எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

கம்பராமாயணம் நாட்டுப் படலம்

 

பால காண்டம் - நாட்டுப் படலம்

கவிச்சக்கரவர்த்தி - கம்பர்

முன்னுரை

          கவிச்சக்கரவர்த்தி கம்பரால் பாடப்பட்ட இராமகாதை, பின்னாளில்  கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது. 9 -ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட இக்காவியம்; பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும், 10569 பாடல்களையும் கொண்டதாகும். இராமாவதாரத்தின்  சிறப்புகளை இக்காவியம் கூறுவதாக அமைந்துள்ளது.

பால காண்டம்

          உலக மகாகாப்பியங்களுள் தலைசிறந்து விளங்கும்  கம்பராமாயணத்தில், முதல் காண்டமாக காணப்படுவது பாலகாண்டம் ஆகும். இக்காண்டத்தில், ஆற்றுப் படலம் தொடங்கிப் பரசுராமப் படலம் ஈறாக 23 படலங்கள் காணப்படுகின்றன.

நாட்டுப் படலம்

          பாலகாண்டத்தில் இரண்டாவது படலமாக காணப்படுவது நாட்டுப் படலம் ஆகும். இப்படலத்தில் கோசலை நாட்டின் வளத்தையும், அந்நாட்டு மக்களின், வணிகம் மற்றும் வாழ்வியல் ஒழுக்கங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

கோசலை நாட்டு வளம்

          கோசல நாட்டு வளத்தினை பற்றி கம்பன் கூறும் போது "அங்கு காணப்பட்ட வயல் வரப்புகளில் முத்துக்கள் விரவி கிடந்தன, தண்ணீர் பாயும் மடைகளில்  சங்குகள் காணப்பட்டன. மிகுந்த நீர்ப்பெருக்கு உடைய ஆற்றங்கரைகளில் எல்லாம் செம்பொன்கள் குவிந்து கிடந்தன. எருமை மாடுகள் குளிக்கும் நீர் குட்டைகளில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து காணப்பட்டன. நீர்நிலைகளில் பாசி படிந்த இடத்தில் எல்லாம் பவளங்கள் சிதறிக் கிடந்தன. நெல் பயிர்கள் நிறைந்த வயல் பரப்புகளில் அன்னப்பறவைகள் கூடிக்கிடந்தன. வயல்களின் பக்கத்தில் செந்தேன் போன்று சுவைமிக்க கரும்புகள் நிறைந்திருந்தன.  சந்தன மரங்கள் நிறைந்த சோலைகளில், மது உண்டு மகிழும் வண்டுகளின் கூட்டம் காணப்பட்டது"  எனக் கோசலை நாட்டின் வளத்தினை கூறுகிறார்.

கோசலை நாட்டு - மருத நில வளம்

          கோசல நாட்டில் உள்ள மருதநிலத்தின் வளத்தினைப் பற்றி கம்பன் கூறும் போது, "பெருமைக்குரிய கோசல நாட்டின் மருத நிலத்து எல்லைக்குள்; ஆற்றுநீர் பாய்வதால் எழும் ஓசையும், உழவர்கள் கரும்பாலையில் கரும்பு ஆட்டுவதால் எழும் ஓசையும், கரும்பாலையில் கருப்பஞ்சாறு பாய்வதால் எழுகின்ற ஓசையும், ஆற்றங்கரைகளில் காணப்படும் சங்குகளில் இருந்து எழும் ஓசையும், நீர்நிலைகளில் எருதுகள் தம்முள் மோதி பாயும்போது எழும் ஓசையும், வெவ்வேறாக இருந்தாலும், அவை ஒன்றோடு ஒன்று கலந்து ஒலித்தது  " எனக் கூறுகிறார். மேலும்,

        "தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,

         கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைக்கண் விழித்து 

                                                                              நோக்க,

        தென் திரை எழினி  காட்ட, தேம் பிழி மகர யாழின்,

        வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ" 

எனச் சோலையில் மயில்கள் ஆடும் அழகையும், தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும் காட்சியையும், மேகத்தின் இடி முழக்கத்தையும், வண்டுகளின் இசையையும் கேட்டு மகிழ்ந்தவாறு மருத நாயகி அமர்ந்திருந்த நிலையினை சிறப்பித்துக் கூறியுள்ளார்.

கோசலை நாட்டின்  -  கடல் வாணிகம்

          கோசலை நாட்டின் கடல் வளத்தை பற்றி கம்பன் கூறும் போது, "மன்னன் ஆளும் முறையை அறிந்து, ஆசையை போக்கி, கோபப்படும் இடத்தில் கோபப்பட்டு, தன் குடிமக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் மனம் வருந்தாமல் வரிகளை விதித்து, மக்களை நல்ல நிலையில் பாதுகாத்து வரும் மன்னனைப் பார்த்து பூமாதேவி சுமை நீங்கியதாக எண்ணி இளைப்பாறு வாள். அதுபோல, பொன் பொருள்களை ஏற்றி வந்த கப்பல் நெய்தல் நிலத்தில் அப்பொருள்களை இறக்கி வைத்துவிட்டு தனது நீண்ட முதுகு இளைப்பாறுவது போல கடற்கரையில் ஓய்வெடுத்து நிற்கும் " எனக் கூறுவதன் மூலம், அங்கு கடல் வாணிகம் சிறந்து இருந்ததை அறிய முடிகிறது.

கோசலை நாட்டின்  - செல்வச் செழிப்பு

          கோசல நாட்டின் செல்வச் செழிப்பினை பற்றி கம்பர் கூறும்போது "ஆண் வண்டுகள்,கோசல நாட்டில் உள்ள இளம் பெண்கள் தங்களின் கண்களில் அணிந்திருந்த கருமை நிறமையினை கண்டு, பெண் வண்டுகள்  என எண்ணி காதல் கொண்டு மருதநிலத்திலேயே தங்கி இருந்தன. மேலும், கோசலை நாட்டில் உள்ள சமையல் அறையில் அரிசி கழுவி வடிக்கப்பட்ட நீரானது, பாக்கு மரங்கள் நிறைந்த சோலைக்குள் சென்று அவற்றை வளப்படுத்தி விட்டு, செந்நெல் நடப்பட்ட வயலை விளைவித்தது. அங்கு காணப்பட்ட குப்பை மேட்டினை, சேவல் கோழிகள் தன் காலால் கிளறும் போது சிறப்புமிக்க மாணிக்கக் கற்கள் வெளிப்பட்டன. அம்மாணிக்கக் கற்களை மின்மினிப்பூச்சிகள் என எண்ணி குருவிகள் அவற்றை எடுத்து தனது கூட்டில் கொண்டுபோய் வைத்தன."எனக் கூறுகிறார். மேலும், அங்குள்ள ஆயர்குலப் பெண்கள் தயிர் கடையும் அழகினை,

" தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,

 ஆய வெள் வளை  வாய் விட்டு  அரற்றவும்,

 தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,

 ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். "

 

எனத் தயிர் கடையும் போது ஆயர்குல பெண்களின் கையில் அணிந்திருந்த வளையல் எழுப்பும் ஓசையினை குறிப்பிடுகிறார்.

மேலும், கோசலை நாட்டில், "தினைப் புனங்களில் கிளிகளின் பாட்டும், மலர்கள் நிறைந்த சோலைகளில் வண்டுகளின் பாட்டும், நீர்நிலைகளில் பறவைகளின் பாட்டும், வள்ளல் தன்மை கொண்ட சான்றோர்களின் வீட்டில் உலக்கைப் பாட்டும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தன.” பெரிய அகலமான கண்களையும், பிறையைப் போன்ற நெற்றியை உடைய பெண்கள் எல்லோரும் சிறந்த செல்வத்தையும், உயர்ந்த கல்வியையும் பெற்றிருந்தார்கள். அவர்கள், வறுமையால் வருந்தி உதவி நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வதும், விருந்தினருக்கு உணவளிப்பதும், அல்லாமல் வேறு வேலைகள் எதுவும் இல்லாதவர்களாக காணப்பட்டார்கள்." எனக் கோசலை நாட்டின் செல்வச் செழிப்பினை கம்பர் கூறுகின்றார்.

கோசலை நாட்டின் மக்கள் அனைவரும் நல்லவரே!

          கோசல நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நல்ல பண்புகளைக் கொண்டவர்கள். அங்கு, "எவரிடமும் குற்றம் இல்லாததால் கூற்றுவனின் கொடுமை அந்நாட்டில் இல்லை. நாட்டு மக்களின் மனம் செம்மையானால், சினம் அந்நாட்டில் இல்லை. அவர்கள் நல்ல அறச்செயல்களை தவிர வேறு எச்செயலும் செய்யாததால், மேன்மையை தவிர இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை " எனக் கம்பர் கூறுகிறார்.

கோசலை நாட்டில் வறுமை இல்லை

 கோசல நாட்டில் வறுமை இல்லை என்பதனை கம்பன் கூறும்போது,

“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

 திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால் ;

 உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

 வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.”

எனக் கூறுவதோடு, கோசல நாட்டிற்கு 'எள்ளும், திணையும், சோளமும், சாமையும், கொள்ளும் மிகுதியாகக் கொண்டு வரும் வண்டிகளும், சேறு நிறைந்த உப்பு வயலில் இருந்து உப்பை கொண்டுவரும் வண்டிகளும்  பாரம் மிகுதியால், மனிதர்கள் தள்ளிக் கொண்டே செல்லும் நிலையில் காணப்பட்டது. மேலும், தாம் செய்த செய்வினையின் காரணமாக பல பிறவிகளை எடுத்து மண்ணில் பிறக்கும் உயிர்களைப் போல, சர்க்கரையும், தேனும், தயிரும், கள்ளும் அங்குள்ள  ஆயர்குடியில் மிகுதியாகக் காணப்பட்டன." எனக் கூறுகிறார்.

மக்களின் ஒழுக்கத்தால் அறம் பெருகுதல்

          “கோசல நாட்டில் உள்ள மக்கள், அக அழகு, புற அழகு பெற்று காணப்பட்டனர். அவர்கள் பொய் பேசாததால்  நீதி நிலைத்து நின்றது. அந்நாட்டுப் பெண்களின் அன்பால் அறங்கள் நிலைபெற்றன. பெண்களது கற்பினால் பருவமழை  பொய்க்காது பெய்தது. சோலைகள் சூழ்ந்த கோசல நாட்டை சரயு நதி பாய்ந்து வளப்படுத்தியது. அந்நாட்டின் எல்லையை யாரும் காண முடியாது." எனக் கம்பர் குறிப்பிடுகிறார்.

முடிவுரை

 கம்பராமாயணத்தில் உள்ள பாலகாண்டத்தில் காணப்படும், நாட்டுப் படலத்தில் கோசலை நாட்டின் வளமும், மருத நிலத்தின் சிறப்பும், கடல் வணிகம் மற்றும் செல்வ செழிப்பும், மக்களின் ஒழுக்க நிலையையும் கம்பர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

----------- இராஜாலி -----------

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

சீவக சிந்தாமணி - விமலையார் இலம்பகம்

 


 திருத்தக்க தேவர்

முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவரால் கிபி 9 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகும். சமண கருத்துக்களை கூறும் சமண காப்பியமாக இக்காப்பியம் விளங்குகிறது. சீவகசிந்தாமணி; நாமகள் இலம்பகம், முதலாக முத்தி இலம்பகம் ஈராக 13 இலம்பகங்களை  கொண்டுள்ளது. மணநூல் எனவும் அழைக்கபடும் இக்காப்பியத்தில் 3145 விருத்தப் பாடல்கள் காணப்படுகின்றன.

விமலையார் இலம்பகம்

          சீவகசிந்தாமணியில் எட்டாவது இலம்பகமாக காணப்படுவது, விமலையார் இலம்பகம் ஆகும். இதில் 106 பாடல்கள் காணப்படுகின்றன. இவ்இலம்பகத்தில் சீவகன், சோலையில் தங்கியிருந்த தனது தாயாகிய  விசயை சந்திக்கச் செல்கிறான். அவனைக் கண்ட விசயை, அரச நீதியையும் ஆட்சி முறையையும் அறிவுரையாக கூறுகிறாள். மேலும், தனது நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைக் கொல்ல தாய்மாமன் கோவிந்தனைத் துணையாக கொள்ளும்படி சீவகனுக்கு அறிவுரைகளை கூறுகிறாள். சீவகனும் தாய்க்கு ஆறுதல் கூறிக்கொண்டு கோவிந்தனைத் தேடி நண்பர்களோடு புறப்படுவதாக இவ்இலம்பகம் கூறுகிறது.

 

விசயை சீவகனுக்கு அறிவுரைகள் கூறுதல்

          விசயை; மரவ மரம், நாகமரம், மணம் வீசும் செண்பக மரமும், குரவ மரமும், கோங்க மரமும், குடம் போன்று காய்காய்க்கும் சுரபுன்னை மரமும் கலந்து காணப்பட்ட சோலையில் தனது மகனாகிய சீவகனை பார்த்து பின்வரும் நீதிக் கருத்துக்களை கூறினாள்.

"சீவகனே! அழிக்கமுடியாத மலையிலும் காட்டிலும் பெரும் செல்வத்தோடு வாழ்கின்ற குறுநில மன்னர்களின் மகளை மணமுடித்து கொள்ளுவதும், நாட்டை ஆளும் வலிமைமிக்க அரசர்களின் மகளை திருமணம் செய்து கொள்வதும் காலங்காலமாக மன்னர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது என்பதினை நூல்களைக் கற்றறிந்த சான்றோர்கள்  அறிந்துள்ளார்கள். என்பதை அறிவாயாக!"

"அரசியல் முறையால், ஆறில் ஒரு பகுதியை வரியாகப் பெற்று செல்வத்தை சேர்க்கவேண்டும், பழமையான பகையினை தன் மனதில் நிலையாக வைத்திருக்க வேண்டும். முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பதுபோல  பகைவரின், பகைவரை நண்பராக்கி அவரைக் கொண்டு பகைவனை அழிக்க வேண்டும். இது அரச நீதி ஆகும்!"

"ஒற்றர்களை, ஒற்றர்களை கொண்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும். அற நூல்களைக் கற்றறிந்த அமைச்சர்களை கண்ணை போல் காப்பாற்ற வேண்டும். மந்திரிகளின் சுற்றத்தையும் தந்திரிகள் சுற்றத்தையும் சிறந்த வகையில் ஆராய்ந்து பெருக்க வேண்டும். இவை தான் வெற்றி பெறுவதற்கான அரச சூழ்ச்சியாகும்."

"பொன்னாபரணங்களால் அழகு செய்யும் மார்பை உடைய சீவகனே! பல வெற்றிகளைப் பெறுவதும், நாட்டை மேம்பாடு அடையச் செய்வதும், மட்டும் போதாது. கல்வி அழகை அனைவருக்கும் கொடுத்து, பொருளில் குன்றியவரை மலை போன்ற செல்வந்தராக மாற்றுவதும் அரச கடமையாகும் "

"பொன்  பொருளைச் செலவு செய்து நாட்டை காவல் செய்யும் பெரும் படையை உருவாக்கலாம், அப்படையால் பல நாடுகளை வெற்றி கொள்ளலாம். வெற்றிகள் மூலம் பெரும் செல்வத்தை குவிக்கலாம். செல்வத்தால் அடையமுடியாது பெரு வீடு கிடைக்கும்."

"காளை போன்ற வீரமிக்க சீவகனே! இப்பொழுது நாம் நிலத்தை இழந்து, செல்வத்தில் குறைந்து, நல்ல குலத்திலும் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறோம். மேலும், இப்பொழுது நம்மிடம் கலைக்கணாளரும், நல்ல அமைச்சர்களும் இல்லை. இந்த நிலையில் கட்டியங்காரன் அழிக்க நீ எவ்வாறு துணிந்தாய்?" என விசயை சீவகனைப் பார்த்து கேட்டாள்.

சீவகன் விசயைக்கு ஆறுதல் கூறுதல்

          விசயை கூறியதைக் கேட்ட சீவகன் தாயை பார்த்து " அன்னையே! தீயைப் போன்ற ஆற்றல் உடையவன் நான். இடியைப் போன்ற குரலை உடைய சிங்கம் ஒரு நரியுடன் போர் புரிவது என்றால், அதற்கு சூழ்ச்சிகள் எதுவும் தேவை இல்லை. என்னை எண்ணி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். கட்டியங்காரன் பாம்பு என்றால், அழகிய மாலைகளை அணிந்த நந்தட்டன் கருடன் ஆவான். " எனக் கூறினான்.

 விசயை மேலும் அறிவுரை கூறுதல்

          அதனைக் கேட்ட விசயை மகிழ்ந்து, ஒளி பொருந்திய அழகுடைய நந்தட்டனைப் பார்த்து மனம் மகிழ்ந்து அவனை தன் கையால் தீண்டி, அன்பினால் கனிந்து பார்த்து அவனுடைய வயிரத் தூணைப் போன்ற தோள்களை பார்த்து  " கட்டியங்காரன், கவர்ந்த நிலத்தை இத்தோள்கள் மீட்காமல் போகுமோ? " எனக் கூறினாள்.

          மேலும், விசயை சீவகனை பார்த்து "பகல் பொழுதில், காட்டிலுள்ள ஒரு காக்கை, ஆயிரம் கூகைகள் குடியிருக்கும் இடத்திற்கு சென்று அவற்றைக் கொல்லும். அதுபோல, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு எந்த செயலையும் செய்தால் அவர்களால் முடியாதது ஒன்றுமில்லை. சில நேரங்களில், குகையில் வாழும் சிங்கம் இடம் அறியாமல் நரிகள் வாழும் மூங்கில் காட்டில் சென்று நரி இடம் மாட்டிக் கொள்வதை போல ‘யாம் வீரம் உடையோம்’ என நினைத்து, காலம், இடம் உணராமல் எச் செயலையும் செய்யக்கூடாது  " என அறிவுரைகளைக் கூறினாள்.

முடிவுரை

இவ்வாறு விசயை, சீவகனிடம்  கட்டியங்காரனை வெல்வதற்கு வேண்டிய வழிகளையும், அரச நீதிகளையும் அறிவுரையாக கூறுவதாக விமலையார் இலம்பகம் கூறுகிறது.

......இராஜாலி......

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...