எங்கும் நிறைந்த இறைநிலை: நின்ற திருத்தாண்டகம்
முகவுரை
சைவச் சமயக் குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) தேவாரம் பாடிச் சைவ நெறியை வளர்த்தவர். தாண்டகம் எனும் பாவகையை மிகச் சிறப்பாகப் பாடியதால் "தாண்டக வேந்தர்" என்றும் போற்றப்படுகிறார். அவரது ஆறாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ‘நின்ற திருத்தாண்டகம்’ பாடல்கள், சிவபெருமானின் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையையும், உலகம் மற்றும் உயிர்களாக அவனே வீற்றிருக்கும் அத்வைதத் தத்துவத்தையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கின்றன.
1. அட்டமூர்த்தியாகவும் முக்காலமாகவும் திகழும் இறைவன்
நின்ற திருத்தாண்டகத்தின் முதல் பாடல், இறைவனின் 'அட்டமூர்த்தி' (எட்டு வடிவங்கள்) தத்துவத்தையும், காலத்தைக் கடந்த தன்மையையும் விளக்குகிறது.
ஐம்பூதங்களும் உயிரும்: இறைவன் நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களாகவும்; சூரியன், சந்திரன் மற்றும் உயிராகிய ஆன்மா ஆகிய எட்டு வடிவங்களில் இயங்குகிறான். மற்றும் உலகத்தில் உள்ள நன்மை மற்றும் தீமை,ஆண் மற்றும் பெண், தன்னுடைய உருவம் மற்றும் பிறரின் உருவம் என அனைத்திலுமே இறைவனே உறைகிறான்.
காலத்தின் வடிவம்:நேற்று, இன்று, நாளை எனும் முக்காலங்களின் வடிவமாகவும் செஞ்சடையுடைய சிவபெருமானே திகழ்கிறான்.
என முதற் பாடல் இறைவனின் தன்மைகளைக் கூறுகிறது.
2. அறிவாகவும் அருவமாகவும் திகழும் பேரொளி
இரண்டாம் பாடல், இறைவன் பருப்பொருட்களாக மட்டுமன்றி, மனிதனின் உணர்வாகவும், அறிவாகவும், நுண்பொருளாகவும் வீற்றிருப்பதை விவரிக்கிறது.
இயற்கையும் மணிகளும்: மண்ணாகவும், விண்ணாகவும், மலையாகவும் திகழும் இறைவன்; அரிய வைரமாகவும், மாணிக்கமாகவும் மிளிர்கிறான்.
உணர்வும் அறிவும்:உடலுக்குக் கண்ணாகவும், அக்கண்ணிற்குள் இருக்கும் கருமணியாகவும் இருக்கிறான். மேலும், கலைகளாகவும் (கல்வி), அக்கலைகளின் மெய்ஞ்ஞானப் பொருளாகவும் (அறிவு) விளங்குகிறான்.
எண்ணும் எழுத்தும்: பிரளயக் காலத்தைக் கடந்த பேரண்டமாகவும், கணிதத்தின் எண்ணாகவும், மொழியின் எழுத்துமாகவும் ஓங்கி உயரும் ஜோதிச் சுடராய் வீற்றிருக்கிறான்.
என இரண்டாவது பாடல் இறைவனின் இயல்புகளை எடுத்துக் கூறுகிறது.
3. உயிர்கட்கு ஆதாரமான உலகப் பெருஞ்சுடர்
மூன்றாம் பாடல், இயற்கை, தாவரங்கள், மொழியமைப்பு மற்றும் உலக உயிர்களின் வாழ்வாதாரமாக இறைவன் திகழும் நிலை பற்றிப் பேசுகிறது.
இயற்கையின் கூறுகளும் தாவரங்களும்: கல், களர்நிலம், காடு, காவிரி நதி, வாய்க்கால், உப்பங்கழி போன்ற நீர்நிலைகளாகவும்; புல், புதர், பூண்டு போன்ற தாவரங்களாகவும் இறைவனே உருவெடுத்துள்ளான்.
வீரமும் சொல்லும்: ஆணவத்தை குறிக்கும் திரிபுரங்களை அழித்த இறைவன்; நாம் பேசும் சொல்லாகவும், அச்சொல்லின் ஆழ்ந்த பொருளாகவும், சூலாயுதத்தின் சுழற்சியாகவும் திகழ்கிறான்.
வாழ்வாதாரம்: உலக உயிர்கள் வாழத் தேவையான நெல்லாகவும், நிலமாகவும், நீராகவும் ஆதாரமாகி, ஓங்கி நிமிர்ந்த பேரொளிச் சுடராய் இறைவனின் திருவடிகள் நிலைபெற்றுள்ளன.
என மூன்றாவது பாடல் இறைவனின் தன்மைகளை விளக்குகிறது.
முடிவுரை
திருநாவுக்கரசரின் இந்நின்ற திருத்தாண்டகப் பாடல்கள், "சிவபெருமானைத் தவிர வேறு எந்தப் பொருளும் உலகத்தில் இல்லை"என்ற உயரிய மெய்யியலைத் தெளிவுபடுத்துகின்றன. உலகத்தில் உள்ள நல்லவை, கெட்டவை, உயிரினங்கள், இயற்கையின் மாறுபாடுகள், அறிவு, மொழி என அனைத்தும் இறைவனின் வடிவங்களே என்பதை உணர்த்தி, எவ்வுயிரையும் இறைவனாகக் கருதி அன்பு செய்ய வேண்டும் என்ற உயரிய சிந்தனையை இக்கவிதைகள் நமக்குக் கற்பிக்கின்றன.
***** இராஜாலி*****