எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 23 ஜூலை, 2025

மின் நூல் - தமிழ் நூல்கள் அறிமுகம்


தமிழ் நூல்கள் அறிமுகம் - தமிழ் இலக்கியங்கள் குறித்த அட்டவணை 

மின் நூல் - ஆழ்வார்கள் அறிமுகம்

ஆழ்வார்கள் அறிமுகம் - பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி சுஜாதா அவர்கள் எழுதிய எளிய அறிமுக உரை..

மின் நூல் - இலக்கியத்தில் மருத்துவ கருத்துக்கள்


இலக்கியத்தில் மருத்துவ கருத்துக்கள்  - தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மருத்துவச் செய்திகள் குறித்த ஆய்வு...

செவ்வாய், 22 ஜூலை, 2025

மொழிப் போராட்டம் - இந்தி திணிப்பு

 


   1910 ஆம் ஆண்டு இந்தி சாகித்திய சம்மேளனம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தேசிய காங்கிரஸ் வலுவடையத்தொடங்கியது. தேசிய உணர்ச்சியோடு இந்தியாவின் அரசாங்க மொழியாக இந்தி வரவேண்டும் என்ற எண்ணமும் வளரத் தொடங்கியது. மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் இந்தி மொழியை அரசாங்க மொழியாக வேண்டுமென்ற இயக்கத்தை பரப்புவதில் ஈடுபட்டார்கள்.

    1931 இல்  கூடிய காங்கிரஸ் இந்துஸ்தானி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.   உண்மையில் இந்தி தான் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்துஸ்தானி என்ற பெயருக்கு செல்வாக்கு ஏற்படவில்லை.

    பொதுமொழி தேவை என்பதற்கு இந்தி ஆதரிப்பாளர்கள் கூறிய காரணங்கள் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த ஒரு தேசிய மொழி தேவை என்பதும், நாடு விடுதலை அடைந்ததும் சுதந்திர நாட்டு அரசியல் விவகாரத்திற்கு ஒரு பொது மொழி அவசியம் என்பதும் அவர்களின் கருத்தாக இருந்தது.

   இதன் காரணமாக தமிழகத்தை ஆட்சி புரிந்த காங்கிரஸ் பேரியக்கம் தனது அரசியல் பலத்தைத் துணை கொண்டு இந்தியை கட்டாயமாக திணிக்கும் நிலையில் ஈடுபட்டது.

     1937 இல் ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ராஜாஜி " பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போகிறேன்" என அறிவித்தார்.

    அரசாங்கம் இந்தியை இஷ்ட பாடம் என்று  உத்திரவிட்டதோடு, பள்ளிதோறும் இந்தி ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற மறைமுகமான உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயமாகத்  திணிக்கப்பட்டது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் 

       முதன் முதலில் இந்திய எதிர்ப்புக் கூட்டம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்  1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 இல் நடைபெற்றது. மறுநாள் ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவையாற்றில் மிகப்பெரிய ஹிந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இவ்விரு நிகழ்வுகளும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

    1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை மாகாண பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

   ராஜாஜியின் இந்த ஆணையை எதிர்த்து அவர் வீட்டின் முன்பு பல்லடம் பொன்னுசாமி என்கின்ற காங்கிரஸ்காரர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு வாரம் கடுங்காவல் தண்டனையும் அடைந்தார். முதல் கட்ட இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் முதலில் கைதானவர் இவர் தான்.

     அதே ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி  பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் உண்ணாமலை அம்மையார் தலைமையில் ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    1939  இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைச்சென்ற  தாளமுத்து, நடராசன் ஆகிய இரு தமிழ் மறவர்களும் சிறைச்சாலையிலேயே மரணம் அடைந்தனர்.

    1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய அறிஞர் அண்ணா செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறை தண்டனை அடைந்தார். அதே ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி பெரியார் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார்.

    1939 இல் இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. அப்போரில் இங்கிலாந்தை ஆதரிக்க இயலாது என காங்கிரஸ் மகா சபை தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. முதலமைச்சர் ராஜாஜி பதவி துறந்தார். 1940 ஆண்டு பிப்ரவரி மாதம் ஹிந்தி கட்டாய பாடம் என்கின்ற தீர்மானத்தை அரசு ரத்து செய்தது.இதன் காரணமாக முதல் கட்ட இந்திய எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் கட்ட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

   1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்தது. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நாடெங்கும் ஹிந்தி மொழியை கட்டாயப் பாடமாக அரசு அறிவிக்க இருந்த நிலையில், ஜனவரி 22 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவ அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அதில் ரவிச்சந்திரன், இராமன் துரைப்பாண்டியன், வெற்றிவேல், துரைசாமி போன்றோர்கள் இணைந்து மாணவப் போராட்டக் குழுவினை அமைத்தனர்.

 ஜனவரி 23ஆம் நாள் மதுரையில் காளிமுத்து,காமராசர், ஜெயப்பிரகாசம், ராமசாமி,ராஜேந்திரன்,தனசேகரன், சுப்பிரமணியன் போன்றோர் தலைமையில் மாணவர் போராட்ட குழு அமைக்கப்பட்டது.

   அதேபோல கோயம்புத்தூரில் துரைக்கண்ணு தலைமையிலும், திருச்சியில் ரகுபதி தலைமையிலும் மாணவப் போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

 மாணவர்களின் ஊர்வலம்

     1965  ஜனவரி 25ஆம் நாள் மதுரையில் காளிமுத்து காமராசு ஆகிய இரண்டு மாணவர் தலைவர்களும் அரசியல் அமைப்பின் 17 வது பிரிவினை தீயிட்டு கொளுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.பின்னர் நடந்த ஊர்வலத்தில் மாணவர்களை காங்கிரஸ் காரர்கள் தாக்கியதால் ஊர்வலம் போராட்டமாக மாறியது. தமிழகத்தின் பெருநகரங்கள் அனைத்திலும் கலவரமாக போராட்டம் மாறியது. மாணவர் தலைவர்கள் இந்தி நூலை தீ வைத்து கொளுத்தினர்.

    ஜனவரி 26 ஆம் நாள் சென்னையில் சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த போராட்டத்தில் அண்ணா, கருணாநிதி, அன்பழகன் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் 27 ஆம் தேதி இந்திய எதிர்ப்பை காட்டுவதற்காக அரங்கநாதன் என்னும் இளைஞர் தீக்குளித்து உயிர் விட்டார்.

    போராட்டத்தின் காரணமாக கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் காரணமாக ராஜேந்திரன் என்ற மாணவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

     திருச்சி கீரனூரில் முத்து என்ற இளைஞர் இந்திய எதிர்ப்பு காட்டுவதற்காக நஞ்சு உண்டு இறந்தார்.

   திருப்பூரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது அதில் வெங்கடேசன் ராமசாமி என்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

   கோவை சத்தியமங்கலத்தில் முத்துவும், திருச்சி கே அய்யம்பாளையத்தில் வீரப்பனும் இந்திய எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தீக்குளித்து உயிரிட்டனர்.

    பொள்ளாச்சியில் நடந்த போராட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். மதுரை கூடலூரில் போராட்டம் வன்முறையாக மாறியதால் இராமச்சந்திர சிங், தேவராசு ஆகிய காவலர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.

   தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து நிலைமை மோசமானதால் மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம்,அழகேசன் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினமாக செய்வதாக அறிவித்து பின்னர் ஐந்து நாட்களில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

  மாணவர்களைப் போராட்டம் செய்யத் தூண்டியதாக கருணாநிதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.தஞ்சையில் சக்கரபாணி என்ற மாணவர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து உயிர் விட்டார்.

   மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதற்காக தமிழக அரசும் மத்திய அரசும் பலவிதமான அடக்குமுறைகளை மேற்கொண்டன.

    அரசு ஹிந்தி திணிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதன் காரணமாக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்து. 1965 மார்ச் 16ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

†††† நன்றி.... தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ††††

சனி, 19 ஜூலை, 2025

புறநானூறு - இரண்டு பாடல்கள்


நூல் குறிப்பு

  எட்டுத்தொகை நூற்களில் புறக்கருத்துக்களைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டது புறநானூறாகும். இது 4 முதல் 40 அடி வரையிலான பாடல்களைக் கொண்டது. இந்நூல், 157 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இந்நூலைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுப்பித்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

 1.செல்வத்துப் பயனே ஈதல்!

       புறநானூறில் 189 வது பாடலாக காணப்படுவது மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரன் பாடிய இப்பாடலாகும். 

    இப்பாடல் பொதுவியல் திணை சார்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளை தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். மேலும், பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறையில் பாடப்பட்டுள்ளது. பொருண்மொழிக்காஞ்சி என்பது உலகத்து உயிர்களுக்கு நலம் செய்யும் இன்மை மறுமைக் கடமைகளை எடுத்துக் கூறுவதாகும். 

பாடல் விளக்கம்

         "குளிர்ந்த கடல் நீரால் சூழப்பட்ட இவ்வுலகத்தை முழுவதுமாக ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்யும் மன்னனாக இருந்தாலும், தனது உணவுக்காக இரவும் பகலும் தூங்காமல் காட்டில் வேட்டையாடி அலையும் பாமர மக்களாக இருந்தாலும் இருவருக்கும் பொதுவானது உண்பது நாழி உணவு, உடுப்பது இரண்டு முழ ஆடை மட்டுமே. எனவே பெற்ற செல்வத்தினை பலருக்கு பகிர்ந்து ஈந்து மகிழ்வதே அச் செல்வத்தின் பயனாகும். அதுவே பேரின்பத்தைக் கொடுக்கும்." என ஈகையின் சிறப்பினை நக்கீரனார் இப்பாடலில் எடுத்துக் கூறியுள்ளார்.

---------------------

2.நாடா கொன்றோ! காடா கொன்றோ!

    புறநானூறில் 187 ஆவது பாடலாக அமைந்துள்ளது ஔவையார் பாடிய இப்பாடலாகும்.

     இப்பாடல் பொதுவியல் திணை சார்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளை தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். மேலும், பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறையில் பாடப்பட்டுள்ளது. பொருண்மொழிக்காஞ்சி என்பது உலகத்து உயிர்களுக்கு நலம் செய்யும் இன்மை மறுமைக் கடமைகளை எடுத்துக் கூறுவதாகும். 

பாடல் விளக்கம்

        "நாடு என்பது மருத நிலம், காடு என்பது முல்லை நிலம், அவல் என்பது நெய்தல் நிலம், மிசை என்பது குறிஞ்சி நிலம். ஆடவர் என்பது இருபால் மக்களைக் குறிக்கும். இந்த நான்கு வகையான நிலங்களில் வாழும் மக்கள் தீமையை விட்டு நல்வழியில் வாழ்ந்தால் அவர்கள் வாழும் நிலங்கள் சிறந்ததாக விளங்கும்" - என்றக் கருத்தினை இப்பாடலில் ஔவையார் எடுத்துக் கூறியுள்ளார்.

****** இராஜாலி******

ஐங்குறுநூறு - நெற் பல பொலிக


நூல் குறிப்பு

    எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு, ஐந்து திணைகளுக்கும் நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களைக் கொண்டது. மூன்று முதல் ஆறு அடிவரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஐங்குறுநூறில் உள்ள குறிஞ்சித் திணை பாடலை கபிலரும், முல்லைத்திணை பாடலை பேயனாரும், மருத திணை  பாடலை ஓரம்போகியாரும், நெய்தல் திணை  பாடலை அம்மூவனாரும், பாலைத்திணை பாடலை ஓதலாந்தையாரும் பாடியுள்ளார்கள். இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர் கிழார், தொகுப்பித்தவர் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர் ஆவார். 

வேட்கைப் பத்து 

      ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணை பாடல்களை ஓரம் போகியார் பாடியுள்ளார். அதில் வேட்கைப்பத்தும் ஒன்று. வேட்கைப் பத்து என்பது 'விருப்பம்,' 'வேண்டுதல்' எனப் பொருள்படும். தலைவியும், தோழியும் தலைவன் நலம் கருதி வேண்டுவதாக பத்துப் பாடல்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது. 

நெற் பல பொலிக! பொன் பெரிது சிறக்க! 

      தோழியின் கூற்றாக அமைந்த இப்பாடலில் "தலைவி; அரசன் வாழ்க! அவன் ஆட்சி செய்யும் நாடும் வாழ்க! நாட்டில் நெல் வளம் பெருகுக! பொன் வளம் பெரிது சிறந்து விளங்குக!" என வேண்டி நின்றாள். ஆனால், நானோ; " காஞ்சி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கும் மருத நிலத்து வயல்களில் சிறு மீன்கள் துள்ளி விளையாடும் மருதநில தலைவனும், அவனுக்குத் துணையாக நிற்கும் பாணனும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி நின்றேன்." எனக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

***** இராஜாலி *****

ஞாயிறு, 13 ஜூலை, 2025

திணை வாழ்வியல்

  

 ஐந்திணைகள்

 சங்க கால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்துக் கொண்டார்கள். காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பகுத்துக் கொண்டனர். இவ் ஐந்து நிலங்களில் காணப்படும் இயற்கைச் சூழல், உயிரியல் நிலைப்பாடுகள், பயன்பாட்டுப் பொருட்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கருப்பொருட்களை வகுத்துக் கொண்டனர்.

     குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர். இவர்களின் தொழில் தேனெடுத்தல். தெய்வம் முருகன். புணர்தலும், புணர்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். குறிஞ்சி நிலத்தின் பெரும் பொழுதாகக் கூதிர் காலம் மற்றும் முன்பனிக் காலத்தைக் கொள்வர். சிறு பொழுதாக யாமம் காணப்படுகிறது.

     முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆட்சியர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்த்தல், தெய்வம் திருமால். இருத்தலும், இருத்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். முல்லை நிலத்தின் பெரும்பொழுது கார்காலம், சிறுபொழுது மாலை ஆகும்.

     மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர். இவர்கள் உழவுத் தொழில் செய்து வந்தனர். தெய்வம் இந்திரன். ஊடலும், ஊடல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள். ஆறு பெரும் பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. சிறுபொழுது வைகறை ஆகும்.

   நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரவர், பரத்தியர். தொழில் மீன் பிடித்தல். தெய்வம் வருணன். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள் ஆகும். ஆறு பெரும்பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. ஏற்பாடு இவர்களின் சிறு பொழுதாகும். 

   பாலை என்பது மணலும், மணல் சார்ந்த இடமும். இங்கு வாழ்ந்த மக்கள் எயினர்கள். இவர்கள் வழிப்பறி செய்வதை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்களின் தெய்வம் கொற்றவை. உரிப்பொருள் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆகும். பாலை நிலத்திற்கு வேனில் மற்றும் பின் பனி பெரும்பொழுதுகள் ஆகும். நண்பகல் சிறுபொழுதாகும்.    

     மேற்கண்ட நிலையில் முதல், கரு, உரிப்பொருளின் அடிப்படையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு ஐந்து நிலத்தில் வாழ்ந்த மக்களும் தங்கள் வாழ்க்கை கூறுகளைக் களவு நிலை, நின்ற கற்பு வாழ்வினை 'அகம் 'என்றும், வீரம், ஈகைப் போன்ற சிறப்பு வாழ்வினை 'புறம்' என்றும் இரண்டாகப் பகுத்து வாழ்ந்தனர்.

----------------------

அக வாழ்வியல்

        பண்டையத் தமிழர்கள் தங்களின் அகம் சார்ந்த வாழ்வியலைக் களவு, கற்பு என இரண்டு நிலைகளாக வகுத்தனர். 

   திருமணத்திற்கு முன்பு தலைவனும் தலைவியும் சந்தித்து, காதல் கொண்டு ஒழுகுவது களவு ஒழுக்கம் எனப்பட்டது.

  திருமணத்திற்கு பின்பு கணவனும் மனைவியும் இணைந்து நடத்தும் இல்லறச் சிறப்பு கற்பொழுக்கம் ஆகும். 

   களவு, கற்பு ஆகிய இரண்டும் சில ஒழுக்க நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

களவு ஒழுக்க நிலைகள் 

களவு ஒழுக்கம் பின்வரும் நான்கு நிலைகளில் அமைகின்றது. அவை,

1. இயற்கைப் புணர்ச்சி,

2. இடந்தலைப்பாடு,

3.பாங்க்ற் கூட்டம்,

4. பாங்கியிற் கூட்டம்.

 என்பனவாகும்.

1. இயற்கைப் புணர்ச்சி  

        தலைவனும் தலைவியும் விதி வயத்தால் சந்திக்க நேரும். சந்தித்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறிப்பறிந்து உள்ளப் புணர்ச்சிக் கொள்வார்கள். இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். 

2. இடந்தலைப்பாடு 

    இயற்கைப் புணர்ச்சியில் முதல் நாள் தலைவியைச் சந்தித்த தலைவன், மறுநாளும் அவ்விடத்திற்குச் சென்று தலைவியைச் சந்திக்கலாம் எனக் கருதி அவ்விடத்திற்குச் செல்ல, தலைவியும் அதே எண்ணத்தோடு அங்கு வந்து இருவருக்கிடையே சந்திப்பு நிகழும் இது இடந்தலைப்பாடாகும். 

3. பாங்கற் கூட்டம் 

      பாங்கன் என்பவன் தோழன். இடந்தலைப்பாட்டிற்குப் பின் தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன், தோழரின் உதவியை நாடுவான். தோழனும் அவர்கள் காதலுக்கு துணை நிற்பான். இது பாங்கற் கூட்டமாகும்.

4. பாங்கியிற் கூட்டம் 

        பாங்கி என்பவள் தலைவியின் தோழி. தோழனின் உதவியால் தலைவியைச் சந்திக்க முடியாதபோது, தலைவன் தலைவியைச் சந்திக்க தலைவியின் தோழியின் உதவியை நாடுவான். இதற்கு பாங்கியிற் கூட்டம் என்று பெயர். இது,

1. பாங்கி மதி உடன்பாடு,

2. சேட்படை 

3. பகற்குறி,

4. இரவுக்குறி,

5. வரைவு கடாதல்,

6. ஒருவழித் தணத்தல், 

7. அறத்தோடு நிற்றல்,

8. உடன்போக்கு,

போன்ற பல நிலைகளில் பாங்கியிற் கூட்டம் அமையும்.

1. பாங்கி மதி உடன்பாடு

     தலைவன் தலைவி மீது கொண்ட காதலை தோழியிடம் கூறி அவள் உதவியை நாடி நிற்பான். இது பாங்கி மதி உடன்பாடு எனப்படும்.

2. சேட்படை

     உதவி கேட்டு நிற்கும் தலைவனுக்கு உடன்படாமல் தோழி அவனை அவ்விடத்தை விட்டு நீங்குமாறு சொல்வது சேட்படை என்பதாகும்.

3. பகற்குறி

 தோழியின் உதவியுடன் தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் பகற்பொழுதில் ஓர் இடத்தில் சந்தித்து அன்புக் கொள்வது பகற்குறியாகும்.  

4. இரவுக்குறி

   இரவு நேரத்தில், இல்ல வளாகத்திற்குள் தலைவனும் தலைவியும் சந்தித்து மகிழ்வது இரவுக்குறியாகும்.

 5. வரைவு கடாதல்

     பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன் திருமணத்தில் நாட்டமின்றி இருப்பான். அப்பொழுது தோழி தலைவியை திருமணம் செய்து கொள்ளும்படித் தலைவனை வற்புறுத்துவது வரைவு கடாதல் ஆகும்.

6.ஒருவழித் தணத்தல்

      தலைவனும் தலைவியும் இரவுக்குறியிலும் பகல் குறியிலும் பலமுறை சந்தித்து அன்புக் கொண்ட நிகழ்வினை பலரும் அறிந்து பலவாறு பேசுவர். அது அலர் எனப்படும். அந்த அலர் அடங்குவதற்காக தலைவன் சிறிது காலம் தலைவியைச் சந்திக்க வருவதைத் தவிர்ப்பான். இது ஒருவழித் தணத்தல் எனப்படும்.

7. அறத்தோடு நிற்றல்,

      அறத்தோடு நிற்றல் என்பது, தலைவன், தலைவியின் காதலை தலைவியின் பெற்றோருக்கு தெரிவிக்க முயல்வதாகும். தோழி செவிலி தாயிடமும், செவிலித்தாய் நற்றாயிடமும், நற்றாய் தந்தையிடமும் கூறுவதாக அறத்தோடு நிற்றல் அமையும். மேலும் அறத்தோடு நிற்றல் இரண்டு சூழ்நிலைகளில் நிகழும். தலைவி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு, உடல் மெலிந்து, வெறியாட்டு நிகழ்த்தும் போதும், அல்லது தலைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிகழ்த்த முயலும் போதும் அறத்தோடு நிற்றல் நிகழும்.

8. உடன்போக்கு

    களவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த தலைவன் அலர் போன்ற காரணங்களாலும், தலைவியின் அறிவுறுத்தலாலும் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முற்படுவான். இதற்கு உடன் போக்கு என்று பெயர். இதற்குரிய ஏற்பாடுகளைத் தோழியே செய்வாள். 

 மேற்கண்ட நிலைகளில் களவு ஒழுக்கங்கள் அமையும்.

------------------

கற்பொழுக்க நிலைகள் 

   கற்பு வாழ்க்கை என்பது பொதுநிலையில் திருமணத்திற்குப் பின்பு அமையும் கணவன் மனைவி ஆகியோரின் குடும்ப வாழ்க்கை ஆகும்.

    கற்பு என்பதை, திருமணத்திற்குப் பின் ஏற்படும் மகிழ்ச்சி, ஊடல், கூடல், ஊடல் உணர்த்தும் பிரிவு முதலானவை அமைந்த நிலை என நற்கவிராச நம்பி, நம்பியகப் பொருளில் கூறுகிறார்.

 இல்லற மகிழ்ச்சி

    இல்லற வாழ்க்கையில் தலைவன் தலைவியின் சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு தலைவன் மகிழ்ச்சி கொள்வதோடு, தலைவனின் அன்பை கண்டு தலைவியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவன் தலைவியின் சிறப்பான வாழ்வைக் கண்டு தோழியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவியின் பொறுப்பான இல்லற வாழ்க்கையைப் பார்த்து செவிலி தாயும் மகிழ்ச்சிக் கொள்வாள்.

பிரிவின் வகைகள்

 இல்லறத்தில் பிரிவு என்பதும் நிகழும் குறிப்பாக,

  சில நேரங்களில் தலைவன் பரத்தையர் பால் பற்றுக்கொண்டு தலைவி விட்டுப் பிரிந்து செல்வான். இது பரத்தையர் பிரிவாகும்.

    சில நேரங்களில்  தலைவியை விட்டுத் தலைவன் கல்விக்காக பிரிந்து செல்வான் இது ஓதல் பிரிவு ஆகும்.

  போர் செய்வதற்காகத் தலைவியை விட்டு தலைவன் பிரிந்து செல்வான் இது காவல் பிரிவு ஆகும்.

     பக்கத்து நாட்டு மன்னனுக்கு தூது செல்லும் நிலையில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வான் இது தூதுப் பிரிவாகும்.

   நண்பனுக்காகத் தலைவன் தலைவியை விட்டு சில நேரம் பிரிந்து செல்வான் இது துணைவையின் பிரிவு ஆகும்.  

  இல்லறம் இனிது நடத்த பொருளீட்ட வேண்டி தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான் இது பொருள்வயின் பிரிவு ஆகும்.

 இவ்வாறு கற்பியலில் இல்லற மகிழ்ச்சியும், பிரிவு துன்பமும் இருக்கும்.

***** இராஜாலி *****

திங்கள், 20 ஜனவரி, 2025

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்


   ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளை மட்டுமே கையாள முடிந்தது. இத்தகைய சிக்கலைத் தீர்த்து, பல மொழிகளை ஒரே நேரத்தில் கையாளத் தேவையான ஒரு குறியேற்ற முறையை அமைக்க உலக அளவில் மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து உலகின் அனைத்து மொழிகளையும் கணினியில் பயன்படுத்தும் வகையில் ஒரு குறியேற்றத்தை உருவாக்க முடிவுசெய்தது. இம்முடிவின் விளைவாக 1991இல் ஒருங்குறிச் சேர்த்தியம் (Unicode Consortium) என்ற கூட்டமைப்பிளை உருவாக்கினர். இதன்வழி உருவாக்கப்பட்டது தான் Universal Code எனப்படும் யுனிக்கோட் ஒருங்குறி ஆகும்.

யுனிக்கோட் - செயல்பாடு 

          இந்த ஒருங்குறிச் சேர்த்தியம் 16 பிட்டு அமைப்பு கொண்ட யுனிகோடு (Unicode) என்னும் குறியேற்றத்தை வடிவமைத்தது. இந்தக் குறியேற்ற அமைப்பில் 65,536 இடங்கள் உள்ளன. இம்முறை உலக மொழிகள் அத்தனைக்கும் தேவையான  இடங்களைக்  கொண்டிருந்தது.  ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் 128 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த பட்டியலைக் கொடுத்தது. அதில் தமிழுக்கும் 128 இடங்களே ஒருங்குறியில் ஒதுக்கப்பட்டு  இருந்தது.

       குறிப்பாக, 16Bit குறியேற்றத்தில் உள்ள 65,536 இடங்களில் தமிழ் எழுத்துகள் 2944 முதல் 3071 வரை உள்ளன.  இந்த 128 இடங்களிலும் 50 இடங்கள் காலியாக உள்ளன.

          இதில் உயிர் எழுத்துகள் 12, அகரம் ஏறிய மெய்யெழுத்துகள் 18 ஆகிய 30 எழுத்துகள் உள்ளன. இவற்றைக் கொண்டு உயிர்மெய் எழுத்துகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும். தமிழில் உள்ள எல்லா எழுத்துகளுக்கும் தனித்தனி இடங்கள் இல்லாததால் இரண்டு எழுத்துகளைக் கொண்டு மூன்றாவது எழுத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குத்தான் இடையூக்கி மென்பொருள்கள் உதவுகின்றன. 

    2000ஆம் ஆண்டு Microsoft நிறுவனம் தான் வெளியிட்ட Windows 2000 என்ற இயங்குதளத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட Latha என்ற எழுத்துருவைச் சேர்த்து வழங்கியது. இன்றளவும் விண்டோஸ் இயங்குதளங்களில் யுனிகோடு குறியேற்றத்தில் தட்டச்சு செய்ய இயல்பிருப்பாக (Default) லதா எழுத்துருதான் பயன்படுத்தப்படுகிறது. இணையதளங்கள் முழுமையும் இந்த யுனிக்கோடு முறையில் லதா எழுத்துருவில் இருக்கிறது.

   யுனிக்கோடு தமிழ்க் குறியேற்றத்தில் உயிர் எழுத்துகள்(12), அகரமேறிய மெய் எழுத்துகள்(18), ஆய்தம்(1) ஆக 31 எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே பிற உயிர்மெய் எழுத்துகளை உள்ளிடுவதற்குத் தனியொரு மென்பொருள் தேவைப்படுகிறது. இதனைத் தவிர்க்கத் தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்த எழுத்துகளையும் சேர்த்து 313 இடங்களைக் கொண்டதாகத் தமிழ் அனைத்து எழுத்துக் குறியேற்றம் (Tamil All Character Encoding-TACE) என்ற ஒன்றினை 16பிட் குறியேற்றத்தில் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக  தற்போது  தமிழுக்கான அனைத்து எழுத்துகளுக்கும் யுனிக்கோடு குறியேற்றத்தில் இடம் கிடைத்துள்ளது.

யுனிக்கோட் - பயன்கள் 

   யுனிக்கோட் வருகையால் இணைய செயல்பாடுகள் புதிய வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக,

#.உலக மொழிகளுக்கான பொதுவான எழுத்துக்கள் கிடைத்துள்ளன.

#. எடுத்துருக்களின் சிக்கலின்றிப் பயன்படும் பொது மொழியாக யுனிக்கோட் காணப்படுகிறது.

#.எல்லா இயங்கு தளங்களிலும் இயங்கக் கூடியதாக விளங்குகிறது.

#. முழுவதும் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்ட தமிழ் இயங்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை போன்ற பயன்பாடுகள் யுனிக்கோட் வருகையால் தமிழ் இணையங்களில் ஏற்பட்டுள்ளது. 

தமிழ் யுனிக்கோட் - சிக்கல்கள் 

     தமிழ் மொழியில் யுனிக்கோடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் பொழுது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, விண்டோஸ் 98 போன்ற பழைய இயங்கு தளங்களில் பயன்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. மேலும் சில அச்சு மென்பொருள்களிலும் யுனிக்கோட் பயன்பாடு ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது.

    இத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணினித்தமிழ்ச் சங்கம், இன்ஃபிட் ஆகிய தொழில் நுட்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்துப் புதிய தமிழ்க் குறியீட்டு முறைக்கான பரிந்துரைகளையும், அதன் முறையில் உருவாக்கப்பட்ட சில எழுத்துருக்களையும் வெளியிட்டன. புதிய யூனிக்கோட் முறையில் சீர்திருத்தம் காண அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் தலைமையில் பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட தரக்குழு அமைத்து அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

    இக்குழுவின் முயற்சியால் புதிய யுனிக்கோட் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், யுனிக்கோடி சர்வதேசக் கூட்டமைப்பான கன்சார்டியம் இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று குறியீட்டு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர தயக்கம் காட்டுகிறது. எனினும் இத்தகைய சிக்கல்களைப் பொருட்படுத்தாமல் தமிழ் யுனிக் கோர்ட் பயன்பாடு சிறந்த நிலையில் காணப்படுகின்றது.

@ உதவி -கணினித் தமிழ் 

**** இராஜாலி****


சனி, 11 ஜனவரி, 2025

இணையதள மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள்

 அறிமுகம் 

    எந்தவொரு அமைப்பும் தோன்றுவதற்கு முன்னர் மாநாடுகளும் கருத்தரங்கங்களும் அவசியமாகின்றன. தமிழில் இணையத்தளங்கள் செம்மையுற அமைவதற்கு பல கருத்தரங்குகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. இவை அரசாலும், சில தனியார் அமைப்புகளாலும் நடத்தப்பட்டன.

முதல் தமிழ்க் கணினி கருத்தரங்கு

   'தமிழும் கணிப்பொறியும்' என்ற தலைப்பில் முதன் முதலில் கணினித்தமிழ் கருத்தரங்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5,6 தேதிகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித்துறைப் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தியின் அவர்களின் முன் முயற்சியால் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

   தமிழ் எழுத்துருக்கள், சொற் செயலிகள், கணினி கலைச் சொற்கள், மற்றும் விசைப்பலகையைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டன. இணையத்தமிழ் வரலாற்றில் இக்கருத்தரங்கம் ஒரு திருப்பமாக அமைந்தது.

முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு

   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் 'தமிழ் இணையம் 97' என்னும் பொருளில் முதல் தமிழ் இணைய மாநாடு 1997ஆம் ஆண்டு மே 17,18 தேதிகளில் நடைபெற்றது. சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் முன் முயற்சியால் இம்மாநாடு நடத்தப்பட்டது.

   இம்மாநாட்டில் தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து தமிழ் மென்பொருள் வல்லுநர்களும், கணினித்தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் இணையத்தளங்களில் தமிழ்ப் பொருண்மைகளை மிகைப்படுத்துதல், விசைப்பலகையைத் தரப்படுத்துதல், தமிழ் எழுத்துருக் குறியீட்டைத் தரப்படுத்துதல். போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

      இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில்  1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7,8 தேதிகளில் 'தமிழ்' இணையம் 99' (Tamil Net 99) என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது.

   இம்மாநாட்டில் விசைப்பலகைத் தரப்பாடு தொடர்பாகவும், எழுத்துரு தொடர்பாகவும் வழங்கப்பட்ட கருத்தாய்வுகளைத் தொகுத்து ஒருங்கிணைப்பு செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

   உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. இம்மாநாட்டின் மூலமாக ஒரே தமிழ் எழுத்துமுறையாக 'டாம்' (TAM) வகையும், ஆங்கில தமிழ் கலப்பு எழுத்துரு முறையாக ‘டாப்' (TAB) வகையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

2. தமிழ் மென்பொருள் ஆராய்ச்சி மானியக்குழு ஒன்று அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3 உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்காக இணையம் வாயிலாக உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) ஒன்றை நிருவுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று இப்பல்கலைக்கழகம் 'tamilvu.org' என்ற பெயரில் பல்வேறு வளர்ச்சி பெற்று இயங்கிவருகிறது.

    இம்மாநாடு தமிழ் இணைய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு -2000

மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 

  மூன்றாவது உலக தமிழ் இணைய மாநாடு  சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்புர் தேசயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் மகிழ்நன் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு 2000- ஆம் ஆண்டு ஜீலை மாதம் 22,23,24- ஆகிய நாட்களில் 'தமிழ் இணையம் 2000' எனும் தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 'உத்தமம்' உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்று தமிழிலும் INFIT International Firum for Information Technology in Tamil என்று ஆங்கிலத்திலும் குழுவொன்று உருவாக்கப்பட்டது. -

   உத்தமம் குழு உருவான பின்னர் பல்வேறு ஆய்வுப் பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை, தமிழ் கலைச்சொல் தொகுப்பு, யூனிகோடு தமிழ் ஆய்வு, இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல், தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரப்பாடு, தமிழ் எழுத்துரு படித்தறிதல் (Tamil OCR), லீக்னஸில் தமிழ் (Tamil in Linux), தமிழ் அனைத்து எழுதுதுரு 16-பிட்டு தரம் போன்ற ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

    இக்குழுவில் உலகம் முழுவதிலும் வாழும் பல்வேறு தமிழ் கணினி வல்லுநர்கள் ஒன்றிணைந்தனர். இக்குழு மூலமே இனிவரும் காலங்களில் உலக இணையத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டன.

நான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு

    நான்காம் உலகத் தமிழ் இணைய மாநாடு 2001-ஆம் ஆண் ஆகஸ்டு மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இம்மாந 'வளர்ச்சிக்கான வழிகள்' எனும் கருப்பொருளை மையமா கொண்டு நடத்தப்பட்டது.

    இம்மாநாட்டில் 'தமிழ் மரபு அறக்கட்டளை' (Tamil Heritage Foundation) என்னும் அமைப்பு ஜெர்மனி பேராசிரியர் நா. கண்ணன் தலைமையில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பிற்கு அந்நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமுவேல் அவர்கள் 10000 அமெரிக்கா டாலர் நிதியை வழங்கினார். சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் சுமார் ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு 

    ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27,28,29ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 'மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியை குறைத்தல்' - ‘Briging the Digital divide' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.

   இம்மாநாட்டில் தமிழ்த்தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி உள்ளிட்ட பல பணித்திட்டங்கள் ஆய்வ செய்யப்பட்டதுடன், தமிழ் யூனிகோடு குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு, உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டி ஆகியன இடம் பெற்றன.

   இம்மாநாட்டில் தான் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்' அமெரிக்காவில் ஒரு பதிவுபெற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. மேலும் இம்மாநாட்டில் மின்னஞ்சல் இணையத்தளங்கள் வழி தகவல் பரிமாற்றம், பல்லூடக அடிப்படையில் இணையவழிக் கல்வி, இணையவழி நூலகம், மின்-ஆளுமை போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

    ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22,23,24- ஆம் தேதகளில் 'தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம்' என்னும் தலைப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 

     ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,12-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 'நாளைய தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் -Tamil IT for Tomorrow' என்னும் கருப்பொருளில் நடைபெற்றது.

எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு

     2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாடு 'கணினிவழிக் காண்போம் தமிழ்' என்னும் மையப்பொருளில் நடைபெற்றது. இணையவழிக் கல்வி மொழிப் பகுப்பாய்வு, தமிழ்த்தரவுகள், மின்னகராதிகள் ஆகிய பொருண்மையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.

ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

 தமிழ்மொழி செம்மொழியென மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விழாவாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் 2010- ஆம் ஆண்டு ஜீன் மாதம் 23-27 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 'இணையம் வளர்க்கும் தமிழ்' என்னும் கருப்பொருளில் நடத்தப்பட்டது.

  இம்மாநாட்டில் இணையவழித் தமிழ்க் கற்றல்-கற்பித்தல், கணினிவழி மொழியியல் ஆய்வுகள், சொற்திருத்திகள், பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வுகள், எழுத்து உணரி செயற்பாடுகள், கையடக்க கருவிகளில் தமிழ், தமிழ் ஒருங்குறி போன்ற தலைப்பினை ஒட்டி பல்வேறு கட்டுரைகள் படிக்கப்பட்டன. இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி (Unicode)யே இனி அரசின் அதிகாரப்பூர்வமான எழுத்துருவாக பயன்படுத்தப்படும் என் அறிவிக்கப்பட்டது.

பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

   உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. அதற்கு அடுத்து பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டினை உத்தமம் அமைப்பு 2011 ஜீன் மாதம் 17முதல்19-ஆம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹெராய்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் அரங்கநாதன் முன்னின்று நடத்தினர்.

பதினொன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு

  2012 ஆம் ஆண்டு, தமிழகத்தின் சிறப்புமிக்க நகரமான சிதம்பரத்தில் பதினொன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

பன்னிரண்டாவது உலகத் தமிழ் கணினி மாநாடு

       2013 ஆம் ஆண்டு, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பன்னிரண்டாவது உலகத் தமிழ் கணினி மாநாடு  நடைபெற்றது. 

 பதிமூன்றாவது  தமிழ் இணைய மாநாடு

   2014 ஆம் ஆண்டு, புதுச்சேரியில் 13வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

 பதினான்காவது  தமிழ் இணைய மாநாடு

    2015 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில்  14ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

பதினைந்தாவது தமிழ் இணைய மாநாடு

   2016 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில்  பதினைந்தாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

பதினாறாவது தமிழ் இணைய மாநாடு

    2017 ஆம் ஆண்டு, கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் பதினாறாவது தமிழ் இணைய மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழ் இணைய உலகில் ஆழக்கற்றல் (Deep Learning) தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

 பதினேழாவது  தமிழ் இணைய மாநாடு

     2018 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழ் இணைய உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளை மையமாகக் கொண்டது.

பதினெட்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

    2019 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழ் இணைய உலகில் தானியங்கிக் கருவிகளில் தமிழ் மொழிப் பயன்பாடு (Tamil Robotics and Language Processing) என்ற மையக் கருத்தை மையமாகக் கொண்டது.

 பத்தொன்பதாவது தமிழ் இணைய மாநாடு 

     2020 ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று காரணமாக  முதல் முறையாக முழுமையாக இணைய வழியாகவே 19-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

 இருபதாவது தமிழ் இணைய மாநாடு

    2021 ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போதும் இணைய வழியாகவே 20-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

 இருபத்தி ஒன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

   2022 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து 21-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியது. 

   ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைகளில் ஒன்று இணையதள அறிவியலாகும். எனவே, அறிஞர்கள் இவை போன்ற மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி இணைய வளர்ச்சியின் அடுத்த கட்ட பயன்பாட்டை நோக்கி ஆய்வு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

****** இராஜாலி ******

இணையத்தமிழ் - இணையத் தமிழ் பயன்பாடு

 அறிமுகம்

   இன்றைய அறிவியல் யுகத்தில் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி மிக உயர்ந்த ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. அறிவியல் துறை மட்டுமல்லாமல் நமது அன்றாட பயன்பாடுகளிலும் கணினியின் பயன்பாடுகள் வியக்கத்தக்க வகையில் காணப்படுகின்றது. 

     மனிதர்களின் அதி தேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் மொழி நுழைந்து விட்டது. இணையம் வழியாக தமிழ் மொழி உலகில் அனைத்து இடங்களுக்கும் சென்று விட்டது. அத்தகைய இணையத் தமிழின் பயன்பாடு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இணையம் ஓர் அறிமுகம்

  இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் கணிப்பொறி முதன்மை வகிக்கிறது. தொடக்கத்தில் ஆங்கில மொழியின் எழுத்துருக்களைப் பயன்படுத்தி கணிப்பொறியின் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இன்றளவும் கணினியில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. 1969 இல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஜான் பாஸ்டல் என்பவர் 500 க்கும் மேற்பட்ட கணினிகளை இணைத்து இணையம் என்ன வடிவத்திற்கு வித்திட்டார். 

    1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பல தமிழ் அறிஞர்களின் முயற்சியின் காரணமாக, கணினியில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் பெருகி வருகின்றன.  

      இன்றைய நிலையில், ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு அதிக இணைய அமைப்புகள் உள்ளன. தமிழ் மொழியில் சுமார் 2000 இணைய அமைப்புகளும் ஒரு கோடிக்கு மேற்பட்ட இணையப் பக்கங்களும் காணப்படுகின்றன. 

    ஆரம்பகாலத்தில் தமிழ் இணைய பக்கங்களைப் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாளம், முரசு போன்ற மென்பொருட்களும் எழுத்துருக்களும் தோன்றிய பின்னர் தமிழ் இணையப் பயன்பாடு பல்வேறு தளங்களில் விரிவடைந்தது. 

இணையத்தின் பயன்பாடு 

 இணையத்தின் பயன்பாடு என்பது நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. தேடுபொறிகள் (Search Engines) மின்னஞ்சல்(email), இணையதளங்கள்(websites), வலைப்பூக்கள்(Blogs), சமூக இணையதளங்கள் (Twitter, Face - book), மின் ஆளுகை (e-Governance), மின் வணிகம் (e-Commerce) போன்ற பல நிலைகளில் மனித பயன்பாட்டில் துணை நிற்கின்றது.

     இணையதளம் மூலமாக நமக்குத் தேவையான செய்திகளை பனுவல் (Text), படம் (Image), ஒலிக்கோப்பு (Audio), நிழல் படக் காட்சிகள் (Video) போன்ற பல்வேறு வடிவங்களில் பெறுகிறோம். மின்னஞ்சல் அனுப்புதல், கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், கலந்துரையாடல், இணைய வழி வகுப்புகள், தொலைக்காட்சிகளை காணுதல் போன்ற அனைத்து நிலைகளிலும் மனித வாழ்வில் ஒரு கூறாக இணையதளம் ஆகிவிட்டது.

இணையத் தொழில்நுட்பத்தின் அடிப்படை 

    இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின்(Networks ) கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும் சொல்லாகும். உலகில் உள்ள கணினிகளை இணைத்து, தகவல் பெறவும் தகவல் அளிக்கவும் சேமிப்பதற்கும் பயன்படும் ஒரு வலை பின்னல் அமைப்பாகும். இத்தகைய தொழில்நுட்பத்தையே உலகளாவிய வலை (World Wide Web - www) என வழங்குகிறோம்.

     இணையத்தில் இருந்து இணையப் பக்கங்களைப் பார்வையிட உதவுவது http என்று சுருக்கமாக அழைக்கப்படும் hyper text transfer protocol என்பதாகும். இணையத்தில் உள்ள கோப்புகளைப் பார்வையிட உதவும் நெறிமுறை file transfer portocol என்பதாகும். இது FTP என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இணையதளமும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து, com, org, edu போன்ற எழுத்துக்களைக் கொண்டு முடிகின்றன. com என்பது commercial, edu என்பது education, org என்பது organization என்பவற்றைக் குறிக்கும் சுருக்கச் சொல்லாகும்.

     இன்றைய நிலையில், மேஜை கணினி, மடிக்கணினி, பலகைக் கணினி, செல்லிடம் பேசி போன்ற இணையதள பயன்பாட்டுக் கருவிகளில் ஏதாவது ஒன்று நம்மிடம் காணப்படுகின்றன.

இந்தியாவில் இணையத்தின் தோற்றம்

   உலக நாடுகள் பலவற்றிலும் இணையத்தின் சேவை பரவலாயின. இந்தியாவில் முதன்முதலில் பொது மக்களுக்காக இணையம் 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஆறு நகரங்களில் தொடங்கி வைக்கப்பட்டது. 'விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடெட்' (Videsh Sanchar Nigam Limited - VSNL) இந்தியாவின் ஒரே இணைய -இணைப்பு வழங்கும் சேவையாளராக இருந்தது. பின்னர் 1998-இல் இருந்து தனியாருக்கும் உரிமம் வழங்கப்பட்டது. 1999-இல் வெப்துனியா (webdunia.com) இந்திய மொழிகளில் முதலில் இந்தி மொழியில் இணையத்தின் சேவையை அறிமுகம் செய்தது. இணையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சிக்காக இந்தியப் பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்புக்கான வரைமுறைச் சட்டம் 2000-இல் இயற்றப்பட்டது.  2001-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே துறை (Indian Railway Catering and Tourism Centre - IRCTC) இணைய வழி பயணச்சீட்டுப் பதிவினை தொடங்கியது. பின்னர் படிப்படியாக வங்கி, விமானச் சேவைக்காகவும் இணையப் பயன்பாடு விரிவடைந்தன. இன்றைக்கு பல்வேறு நிறுவனத்தின் குறிப்பாகச் செல்போன் நிறுவனங்களும் இணையத்தின் சேவையை வழங்கி வருகின்றன. இன்று இந்தியாவில் இணையச் சேவை பெரும்பாலான இந்திய மொழிகள் அனைத்திலும் நடைபெறுகிறது.

தமிழ் இணையத்தின் பயன்பாடு 

  1996 ஆம் ஆண்டு தான் தமிழ் மொழி இணையத்தில் ஏற்றப்பட்டது. இந்திய மொழிகளில் இணையத்தில் ஏறிய முதல் மொழி தமிழ் மொழியாகும்.

    தமிழ் மொழியை இணையத்தில் ஏற்றுவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு இணையற்றதாகும். அவர்களின் கடின உழைப்பின் காரணமாக ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழி இணையப் பங்களிப்புகளை செய்து வருகிறது.

   தமிழ் இணையம் வழியாக, தகவல் பரிமாற்றம், கற்றல் கற்பித்தல், இணையதள வர்த்தகம், இணையதள முன்பதிவுகள், இணையதள பண பரிமாற்றம், மற்றும் பொழுதுபோக்கு கூறுகள் போன்றவை தமிழ் மக்களிடம் எளிதாக வந்து சேருகிறது.

    கணினியில் தமிழ்மொழியின் பயன்பாட்டிற்கு காரணம் நம் மொழியின் சிறப்பே ஆகும். ஏனெனில் தமிழ்மொழியில் எழுத்தமைப்பு, ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இத்தனை சிறப்பினை பெற்றிருப்பதால் கணினியில் தமிழ் மிகக் குறுகிய காலத்தில் நுழைந்தது.

    இதற்குப் பெருமளவில் துணை நிற்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல் கடந்து சென்றாலும் நம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தை விட்டுத் தொழில் காரணமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக்கொள்ள தமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையத் தளங்களையும் பயன்படுத்தினர். இதுபோன்ற ஆரம்பகட்ட முயற்சிகளே இன்று இணையத்தமிழ் என்ற துறையாக வளர்ந்தது.  கணிப்பொறியில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியினை புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்டனர். “தமிழ் எழுத்துருக் குறியாக்க முயற்சிகள் 1980-இன் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.”

       உலகம் முழுவதிலும் பல்வேறு தமிழறிஞர்கள் 1984 முதல் 1995 வரை அவரவர்க்கென தனிகுறியீட்டு முறையை அமைத்து எழுத்துருக்கள், விசைப்பலகைகள் அமைத்து தமிழைக் கணினியிலும், இணைத்திலும் ஏற்றம் பெறச் செய்தனர். இணையத்தில் முதல் நிலையாகத் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துருக்கள் மூலமாக தமிழில் மின்னஞ்சல் அனுப்பினர். பின்னர் இணைய இதழ்களும், இணையத் தளங்களும் இணையத்தில் உருவாகின. 1995-ஆம் ஆண்டில் நா. கோவிந்தசாமி "கணியன்'' என்கிற பெயரில் நடத்தியதுதான் முதல் தமிழ் இணையத்தளம். இவ்விணையத்திற்கான தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் சென்னையிலிருந்து தொகுக்கப்பட்டன. இத்தளத்தினை படிக்க 'கணியன்' என்ற எழுத்துருவை பயன்படுத்த வேண்டும்.

       இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் தளங்களும், இணைய இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் நூலகம், இணையப் பல்கலைக்கழகம், அகராதிகள், சினிமா போன்ற ஏராளமான தகவல்கள் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ளன.

    இணைய வளர்ச்சியால் தமிழ் மொழிபெயர்ப்பு புதிய வேகம் பெற்றுள்ளது. தமிழ் கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன. இணையதளங்கள் மூலம் உலக அளவில் காணப்படும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து pdf வடிவத்தில் சேமித்து வைத்துப் படித்து புதிய அறிவு தேடலுக்கு துணையாக இணையதளங்கள் விளங்குகின்றன. 

 

@ உதவி -கணினித் தமிழ் 

                                                **** இராஜாலி ****

வெள்ளி, 10 ஜனவரி, 2025

திருவரங்கக் கலம்பகம் - பேச வந்த தூத!

 நூல் குறிப்பு


      சிற்றிலக்கியங்களில் ஒன்று கலம்பக இலக்கியமாகும். 18 உறுப்புகளைக் கலந்து பாடுவது கலம்பக இலக்கியத்தின் சிறப்பாகும். கலம்பக இலக்கியங்களில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய திருவரங்கக் கலம்பகம் குறிப்பிடத்தக்கதாகும். திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதன் மேல் பாடப்பட்ட இந்நூலில்   100 பாடல்கள் காணப்படுகின்றன.

செல்லரித்த ஓலை செல்லுமோ?

    வேடர் குலப் பெண்ணை மன்னனுக்கு மணம் பேச ஓலை கொண்டு வந்த தூதுவனைப் பார்த்து வேடன் ஒருவன் " எங்கள் வேடர் குலப் பெண்ணை மன்னனுக்காக மணம் பேச வந்த தூதுவனே! கரையானால் அரிக்கப்பட்ட  ஓலை செல்லுமோ? அனைத்து வளங்களையும் அருளும் திரு அரங்கநாதன் மீது அன்பு கொண்ட எங்கள் மறவர் குல பெண்களை முன்பு பெண் கேட்டு வந்த மன்னர்களின் நிலைமை என்ன என்பதை எங்கள் வீட்டிற்கு வந்து பார்! எங்கள் வீட்டு வாசல்களின் கதவுகளாக அவர்கள் பிடித்து வந்த வெண்கொற்றக் குடைகள் காணப்படுகின்றன. நாங்கள் தினை, அரிசி போன்றவற்றை அளப்பதற்கு பயன்படுத்தும் மரக்காலும் படியும் அவர்கள் அணிந்து வந்த கிரீடங்களாகும். எங்கள் குடிசையின் மீது போடப்பட்டுள்ள கீற்றுகள் அவர்கள் வீசி வந்த சாமரங்களாகும். மேலும், எங்கள் வீட்டின் நான்கு பக்கங்களும்  வேலியாக அமைவது எங்களிடம் போரிட்டு தோற்ற அம்மன்னர்கள் விட்டுச் சென்ற வில்லும் வாழும் ஆகும்". - என தூதுவனிடம் வேடன் தன் குலத்தின் வீரத்தை எடுத்துக் கூறி எங்கள் குலப் பெண்களை மன்னனுக்கு பெண் கொடுக்க மாட்டோம் என மறுத்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

**** இராஜாலி ****




அபிராமி அந்தாதி - கலையாத கல்வியும்...

நூல் குறிப்பு 


  கி.பி 18-ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் என்பவரால் பாடப்பட்டது அபிராமி அந்தாதி ஆகும். அந்தாதி வகையைச் சார்ந்த 100 பாடல்களைக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. திருக்கடவூர் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மன் மீது இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

 கலையாத கல்வியும் குறையாத வயதும்...

      அடியவர்களுக்கு அருள் செய்யும் அபிராமியின் இயல்பினை பற்றி அபிராமி பட்டர் கூறும் போது,

"ஆதிகடவூரில் அமிர்தகடேஸ்வரராகிய அமுதீஸ்ரின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கும் அபிராமி அன்னை, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் தங்கை ஆவார். அந்த அபிராமியை உள்ளன்போடு வழிபடும் அன்பர்களுக்கு, என்றும் நீங்காத கல்வியும், நீண்ட ஆயுளும், நல்லோர் நட்பும், குறைவில்லாத செல்வமும், குன்றாத இளமையும், ஆரோக்கியமான உடலும், முயற்சியைக் கைவிடாத மனமும், எப்பொழுதும் அன்பு செலுத்தும் மனைவியும், அருமையான குழந்தைகளும், குறையாத புகழும், சொன்ன சொல் மாறாத பண்பும், இல்லை என்று வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் செல்வமும், துன்பமில்லாத வாழ்வும் என்றென்றும் அருளும் தன்மை கொண்டவளாகக் காணப்படுகிறாள்." என அபிராமியின் அருள் செல்வத்தைப் பற்றி அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் கூறுகின்றார்.

**** இராஜாலி ****

வியாழன், 9 ஜனவரி, 2025

மரபுக் கவிதையின் - தோற்றமும் வளர்ச்சியும்

      நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகவும் தொன்மையானதாக விளங்குவது தொல்காப்பியரால் பாடப்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். தொல்காப்பியம் கூறும் ஐந்து இலக்கணங்களில் ஒன்று யாப்பிலக்கணம் அது செய்யுள் இலக்கணம் அல்லது கவிதை இலக்கணம் என அழைக்கப்படுகிறது. அவ் யாப்பிலக்கண முறைப்படி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல் என்ற வகைமையில் பாடப்படுவது மரபுக் கவிதைகளாகும். இக்கவிதைகள் என்று பிறந்தது என்று உணர முடியாத இயல்பினைக் கொண்டதாக விளங்குகிறது. சங்க கால முதலாக இக்காலம் வரையில் மரபுக் கவிதைகள் பாடப்பட்டு வருகின்றன. இக்கட்டுரையில் இக்கால மரபுக்கவிதை முன்னோர்கள் சிலர் பற்றி காணலாம்.

இக்கால மரபுக் கவிதை முன்னோடிகள் 

   பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இக்காலம் வரை வாழ்ந்த கவிஞர்கள் பலர் மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார்கள் அவர்களில்,பாரதியார், கவிமணி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுரதா, முடியரசன், வாணிதாசன், கண்ணதாசன் - போன்றோர்களை குறிப்பிடலாம்.

பாரதியார்


   இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராக விளங்கியவர் மகாகவி பாரதியார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் நெல்லையில் உள்ள எட்டையாபுரத்தில் சின்னசாமி - இலக்குமி அம்மையாருக்கு மகனாகத் தோன்றினார். சுப்பிரமணியன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், இளம் வயது முதலாக கவி பாடும் புலமை பெற்றிருந்ததால் எட்டையாபுரத்து மன்னர் இவரை 'பாரதி' என அழைத்தார்.

 தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலைப் போன்றவற்றை வேண்டி நின்றார்.

"எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் 

எல்லோரும் இந்திய மக்கள் 

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை, 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் "

 என சமூக ஒருமைப்பாட்டு உணர்வினை ஊட்டினார்.

    பாரதியார், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற முப்பெரும் இலக்கியங்களைப் படைத்துள்ளார். மேலும் ஞானப் பாடல்கள், தேசிய கீதங்கள், வசன கவிதைகள் போன்ற தலைப்புகளில் இலக்கியங்களைப் படைத்துள்ளார். தமிழ் புதுக்கவிதையின் முன்னோடியாக விளங்கிய இவர், இந்தியா,சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் 1921 செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் மறைந்தார்.

பாரதிதாசன்


    கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் கனகசபை லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக புதுச்சேரியில் பிறந்தார். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

" எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு " 

எனது தாய்மொழி பற்றினை வெளிப்படுத்தினார். பாரதியைப் போல தேச விடுதலையையும், பெண் விடுதலையும், மொழிப் பற்றியும் தனது பாடு பொருளாகக் கொண்டு, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை


    கவிமணி என அழைக்கப்படும் தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள், குமரி மாவட்டத்தில் உள்ள தேரூரில் சிவதான பிள்ளைக்கும் ஆதிலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1876 ஆம் ஆண்டு பிறந்தார். எளிய நடையில் கவி பாடும் வல்லமை பெற்ற இவர், மலரும் மாலையும், ஆசிய ஜோதி போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவரின் கவிதைகளின் சிறப்பு உணர்ந்த சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் 1940 இல் கவிமணி என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

நாமக்கல் கவிஞர்


    காந்தியக் கவிஞர் என அன்போடு அழைக்கப்படும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்கள், 1888 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி மோகனூரில் உள்ள வேங்கட ராமருக்கும் அம்மணி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1930 ஆம் ஆண்டு காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு கொண்டு,

    " கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது " 

என்ற பாடலை பாடி காந்தியக் கவிஞர் ஆனார். இவர் அவனும் அவளும், சங்கொலி, தமிழ் மனம் போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.

சுரதா


      உவமைக் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் என்பதாகும். இவர் 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் பழையனூரில் திருவேங்கடம், செண்பகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதுவே சுரதா என ஆனது. கவிஞர் திலகம், கவி மன்னர் என அழைக்கப்படும் இவர் தேன் மழை, துறைமுகம், சிரிப்பின் நிழல் போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

முடியரசன்


     துரைராசு என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், மதுரையை அடுத்துள்ள பெரிய குளத்தில் 1920 அக்டோபர் 7ஆம் நாள் சுப்புராயலு, சீதா லட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். திராவிட சித்தாந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பூங்கொடி, பாடும் பறவை, வீரகாவியம் போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் வீறு கவியரசர் எனப் புகழப்பட்டார்.

வாணிதாசன்


   தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என அழைக்கப்படும் வாணிதாசன் அவர்கள், பாண்டிச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் 1915 ஜூலை 22 ஆம் நாள் அரங்க. திருக்காமு - துளசி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அரங்கசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், பிற்காலத்தில் வாணிதாசன் எனப் பெயரை மாற்றிக்கொண்டு தமிழச்சி, கொடி முல்லை, தொடு வானம் போன்ற கவிதை இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

கண்ணதாசன்


  கவியரசர் என போற்றப்படும் கண்ணதாசன் சாந்தப்பன் விசாலாட்சியின் மகனாக 1927 ஜூன் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் சிறுவயது முதலாக கவி பாடும் வல்லமை பெற்றிருந்தார். கண்ணதாசன் என்ற சிறப்பு பெயரில் 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் மாங்கனி, ஆதிமந்தி, இயேசு காவியம் போன்ற இலக்கியங்களைப் படைத்ததோடு அர்த்தமுள்ள இந்து மதம் தத்துவ விளக்க நூலையும் படைத்துள்ளார்.

      இவர்களைப் போன்று 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் மரபுக் கவிஞர்கள் பலர் தோன்றி மரபுக் கவிதை இலக்கியங்கள் பலவற்றைப் படைத்து தமிழ் மொழிக்கு சிறப்பு செய்து உள்ளார்கள்.

***** இராஜாலி *****

வியாழன், 3 அக்டோபர், 2024

பதினெண் சித்தர்கள் - ஓர் அறிமுகம்

'சித்தர்’ என்ற  சொல்லுக்கு       சித்தி  பெற்றவர் என்பது பொருள்.  சிவத்தை நினைத்து   அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, எண்    பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் ஆவர்.

சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.

இப்படி பெருமைமிகு சித்தர்களில், பதினெட்டு சித்தர்கள் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை பதினெண் சித்தர்கள் என்றும் அழைக்கின்றோம். 

1. அகத்தியர்:

சித்தர்-சித்த வைத்தியம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருபவர் அகத்திய மாமுனி தான். பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். அகத்தியர் சித்தர்கெல்லாம் சித்தராக அருள்பாலித்தவர். தமிழ் முனி, கும்ப முனி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டார். அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்திய ரத்னாகரம், போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றார். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதினார். அகத்தியர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

2. திருமூலர்:

இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முந்தையது. இவரால் அருளப்பட்ட திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு இவர் திருமந்திர மாலை என்ற பெயர். இதனை தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கின்றனர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் ஜீவசமாதி அடைந்தார்.

3. போகர்:

பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவரை நவபாஷானங்களை கொண்டு செய்து வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.இவர், போகர் நிகண்டு, போகர் ஏழாயிரம், போகர் கற்பம், போகர் வாசியோகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும் அனைவராலும் போற்றபடுகின்றார்.போகர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.

4. இடைக்காடர்:

இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவர் வருடாதி மருத்துவம், தத்துவப் பாடல்கள், ஞானசூத்திரம் எழுபது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் உலக இயல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் என்ற பொது அடிப்படைக் கருத்தைக் கொண்டது. இவர் தன் “வருடாதி வெண்பா” என்னும் நூலில், இந்த 60 வருடங்களுக்கும் மழை, வெய்யில் மற்றும் காலநிலை எப்படி இருக்கும் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்.இடைக்காடர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.

5. கமலமுனி:

இவருக்கு பிரம்மனே எல்லா வகைச் சித்துகளையும் நேரில் வந்து உபதேசித்தார் என்று கூறுவர். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் எழுதியதாக கூறப்படுகிறது. இவர் யோக ஞானத்தால் அஷ்டமா சித்திகளை பெற்றவர். சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். கமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருவாரூரில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

6. கருவூரார்:

தஞ்சை பெரிய கோவில் உருவாகியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. நெல்லையப்பரும், காந்திமதியம்மையாரும் இவருக்கு நடனக்காட்சி காட்டியருளியுள்ளனர். கருவூரார் வாத இலக்கியம், வைத்தியம் ஐநூறு, யோக ஞானம் ஐநூறு, கருவூரார் பலதிரட்டு, பூஜா விதி, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், கற்ப விதி, மெய்ச் சுருக்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கருவூரார் சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது சமாதி கருவூரில் (தற்போதைய கரூர்) உள்ளது.

7. கோரக்கர்:

கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. வட நாட்டில் “நவநாத சித்தர்” என்ற சித்தர்கள் தொகுதியின் தலைமை சித்தராக இவரை போற்றுகின்றனர்.vசந்திரரேகை இருநூறு, கோரக்கர் கண்ணசூத்திரம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.

8. குதம்பை:

இவர் ஞான மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது பாடலில் “குதம்பாய்” என்று பலமுறை வரும். “குதம்பை” என்று விளித்துப்பாடல் இசைத்ததாலேயே இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இவர் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததால் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார். . இவர் மாயவரத்தில் சமாதியடைந்தார். 

9. பாம்பாட்டி:

இவர் தன் தவவலிமையால் சிவபெருமானின் ஆட்டத்தைக் காண்பவர் என்பதால் இவர் கூறும் பாடல் யாவற்றிலும் “ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியுள்ளதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற மாற்று கருத்தும் இருக்கின்றது. வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன இவர் எழுதிய பாடல்களாகும். பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் சங்கரன்கோயிலில் சமாதியடைந்தார். 

10. சட்டைமுனி:

இவர் ஈழ நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார். எப்போதும் கம்பளத்தில் மேலாடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். இவர் சட்டைமுனி நிகண்டு 1200, வாதகாவியம் 1000, சரக்குவைப்பு 500, நவரத்தின வைப்பு 500, வாக்டம் 200, முன்ஞானம் பின் ஞானம் 200, கற்பம் 100, உண்மை விளக்கம் 51 உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார். சட்டைமுனி சித்தர் ஆவணி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருவரங்கத்தில் சமாதியடைந்தார். 

11. சிவவாக்கியர்:

“சிவ சிவ” என்று சொல்லியபடி இவர் பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்படுகிறார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவர் தன் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாக்கியம்’ என்று அழைக்கப்படுகிறது. நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. இவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. இவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. போகர் தனது சப்த காண்டத்தில் சிவவாக்கியார் தை மாத மக நட்சத்திரத்தில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார். சிவவாக்கியருக்கு கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருக்கோவிலில் ஜீவசமாதி உள்ளது.

12. சுந்தரானந்தர்:

இவர் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார். வைத்திய திரட்டு, காவியம், விஷ நிவாரணி, வாக்கிய சூத்திரம், கேசரி, சுத்த ஞானம், தீட்சா விதி, அதிசய காரணம், சிவயோக ஞானம், மூப்பு, தாண்டகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.bசுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் மதுரையில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. 

13. கொங்கணர்:

கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். கொங்கணர் வாதகாவியம் 3000, முக்காண்டங்கள் 1500, தனிக்குணம் 200, வாதசூத்திரம் 200, தண்டகம் 120, ஞான சைதன்னியம் 109, சரக்கு வைப்பு 111, கற்ப சூத்திரம் 100, வாலைக்கும்பி 100, ஞானமுக்காண்ட சூத்திரம் 80, ஞான வெண்பா சூத்திரம் 49, ஆதியந்த சூத்திரம் 45, முப்பு சூத்திரம் 40, உற்பத்தி ஞானம் 21, சுத்த ஞானம் 16 ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருப்பதியில் ஜீவசமாதியடைந்தார்.

14.வான்மீகர்:

வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப்படுகின்றார். போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூறு ஆண்டுகள் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும். உலகிற்கு இராமாயணத்தை தந்ததாகவும், தமிழ் புலமை மிக்கவர் என்றும், காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகின்றார். வான்மீகர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார். மேலும் இவரது மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சன்னதியில் தீர்த்தகுளத்தின் அருகே சமாதி கொண்டுள்ளார்.

15. மச்சமுனி:

இவர் பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர். நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டு அஷ்டமாசித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். மச்சமுனி சூத்திரம், மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30, மச்சமுனி பெரு நூல் காவியம் 800, மச்சமுனி வைத்தியம் 800 , மச்சமுனி கடைக் காண்டம் 800, மச்சமுனி சரக்கு வைப்பு 800, மச்சமுனி திராவகம் 800, மச்சமுனி ஞான தீட்சை 50, மச்சமுனி தண்டகம் 100, மச்சமுனி தீட்சா விதி 100, மச்சமுனி முப்பு தீட்சை 80, மச்சமுனி குறு நூல் 800, மச்சமுனி ஞானம் 800, மச்சமுனி வேதாந்தம் 800, மச்சமுனி திருமந்திரம் 800, மச்சமுனி யோகம் 800, மச்சமுனி வகாரம் 800, மச்சமுனி நிகண்டு 400, மச்சமுனி கலை ஞானம் 800, மாயாஜால காண்டம் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவருடைய ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. 

16. பதஞ்சலி:

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர் என்று கூறப்படுகிறது. இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார். வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டவர். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார். இவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் இராமேஸ்வரத்தில் ஜீவசமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. 

17. இராமதேவர்:

பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக சிறப்பிக்கப்படும் இராமதேவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தார். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயின்றவர். அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாத பெருமானை வணங்கி, தாம் அரபு நாடுகளில் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார். இராமதேவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார். இராமதேவர் சித்தர் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் அழகர்மலையில் ஜீவசமாதியடைந்தார்.

18. தன்வந்திரி:

தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுவதுடன் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். இவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதியடைந்ததாக  சொல்லப்படுகிறது.

மேலும் பல சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததற்கான குறிப்புகள் சித்தர் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

***** இராஜாலி *****

மின் நூல் - தமிழ் நூல்கள் அறிமுகம்

தமிழ் நூல்கள் அறிமுகம்  - தமிழ் இலக்கியங்கள் குறித்த அட்டவணை