முன்னுரை
இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அறம், பொருள்,இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களின் வெளியீட்டுத் தளங்களாக அமைவதைக் காணலாம். இத்தகைய நான்கு வாழ்வியல் கோட்பாடு அடித்தளத்தோடு தொடர்பு கொண்டது ஊழ்வினைக் கோட்பாடாகும். பொதுவாக தனி மனிதனின் வீழ்ச்சியின் போதும், எழுச்சியின் போதும் தனக்குத் தானே செய்து கொள்ளும் சமரசத் தன்மையே ஊழ்வினை ஆகும். இந்நிலைப்பாடு தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணக் கிடக்கின்றன. இக்கட்டுரையில் 'ஊழின் பெருவலி யாவுல? என்ற வள்ளுவரின் கேள்வி ஆய்வு செய்யப்படுகின்றது.
ஊழ்வினைப் பயன்
இன்று வழங்கப்படும் வினை,தலைவிதி, விதி என்ற சொல்லுக்கு பண்டைத்தமிழர்கள் பால், முறை, ஊழ்,விதி எனக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றுள் சங்க இலக்கியங்கள் 'பால்' என்ற சொல்லே மிகுதியாக ஊழ்வினையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொல்காப்பியரும் "பால்"' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஊழ்வினை என்ற சொல்லுக்கு விளக்கமாகப் பரிமேலழகர் 'இரு வினைப் பயன் செய்தவனையே சென்றடைவதற்கு ஏதுவாகிய நியதி, ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், விதியென்பன ஒரு பொருட்கிளவி' எனக் கூறுகிறார். இங்கு இருவினை என்பது செய்த நல்வினை, தீவினைகளைச் சுட்டுவதாகும். "ஒருவன் செய்யக்கூடிய செயல்களின் பயன்களை அதே பிறவியிலும் அடுத்து வரக்கூடிய பிறவிகளிலுமாக அனுபவிப்பது ஊழ்வினை" என விளக்கம் தரப்படுகின்றது. ஊழ்வினை மனிதனின் பிறவிக் கோட்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.
திருக்குறளில் ஊழ்வினை
பழந்தமிழ் நீதிநூற்களான திருக்குறளிலும், பழமொழி நானூற்றிலும் ஊழுக்கென்றே ஓர் அதிகாரம் வகுத்தமைத்திருப்பது ஊழின் மீது பண்டைத்தமிழர்கள் கொண்டிருந்த நம்பிக்கையினைப் புலப்படுத்தும்.
ஊழ்வினை இரண்டு வகை என வள்ளுவர் கூறுகின்றார். அவை, ஆஊழ் (ஆகலூழ்) போஊழ் (இழஊழ்) என்பவை ஆகும். ஒருவருக்கு நன்மை செய்து, செல்வத்தைக் கொடுக்கும் ஊழ்வினையினை ஆஊழ் அதாவது ஆக்கவினை ஊழ் எனக் கூறுகிறார். ஒருவருக்கு துன்பத்தைக் கொடுத்து, செல்வத்தை அழிக்கும் ஊழ்வினையினை போ ஊழ் என குறிப்பிடுகிறார். இதனை,
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி - 371
என வள்ளுவர் கூறுகிறார். போஊழ் வினையின் காரணமாக மடி என்னும் சோம்பல் தோன்றுகிறது. அது செயல்படாமல் தடுக்கிறது. இதனால் செல்வம் கரைந்து செல்கிறது. வறுமை, துன்பம் சூழ்கிறது. சோம்பலில் மூழ்கியவர்களால் பெருமை தரக்கூடிய எந்தவித முயற்சியையும் செய்ய முடியாது. எனவே வறுமை சூழ்ந்து குடும்பத்தின் பெருமை கெடும். தாமும் குற்றங்கள் பல புரிய நேரிடும். என்பதை,
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு - 604
- என்ற குறள் மூலமாக போகூழால் நேரிடும் துன்பங்களைப் பற்றி தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.
விதி என்பது விதிக்கப்பட்டது. இதுதான் இப்படித்தான் என வகுக்கப்பட்டதே விதி ஆகும். இந்த உலகத்தில் உயர்ந்தது தாழ்ந்தது, நல்லது கெட்டது, மகிழ்ச்சி தூக்கம், இன்பம் துன்பம், நல்வினை தீவினை போன்ற இருவேறான வாழ்வியல் நிலைபாடுகள் விதியினால் அமையும் என்பதை,
இரு வேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு - 374
என வள்ளுவர் கூறுகிறார். ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்வியல் நிலைப்பாடுகள் இல்லை. உயர்ந்த நிலையில் இருப்பவர் தாழ்ந்த நிலைக்கு மாறுவதும், தாழ்ந்த நிலையில் இருப்பவர் உயர்ந்த நிலைக்குச் செல்வதும் அவரவர் விதியின் பயனாக அமையும் என்பது வள்ளுவரின் உறுதியான நிலைபாடாக காணப்படுகின்றது.
நல்ல செயல்களை செய்ய முற்படும்பொழுது வினையின் காரணமாக, அவை தீமையில் சென்று முடிந்து விடுகிறது. சில வேளைகளில் தீய செயல்களை செய்ய முற்படும்பொழுது அவை நல்ல செயல்களாக நடந்து விடுகிறது. நற்பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆழமாக சிந்தித்து கடுமையாக முயன்று செய்யும் செயல்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் துன்பத்தையும் துயரத்தையும் கொடுப்பதை காண்கிறோம். அதுவும் விதியின் விளையாட்டு. நம்பிக்கை இல்லாமல் முயற்சி செய்யாமல் ஏனோ தானோ என செய்யும் செயல்கள் சில வேலைகளில் வெற்றியை கொடுக்கிறது. நாமே ஆச்சரியம் கொள்ளும் படி நற்பலனைத் தருகிறது இதுவும் விதியின் விளையாட்டு என்பதை,
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.- 375
என்னும் திருக்குறள் மூலம், இன்பம் துன்பத்தைக் கண்டு மயங்காது மனம் தெளிந்த நிலையில் விதியின் வினையென அமைதி கொண்டிருந்தால் உயர்வடையலாம் என தெளிவுபடுத்துகிறார்.
ஊழ்வினையை தடுக்க முடியாது என்பதால் தான் 'ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு,வருந்தி ஒன்றை பாதுகாத்து வந்தாலும் விதியானது சரியானதாக இருந்தால் தான் அவை நமக்கு உரியதாக மாறும். சில நேரங்களில் அவை நமக்கு வேண்டாம் என்று வெளியே தள்ளினாலும் நல்ல விதி இருந்தால் அவை நம்மை விட்டு செல்லாது. ஒருவருக்கு விதிக்கப்பட்டது எந்த நிலையிலும் அவரை விட்டுச் செல்லாது. விதிக்கப்படாத ஒன்றை எவ்வளவு முயன்றாலும் பாதுகாக்க முடியாது என்பதை,
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தன - 376
என விதி என்னும் வினைப்பயனே வாழ்வை நகர்த்தும் கட்டளைக் கல்லாக இருக்கிறது என வள்ளுவர் கூறுகிறார்.
பலவாறு முயற்சிகளைச் செய்து கோடி கோடியாக தேடி வைத்திருந்தாலும் இறைவனால் விதிக்கப்பட்ட விதி சரியானதாக இருந்தால் மட்டுமே அவற்றை நாம் அனுபவிக்க முடியுமே தவிர நமது விருப்பப்படி அதனை அனுபவிக்க முடியாது. என்பதை
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - 377
என்ற குறள் தெளிவுபடுத்துகிறது.
இவ்வாழ்க்கை, 'வினையின் வந்தது வினைக்கு விளைவாவது' என மணிமேகலை கூறும். ஒருவருடைய வாழ்க்கையில் நிகழும் அனைத்து காரியங்களுக்கும் அடிப்படையாக அமைவது ஊழ். அதனை வெற்றிக் கொள்வது அரிது. அதைவிடவும் வலிமையானது எதுவும் இல்லை. ஊழை வெற்றிக் கொள்வதற்கு முயற்சித்தால், அந்த ஊழ் ஏதாவது ஒரு நிலையில் நமது செயலின் முடிவுக்கு முன்னால் வந்து நின்று தனது வெற்றியை உறுதிப்படுத்தும் என்பதை வள்ளுவர்,
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். - 380
எனக் கூறும் இவரே, விதியை காரணம் காட்டி ஒருவன் முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்க கூடாது. அவ்வாறு இருந்தால் சமூகம் அழியும் என்பதால்,
ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்" - 620
என ஊக்கம் தரும் முயற்சியினை வலியுறுத்துகிறார். மேலும்,
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். - 619
என 'ஆள்வினை உடமை' என்ற அதிகாரத்தில் ஒருவனுக்கு தெய்வத்தால் - விதியால் செய்ய முடியாத காரியத்தைக் கூட, உடல் வருத்தும் படியாக ஓய்வின்றி முயற்சி செய்தால் அதற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். உழைக்கும் ஒருவரால் வலிமை மிக்க ஊழ்வினையையும் வெற்றிக் கொள்ள முடியும் என தன் கருத்துக்கு முரணாக உழைப்பின் அவசியத்தினை வலியுறுத்துகிறார். எல்லாம் முன் வினைப்படி நடக்கும் என எண்ணி எவ்வித முயற்சியும் இன்றி மனித இனம் ஒய்ந்திருக்கக்கூடாது எனக் கருதியும், ஓய்ந்திருந்தால்,
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்" - 601
என்பதால் குடிப் பெருமையைக் காக்க வேண்டும் எனில் உழைப்பு ஒருவனுக்கு அவசியம் என்பதை வலியுறுத்தவே வள்ளுவர், ஊழ் வினையை வெல்ல முடியாது என்ற தனது கருத்தோடு அவரே சமரசம் செய்து கொள்கிறார்.
முடிவுரை
வாழ்வியல் கோட்பாட்டில் ஊழ்வினைக் கொள்கை பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் ஆகிய நம்பிக்கைகளோடு நெருங்கிய தொடர்படைய ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும், தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வதன் அடிப்படையில் மேனாட்டறிஞர் G.L.ஹாட் அவர்கள் "The early Tamil did not believe in KARMA, the theory on northen origin that all of one's suffering or happiness comes as a result of what was done in previous lives" . என பழந்தமிழர்களுக்கு ஊழ்வினை நம்பிக்கை இல்லை எனக் கூறுகிறார். இக்கருத்து, முரண்பட்டதாகவே காணப்படுகிறது. சங்க காலம் முதல் இக்காலம்வரை தமிழர்கள் வாழ்வியலோடு ஊழ்வினை நம்பிக்கை இருந்தது என்பதற்கு வள்ளுவர் வகுத்த ஊழ்வினை அதிகாரமும் அதன் கருத்துக்களும் அரண் சேர்க்கிறது என்பதினை இவ்வய்வின் மூலம் அறியலாம்.
**** இராஜாலி ****
















