நூல் குறிப்பு
பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்களில் முதன்மையானது நாலடியார் ஆகும். சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட இந்நூல், 'நாலடி நானூறு', 'வேளாண் வேதம்', என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. திருக்குறளைப் போன்று முப் பிரிவுகளைக் கொண்டது. 400 வெண்பாக்களால் ஆன இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார் என்பவர் ஆவார். "நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி" என்ற அடிகள் இதன் சிறப்பை உணர்த்தும். G.U.போப் என்பவர் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
கல்வி
நாலடியாரில் கல்வி என்னும் அதிகாரத்தில் கல்வியின் சிறப்பு, பயன்கள், கல்வியின் அவசியம் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
கல்வியே அழகு!
சமுதாயத்தை மேம்படுத்தும் ஆற்றல் உடையது கல்வி. ஒருவரின், கருமையான தலைமுடியும், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையும், மஞ்சள் நிற மேனியும், உண்மையான அழகு ஆகாது. அவருக்கு, அறநெறியில் நடுவுநிலைமை தவறாமல் வாழ்கின்றோம் என்ற பெருமையைக் கொடுக்கும் சிறந்த கல்வியே உண்மையான அழகாகும். என்பதை நாலடியார்,
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு (நாலடி - 131)
எனக் கூறுகின்றது.
மேலும் கல்வியின் சிறப்புகளை பற்றி நாலடியார் கூறும் போது,
- சிறந்த கல்வியானது ஒருவர் இப் பிறவியில் பெற்ற பிறவிப் பையனை அடைய செய்யும். தான் பெற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுத்தாலும் குறையாத தன்மை கொண்டதாக இருக்கும். கற்றவரின் புகழை உலகறியச் செய்யும். அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாக கல்வி விளங்கும்.
- களர் நிறத்தில் விளைந்த உப்பை சான்றோர்கள் உயர்வாகக் கருதுவார்கள். அது போல கற்று அறிந்த ஒருவர் தாழ்ந்த குடியில் பிறந்து இருந்தாலும் மற்றவர்களால் மதிக்கப்படுவார்.
- ஒருவர் பெற்ற கல்வியை மற்றொருவரால் திருடிச் செல்ல முடியாது. அரசாலும் அரசர்களாலும் அக்கல்வியை அபகரித்துக் கொள்ள முடியாது. ஒருவர் தன் குழந்தைக்கு விட்டுச் செல்லும் உயர்ந்த செல்வம் கல்வி மட்டுமே ஆகும்.
- மனிதர்களின் ஆயுள் காலம் மிகக் குறைவாக உள்ளது. ஆனால் கற்க வேண்டிய நூல்களோ கடலளவு உள்ளன. எனவே, அவற்றில் சிறந்த நூல்களைக் கண்டறிந்து அவற்றைக் கற்றறிதல் வேண்டும்.
- படகோட்டியின் குலத்தின் தன்மையை அறிந்து யாரும் பயணம் செய்வது இல்லை. அவன் எந்த குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவனைத் துணைக் கொண்டு படகு பயணம் செய்வார். அதுபோல் கற்றறிந்த சான்றோர்கள் யாராக இருந்தாலும் அவர் கூறும் நற்கருத்துக்களை கேட்டு அறிதல் வேண்டும்.
- கரும்பின் நுனியில் இருந்து உண்டால் அடிப்பகுதிச் செல்லச் செல்ல கரும்பின் சுவை கூடிக் கொண்டே செல்வது போல, நல்ல நூல்களைக் கற்றறிந்த சான்றோர்களின் நட்பானது இனிமையானதாகவும், ஆழமானதாகவும் மாறும்.
- தண்ணீர் நிறைந்த குடத்தில் பாதிரி பூவை சேர்க்கும் போது அத்தண்ணீர் முழுவதும் வாசம் வீசுவதைப் போல, கற்றவரோடு நட்புக் கொண்டால் அறிவு வளர்ச்சி அடையும்.
- வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களை மட்டுமே கற்காமல், மெய்ஞான அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடி கற்க வேண்டும். அதுவே உண்மையான அறிவு வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
***** இராஜாலி*****