நூல் குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில், அறக்கருத்துக்களைக் கூறும் நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி ஆகும். மதுரை கூடலூர் கிழார் என்பவரால் பாடப்பட்ட இந்நூல், குறள் தாழிசை என்னும் பா வகையால் ஆனது. 10 அதிகாரங்களையும் அதிகாரங்களுக்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்களையும் கொண்டது. பாடல்களின் முதல் அடி "ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்" என்று தொடங்குவதாக அமைந்தது நூலின் சிறப்பாகும்.
எளிய பத்து
முதுமொழிக்காஞ்சி எட்டாவது பத்தாக விளங்குவது எளிய பத்து என்பதாகும். இதில் வாழ்க்கைக்குத் தேவையான எளிய கருத்துக்களைத் தொகுத்துக் கூறியுள்ளார்.
கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் எவை எவை எளிதில் வந்தடையும் என்பதை கூடலூர் கிழார் கூறும்போது..
"புகழுடைய அறச்செயலை யார் செய்கிறார்களோ, அவர்கள் விண்ணாடு எனப்படும் சொர்க்கத்தை அடைவது எளிது"
"எப்பொழுதும் கலகத்தை விரும்புபவர்களுக்கு துன்பம் தரும் போர் எளிதில் உண்டாகும்"
" இரக்கக் குணம் உடையவர்களுக்கு ஈகைப்பண்பு எளிதாகும்."
"முயற்சியால் உண்டாகும் துன்பத்தை விரும்புபவர்களுக்கு, இன்பம் எளிதாக கிடைக்கும் "
" இன்பத்தை மட்டும் விரும்பி இருப்பவர்களுக்கு துன்பம் எளிதில் வந்து சேரும்."
" அதிகப்படியான உணவை விரும்புபவர்களுக்கு, பல வகையான நோய்கள் எளிதில் வந்து சேரும். "
" பெண்கள் மீது மோகம் கொண்டு திரிபவர்களுக்கு, பழிச்சொற்கள் வந்து எளிதில் சேரும். "
" பிறர் துன்பம் கண்டு வருந்துபவர்களுக்கு, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பது எளிதாகும். "
" நல்ல நண்பர்களின் தொடர்பு இல்லாதவர்களுக்கு, கொலை குற்றம் எளிதில் வந்து சேரும். "
இவை போன்று எளிதில் மனிதர்களை வந்தடையும் நன்மை, தீமைகளை எளிய பத்தில் மதுரை கூடலூர் கிழார் தொகுத்துக் கூறியுள்ளார்.