய நீதி நூல்களின் மரபைத் தழுவி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகக் காலகட்டத்திற்கு ஏற்ப நவீனக் கல்வி, பெண் கல்வி, பொதுவுடைமைச் சிந்தனைகள், நேர்மையான உழைப்பு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற கருத்துக்களை உள்ளடக்கி, எளிய தமிழ்ப் பாடல்களாக இது உருவாக்கப்பட்டது.

தொகுப்புரை:

இந்த பத்து நீதி நூல்களும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு புலவர்களால் எழுதப்பட்டிருந்தாலும், இவற்றின் ஒட்டுமொத்த நோக்கமும் ஒன்றுதான் - மனிதனை நல்வழிப்படுத்தி, சமுதாயத்தில் ஒழுக்கமும் அன்பும் நிறைந்த ஒரு வாழ்வை அவனுக்குக் கற்றுத் தருவதே ஆகும்.

******இராஜாலி*****

முதுமொழிக்காஞ்சி - எளிய பத்து

  நூல் குறிப்பு  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில், அறக்கருத்துக்களைக் கூறும் நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி ஆகும். மதுரை கூடலூர் கிழார் என்பவ...