நூல் குறிப்பு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு, ஐந்து திணைகளுக்கும் நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களைக் கொண்டது. மூன்று முதல் ஆறு அடிவரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஐங்குறுநூறில் உள்ள குறிஞ்சித் திணை பாடலை கபிலரும், முல்லைத்திணை பாடலை பேயனாரும், மருத திணை பாடலை ஓரம்போகியாரும், நெய்தல் திணை பாடலை அம்மூவனாரும், பாலைத்திணை பாடலை ஓதலாந்தையாரும் பாடியுள்ளார்கள். இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர் கிழார், தொகுப்பித்தவர் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர் ஆவார்.
வேட்கைப் பத்து
ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணை பாடல்களை ஓரம் போகியார் பாடியுள்ளார். அதில் வேட்கைப்பத்தும் ஒன்று. வேட்கைப் பத்து என்பது 'விருப்பம்,' 'வேண்டுதல்' எனப் பொருள்படும். தலைவியும், தோழியும் தலைவன் நலம் கருதி வேண்டுவதாக பத்துப் பாடல்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது.
நெற் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
தோழியின் கூற்றாக அமைந்த இப்பாடலில் "தலைவி; அரசன் வாழ்க! அவன் ஆட்சி செய்யும் நாடும் வாழ்க! நாட்டில் நெல் வளம் பெருகுக! பொன் வளம் பெரிது சிறந்து விளங்குக!" என வேண்டி நின்றாள். ஆனால், நானோ; " காஞ்சி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கும் மருத நிலத்து வயல்களில் சிறு மீன்கள் துள்ளி விளையாடும் மருதநில தலைவனும், அவனுக்குத் துணையாக நிற்கும் பாணனும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி நின்றேன்." எனக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
***** இராஜாலி *****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக