எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஜல்லிக்கட்டு காளை மல்லுக்கட்டும் காளையர்

கலித்தொகையில் ஏறுதழுவுதல்...

        சங்க காலத்தில் ஏறுதழுவுதல் என்பது ஆண்மகனின் வீரத்தை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாகக் கருதப்பட்டது. ஆண்களின் வீரத்தை விரும்பிய பெண்கள் தங்களோடு வளர்ந்த காளையை அடக்கும் வீரனையே கரம் பிடிப்பதாக உறுதியேற்று இருந்து, அவ் வீரன் வந்து காளையை  அடக்கி கைத்தலம் பற்றும் நிகழ்வு சங்க கால மக்களின் வாழ்வியலில் காணப்பட்டுள்ளது என்பதற்கு கலித்தொகை பாடல் 102 சான்றாக அமைகிறது.

     கலித்தொகையில், முல்லைக் கலி பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் என்ற மன்னர் ஆவார். அவர் சங்க கால தலைவியை தலைவன் ஏறு தழுவி மணமுடித்த செய்தியை பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்.

     மழை பொழிந்து ஓய்ந்த அழகிய கார்கால  மாலைப் பொழுதில் தலைவன் தோழனோடு இயற்கை காட்சிகளை கண்ணுற்றவனாக அக்காட்டுப் பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறான். அவ்விடத்தில் துள்ளி விளையாடும் மான்களைப் போல தலைவி தன் தோழிகளோடு சேர்ந்து பிடவம், தளவம், தோன்றி, கொன்றை போன்ற பல வகையான மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து கழுத்திலும், தலையிலும் அணிந்து மகிழ்ச்சி ததும்ப, தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள். துள்ளி விளையாடும் தலைவியின் அழகில் மயங்கிய தலைவன் தோழனைப் பார்த்து,

"இவள் யார் உடம்போடு என் உயிர் புக்கவள்"

எனக் கேட்கிறான். தலைவன் காட்டிய தலைவியைப் பார்த்த தோழன், 'ஓஒ.. இவளா? தான் வளர்க்கும் காளையை  யார் அடக்குகிறார்களோ அவரே, என் மெய் தீண்ட  தகுதியானவர்கள். என்ற உறுதியோடு இருப்பவள்' எனக் கூறுகிறான். எத்தனைக் கேட்டு புன்முறுவல் செய்த தலைவன்,  " உடனே சென்று, அவள் சுற்றத்தாரை கண்டு, 'ஏறு தழுவும் விழாவிற்குப் பறை அறைக!' மேலும், திருமண நிகழ்வுக்கு ஆயத்தம் செய்ய சொல்" எனத் தோழனைப் பார்த்துக் கூறினான்.

  தலைவியின் பெற்றோரிடம் தலைவனின் கருத்தைக் கூறினான் தோழன். தலைவியின் பெற்றோர்களும், சுற்றத்தாரும் இணைந்து ஏறுதழுவதற்கு  தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள். அதன்படி, ஏறுதழுவும் இடத்தில்  பரண் அமைக்கப்பட்டது. ஏறு தழுவுதல் தொடங்கியது. தலைவி தனது சுற்றத்தாருடன் அதில் அமர்ந்து ஏறு தழுவுதலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீறிவரும் காளையினை காளையர்கள் பலர் எதிர்கொண்டு அடக்க முயன்றனர். அப்பொழுது,

எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்

அவர்களுள் தலைவன் மலர் மாலை அணிந்த மார்புடன் காளையின் முன் தோன்றி, சீறி வரும் காளையின் இமிலை  பிடித்து வளைத்து காளையினை அடக்கினான்.  இதனைப் பார்த்த தலைவியின் சுற்றத்தார் மகிழ்ந்து அதிசயத்து, " நேற்று நடந்த ஏறுதழுவுதலில் இந்தக் காளை ஒரு வீரனின் மார்பை குத்திப் பிளந்தது. அதனைத் தெரிந்திருந்தும் இக்காளையை அடக்கிய  இவனே உண்மையான வீரன்". என வீரனின் செயலை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு,கேட்ட தலைவி நாணம் கலந்த புன்னகை  புரிந்தாள். தலைவனின் கண்ணில் நிறைந்தாள் தலைவி. அங்கு திருமண விழாவுக்கான  தண்ணுமை முரசு முழங்கியது.

     என ஏறு தழுவி தலைவியை தலைவன் அடைந்த செய்தியினை கலித்தொகையில்  சோழன் நல்லூருத்திரன் காட்சிப்படுத்தியுள்ளார்.

!!!! இராஜாலி!!!!


சனி, 10 பிப்ரவரி, 2024

சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகம்

 முன்னுரை

 சங்க காலத்தைத் தமிழகத்தின் பொற்காலமென இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புகின்றனர். தமிழ் மொழியும் தமிழர் வாழ்வும் அக்காலத்தில் மேலோங்கி இருந்தமையைச் சங்க நூல்கள் கொண்டு அறிகின்றோம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்கள் தமிழ்ச் சமுதாயத்தை எவ்வாறு படம்பிடித்துக் காட்டுகின்றன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

செல்வத்துப் பயனே ஈதல்


 ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் வசதி படைத்தவர்களானவும்  எல்லாத் தேவைகளையும் எளிதில் நிறைவு செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தால், அந்நாட்டை முன்னேறிய நாடு என்று நாம் கூறலாம். சங்க காலத்தில் அத்தகையதொரு மேம்பட்ட வாழ்வை மக்கள் பெற்றிருந்தார்கள். பதிற்றுப்பத்து, புறநானூறு, பட்டினப்பாலை போன்ற நூல்கள் மக்களின் செல்வவளம் பற்றிப் பேசுகின்றன. பதிற்றுப்பத்து பாடிய புலவர்களுக்கு அரசர்கள் கொடுத்துள்ள பரிசுப் பொருட்களைப் பற்றி அறியும் போது ஆச்சரியம்அடைய வைக்கிறது. செல்வம் பெற்றவர்கள் அச்செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தலை'அறம்' எனக் கருதினர்.

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பே மெனினே தப்புந பலவே.

எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. வள்ளலிடம் சென்று வளம் பெற்றவன் பெறாதானுக்கு அத்தகு வளம்பெறும் வழிமுறைகள் கூறிய பண்பாட்டிலக்கியங்களாக ஆற்றுப்படை இலக்கியங்கள் இலங்குகின்றன. சங்க காலத்தில் வறுமையாளர்களும் இருந்திருக்கிறார்கள்.ஆனால் தற்காலம் போலச் செல்வர்களால் அவர்கள் சுரண்டப்படவில்லை; மாறாகப் பழுமரம் தேடும் பறவைகள்போல வள்ளல்களை நாடி, புகழ்ந்து பாடி பெருவளம் பெற்றிருக்கிறார்கள்.

நாகரிக முதிர்ச்சி

    ஒருவருக்கு செல்வம் மட்டும் வாழ்வை நிறைவுடையதாக்கி விடாது. எல்லா வளமும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழும் வாழ்வைக் காட்டிலும் அறவழி மாறாத வாழ்வே விழுமிய வாழ்வாகச் சங்கஇலக்கியங்கள் சுட்டுகின்றன.

"கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய

புகல்மறவருமென

நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்".

என அரசனுக்குரிய அறம் பேசப்பெறுகின்றது. நாடுகளுக்கிடையே இன்று போர் மூளுகின்றபோது ஈவு இரக்கமின்றி ஒன்றுமறியாத அப்பாவிகளும் கொல்லப்படுகின்றனர். ஆனால் இது அறத்தின் பாற்பட்டதன்று எனப் போர் மூளுவதற்கு முன்பாகப் பசுக்களையும் மனிதருள் சிலரையும் அப்புறப்படுத்தும் பணியை அன்றைய அரசர்கள் செய்திருக்கிறார்கள்!

"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறாஅ தீரும்

எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்"            (புறம்.9)

எனப் போருக்கு முன் அரசன் பேசுவதாகப் புறம் எடுத்துரைக்கின்றது. இதையே நாகரிகச் சிறப்பாக மதுரையை எரிப்பதற்குமுன் கண்ணகி கூறும் உரையின் வாயிலாகச் சிலம்பும் சுட்டுகின்றது. உயிரைவிட மானம் பெரிதாகக் கருதப் பெற்றிருக்கின்றது.

       "இந்திரனின் அமிழ்தமே கிடைத்தாலும் அதனைப் பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணுபவர்களும், புகழுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்களும் இந்த உலகமே பரிசாகக் கிடைக்கின்றதென்றாலும் பழியை உண்டாக்கும் செயல்களைச் செய்யாதவரும் இவ்வுலகில் வாழ்வதனால்தான் இவ்வுலகம் அழியாமல் உள்ளது" என்று கூறும் கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதியின் புறப்பாடல் சங்க காலத் தமிழர் நாகரிகத்திற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்த ஒரு வரியே போதும் தமிழரின் உலகளாவிய நாகரிகச் சிறப்பை எடுத்துரைக்க.

பெண்கள் முன்னேற்றம்

   இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் முன்னேற்றம் பற்றித் தனிப்படப் பேசவேண்டிய நிலையுள்ளது. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அடிமையாக்கப்பட்டார்கள். ஆடவர்களின் போகப் பொருளாக்கப்பட்டார்கள். அந்த அடிச்சுவடு இன்றும் இருப்பதால்தான் பெண்ணடிமை தீர, பலர் இன்று பேசியும் எழுதியும் வருகின்றனர்.

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான

எனப் பெண்மையை உயர்த்திக் காட்டுகிறார் தொல்காப்பியர்.

‘கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிறல் இறந்ததன் பயனே'

என்று அவர் குறிப்பிடுவதால் வீடுபேறு அடைவதற்குப் பெண்ணின் பங்கு சமபங்காகின்றது.

   தனக்கு நரை உண்டாகாமைக்குக் காரணம் கூறும் பிசிராந்தையார் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பி இருந்தமையையும் ஒரு காரணமாகக் கூறுகின்றார். இத்தகைய பெண்களுக்கு இடைக்காலத்தில் ஏனோ "அடுப்பதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" எனக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. கல்வி நலம் சான்ற முப்பத்தோரு பெண்பாற் புலவர்களை "நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்" என்னும் நூலில் ரா. ராகவையங்கார் அவர்கள் சுட்டுகின்றார்கள். அகநானூறு காட்டும் தமிழர் திருமணத்தில், முன்னின்று திருமணத்தை நடத்தக்கூடியவர்கள் முதுமை நிறைந்த சுமங்கலிப் பெண்களே. அரசனுக்கும் அறிவுரை வழங்கிய ஒளவை என்னும் பெருமாட்டியைத் தாய்க்குலத்தின் பிரதிநிதியாகச் சங்க இலக்கியத்தில் கண்டு மகிழ்கிறோம்.

உழைப்பில் நாட்டம்


   'உழைத்து வாழவேண்டும்' என்னும் உயரிய உளப்பாங்கு கொண்டவராகச் சங்க காலத் தமிழர் திகழ்ந்தனர் என்பதை அறிந்து மகிழ்கிறோம். குறுக்கு வழியில் பெரிய மனிதராகிவிட வேண்டும் என எண்ணுகிற இக்காலத்தில், சங்க இலக்கியக் கருத்து புதுமையாகக்கூட தோன்றும். முன்னோர் தேடிவைத்த பொருளை நம்பி வாழாமல் தாமாக முயற்சி செய்து பொருள் தேடவேண்டும். 'உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்' என்னும் குறுந்தொகைக் கருத்தும்,'தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்' என்னும் திருவள்ளு கருத்தும் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழத்தக்கன. தானே முயற்சி செய்து கட்டிய வீட்டில் தன் உழைப்பினால் வந்த உணவை உண்ணும் இன்பம் போன்றது தலைவியின் முயக்கம் எனத் தலைவன் பேசுவதாக இக்கருத்து திருக்குறளில் இடம் பெறுகின்றது.

வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

என வரும் குறுந்தொகை, ஆடவர்களின் முயற்சியையும், பெண்டிரின் அன்பினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. கால மாற்றத்தால் ஆடவர்க்குக் கூறப்பெற்ற பொருள் தேடும் முயற்சி இன்று பெண்களும் மேற்கொள்வதாயிற்று.

“இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'

என்று முயலாதார் வாழ்வு எள்ளப்பட்டது.

உடல் உரமும், உள்ள உரமும்

  வீரமும், காதலும் இரு கண்களெனப் போற்றப் பெற்றிருக்கின்றன. அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்பதால் கல்வி போற்றப் பெற்றது. வீரமும், புகழும், கொடையும் இன்ன பிறவும்'புறம்' என்று சங்க இலக்கியம் போற்றுகின்றது. அழகு. அறிவு, இளமை ஆகியவற்றால் ஒன்றுபட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் 'களவு', 'கற்பு' ஆகிய நிலைகள் 'அகம்' என்று பேசப்பட்டன. அகவாழ்வுக்கு இலக்கணம் கண்ட ஒரே மொழி நம் தமிழ்மொழிதான் என்று நாம் பெருமை அடையலாம். பிறர் அறிய முடியாத அதே வேளையில் உணரக்கூடிய நுண்ணிய உணர்வாகக் காதல் இருப்பதால் தான் சங்க இலக்கியங்களுள் அக இலக்கியங்களை மிகுதியும் காணுகின்றோம். மனிதனின் உள்ளத்தையும் உடலையும் உற்று நோக்குவது போல இந்த அகப்புறப் பாகுபாடு அமைந்து நலம் பயக்கின்றது எனலாம்.

பழக்க வழக்கங்கள்

   உப்புக்கு விலையாக நெல்லை வாங்குதலும், நடுகல் வழி பாடும், நடுவு நிலைமை தவறாமல் வாணிபம் செய்தலும், புலியின் பல்லைச் சிறுவர்களுக்குக் கழுத்தில் தாலியைப் போல் அணிவித்தலும், ஏறுதழுவுதலும், குரவைக் கூத்தாடுதலும், நெல்லையும், மலர்களையும் தூவி இறைவனை வழிபடுதலும், தன்மானத்திற்கு இழுக்கு வந்தால் வடக்கிருத்தலும், பிணத்தைத் தாழியில் இட்டு புதைத்தலும், தழையாடை அணிந்து கொள்ளலும், நற்சொல் கேட்டலும் ஏதேனும் ஒரு பயன் கருதிச் சகுனம் பார்த்தலும், கொற்றவையை வழிபடுதலும், காதலித்த பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து தர மறுக்கும் போது காதலன் எருக்கம்பூ மாலையணிந்து மடலூர்தலும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழர்களின் எண்ணற்ற பழக்க வழக்கங்களுள் ஒரு சிலவாம்.  ஆலமரத்தடியில் 'நாலூர் கோசர் என்பவர்களால் நீதிவழங்கப்பெற்றது. (குறுந்தொகை 15 ஒளவையார்) கல்வி கற்கும் மாணவர்கள் ஊர் மக்களிடத்தில் உணவைப் பெற்றுக் கல்வியில் நாட்டம் செலுத்தினர் படிப்பவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யும் பண்பு அன்றே இருந்தமையை இது காட்டுகின்றது. விருந்தோம்புதல் ஓர் உயரியபண்பாக மதிக்கப் பட்டது.

அரசியல் சிறப்பு

    சங்க காலத்தில் மன்னராட்சி நடைபெற்றதென்றாலும், அதனுள், தற்கால மக்களாட்சிக் கூறுபாடுகளும் இருந்தமையை அறிகின்றோம்.'ஐம்பெருங்குழு', 'எண்பேராயம்' என்னும் குழுக்களை மதுரைக்காஞ்சி முதலான நூல்கள் பேசுகின்றன. இவைகள் மன்னர்கள் விரும்பியபோது அவர்களுக்கு அறிவுரை வழங்க அமைக்கப்பட்டவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐம்பெருங் குழுவில் அமைச்சர்,புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், ஒற்றர் போன்றோரும், எண்பேராயத்தில் கரணத் தலைவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர் போன்றோரும் இடம்பெற்றனர். அரசியலை விரிவாகப் பேசும் திருக்குறளில் இத்தகைய குழுக்கள் பற்றிய செய்திகள் இல்லை. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்களுக்கு இன்றியமையாதன என்னும் கருத்து இடம் பெறுகிறது. மக்களுக்கு நீதி வழங்குவதற்காக அறங்கூறு அவையம்' இருந்தது. உறையூரில் இருந்த அறங்கூறு அவையத்தைப் புறநானூறும் (39), நற்றிணையும் (400) குறிப்பிடுகின்றன.

  அரசர்களுக்கு இன்றியமையாத வருவாயாக நிலவரி, உல்கு(சுங்கவரி) சிற்றரசர்கள் தரும் திறைப்பணம் ஆகியவை பேசப்படுகின்றது.'காசு,' 'காணம்', 'பொன்' ஆகிய சொற்கள் தற்காலத்தில் நாம் வழங்கும் 'பணம்' என்னும் சொல்லுக்கு மாற்றாக வழங்கியிருக்கின்றன. ஆங்கிலத்தில் 'cash' என்று கூறுவது 'காசு' என்று கூறுவதிலிருந்து வந்திருக்கலாம். மதுரையிலும், புகாரிலும் பல மொழிகள் பேசும் பன்னாட்டு மக்களும் கலந்து இனிதிருக்க வாணிபம் நடைபெற்றதாக பட்டினப்பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும், வருவதால் அமைதியான அரசியல் அன்று நிலவியமை கண்கூடு, ஆயினும் மன்னர்களுக்கிடையே மூண்ட போர்களைப் பற்றியும் அறிகின்றோமென்றாலும், மக்களைப் போர்காலத் துன்பத்தினின்றும் விடுவிப்பதற்காக 'இடித்துரைக்கும்' கோவூர்கிழார் போன்றோரை அறியும்போது அமைதி பெறுகிறோம்.

முடிவுரை

     சங்க இலக்கியம் ஆழங்காண முடியாத கருத்துக் கடல். சங்க இலக்கியம் தமிழர் தம் சொத்து. நமது ஒளி படைத்த வாழ்வை உலகுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் கருத்துப் பேழை. என்பதை சங்க இலக்கியம் கற்ற சான்றோர்கள் உணர்த்துகின்றனர்.

**** நன்றி! - சமூகவியல் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு ****


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

 முன்னுரை

    தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் இடம்பெறுவது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும். இவற்றை சங்கமருவிய கால இலக்கியங்கள் எனவும்  வழங்குவர். கி.பி 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண முனிவர்    'திராவிட சங்கம்' என்ற ஒன்றை நிறுவினார். இச்சங்கத்து நூற்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்விலக்கியங்கள் எவை என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்


 கணக்கு என்பது நூலைக் குறிக்கும் சொல்லாகும். அடிவரையறையை கருதி மேற்கணக்கு எனவும் கீழ்க்கணக்கு எனவும் வகைப்படுத்தினர். மேற்கணக்கு என்பது  சங்க இலக்கியங்களையும், கீழ்க்கணக்கு என்பது சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களையும் குறிப்பதாகும்.

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் 18.அவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகிறது. அவ்விலக்கியங்கள் எவை என்பதை,

 "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

 பால்கடுகம் கோவை பழமொழி -  மாமூலம்

 இன்னிலைசொல் காஞ்சியோடு ஏலாதி என்பவே

 கைநிலைய வாம்கீழ்க் கணக்கு"

என பழைய வெண்பா கூறுகின்றது. குறிப்பாக, திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, பழமொழி, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, தினை மாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைநிலை, களவழி நாற்பது ஆகிய 18 நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும்.

     இவற்றில் அறம் சார்ந்த நூல்கள் பதினொன்றும், அகம் சார்ந்த நூல்கள் ஆறும், புறம் சார்ந்த நூல் ஒன்றும் காணப்படுகின்றது.

அறம் சார்ந்த நூல்கள் - அற இலக்கியங்கள்

 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறக்கருத்துகளை கூறும் நூல்களாக பதினோரு நூல்கள் காணப்படுகின்றன. அவை,

1. திருக்குறள்,            2. நாலடியார்,       3. நான்மணிக்கடிகை

4. இன்னா நாற்பது,  5. இனியவை நாற்பது, 6. திரிகடுகம்

7. சிறுபஞ்சமூலம்,     8. ஏலாதி,            9. ஆசாரக்கோவை,

10. முதுமொழிக்காஞ்சி, 11. பழமொழி

 என்பனவாகும்.

1.  திருக்குறள்

     முப்பால், உத்தர வேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை என்றெல்லாம் சான்றோர்களால் புகழப்படும் திருக்குறள், தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாகும்.

   அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களும்,133 அதிகாரங்களும், அதிகாரங்களுக்கு பத்து பாடல்கள் வீதம் 1330 குறட்பாக்களைக் கொண்டது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 70 அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் காணப்படுகின்றன.

   திருவள்ளுவர், கி.மு முதல் நூற்றாண்டினர் எனவும், கிறிஸ்துவுக்கு முப்பது வருடங்களுக்கு முற்பட்டவர் எனவும்  ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலக மொழிகளில்  பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். இந்நூல், எச்சமயத்தார்க்கும், எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும்  பொதுவான பொது மறையாகும். அற வாழ்வியல் இன்பத்தை பொருள்படக் கூறும் இந்நூல் தமிழர்களின் அறக்கடலாக விளங்குகிறது.    

   திருக்குறளின் சிறப்பை எடுத்தோத "திருவள்ளுவ மாலை" எனும் தனிநூலே எழுந்தது போல் வேறு எந்த நூலுக்கும் எழுந்தது இல்லை. பத்துக்கும் மேற்பட்டோர் உரை எழுதிய சிறப்பு திருக்குறளைத் தவிர்த்து  வேறு எந்த நூலுக்கும் இல்லை. திருக்குறளின் சிறப்பினை மனோன்மணியம் சுந்தரனார்,

 "வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

 உள்ளுவாரோ மனுவாதி  ஒரு குலத்துக்கு ஒரு நீதி "

 எனக் கூறுவதில் இருந்து திருக்குறள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமிழ்மறை என வரையறுத்துக் கூறலாம்.

2.  நாலடியார்

   திருக்குறளைப் போன்றே நாலடியாரும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பகுப்புகளைக் கொண்டது. 400 பாடல்கள் கொண்ட இந்நூல் 'நாலடி நானூறு' எனவும் வழங்கப்படுகிறது. நானூறு சமண முனிவர்கள் பாடிய பாடலின் தொகுப்பாக இந்நூல் காணப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார் என்னும் சமணத் துறவி ஆவார். இது கி. பி எட்டாம் நூற்றாண்டு இலக்கியம் என அறிஞர்கள் கருதுகின்றார்கள்.

    'வேளாண் வேதம்' எனச் சான்றோர்களால் அழைக்கப்படும் இந்நூலில் பெருமையை உணர்ந்து ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனத் திருக்குறளோடு இணைத்துக் கூறுவதன் மூலம் திருக்குறளுக்கு இணையான சிறப்புக் கொண்டதாக நாலடியார் விளங்குகிறது என்பதனை அறியலாம்.

3. நான்மணிக் கடிகை

    நான்மணிக்கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார்  ஆவார். 101  வெண்பாக்களைக் கொண்ட இந்நூல், ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு நீதி கருத்துக்கள் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.

4. இன்னா நாற்பது

      இவ்வுலகில் துன்பம் தருவன இவை இவை என ஒவ்வொரு பாடலுக்கும் நான்கு இன்னாதவைகளை கூறுவதாக 40 பாடல்களைக் கொண்டது இன்னா நாற்பதாகும். இதனை இயற்றியவர் கபிலர் ஆவார்.

5. இனியவை நாற்பது

   பூதஞ்சேந்தனார் என்பவரால் பாடப்பட்ட இந்நூலில் 41 பாடல்கள் காணப்படுகின்றன. இவ்வுலகில் இன்பம் தருவன  எவை என்பதை பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.

6. திரிகடுகம்

      சுக்கு,மிளகு,திப்பிலி என்னும் மூன்று மருந்துகளால் ஆனது திரிகடுகம் எனப்படும். அதுபோல்  ஒவ்வொரு பாடலிலும் மூன்று உறுதிப் பொருட்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் திரிகடுகம் என அழைக்கப்படுகிறது.101 பாடல்களைக் கொண்ட இன்நூலை நல்லாதனார் பாடியுள்ளார்.

7. சிறுபஞ்சமூலம்

    கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறு மல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்து வேர்கள் சிறுபஞ்சமூலம் எனப்படும். இது நோய்க்கு மருந்தாவது போல மனிதர்களின் அக நோயினைப் போக்கும் ஐந்து ஐந்து கருத்துகளைக் கூறுவதாக ஒவ்வொரு பாடலும் காணப்படுவதால் சிறுபஞ்சமூலம் எனப்பட்டது. இதன் ஆசிரியர் காரியாசான் என்பவர் ஆவார். இதில் 102 பாடல்கள் காணப்படுகின்றன.

8. ஏலாதி

  கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்ட ஏலாதி 80 பாடல்களைக் கொண்டதாகும். ஏலம், இலவங்கப்பட்டை, சிறு நாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆகிய ஆறும் கலந்த மருந்து ஏலாதி  எனப்படும். இது நோய்க்கு மருந்தாவது போல மனிதர்களின் அக நோயினைப் போக்கும் ஆறு ஆறு  கருத்துகளைக் கூறுவதாக ஒவ்வொரு பாடலும் காணப்படுவதால் இது ஏலாதி எனப்பட்டது.

9. ஆசாரக்கோவை

    ஆசாரம் என்றால் நல்ல முறையில் நடத்தல் என்று பொருள். உள்ளும் புறமும் தூய்மையுடமையே  ஆசாரமாகும். அவ்வகை ஆசாரத்தைப் பற்றி கூறுவது ஆசாரக்கோவை ஆகும்.100 பாடல்களைக் கொண்ட இந்நூலை பெருவாயின் முள்ளியார் பாடியுள்ளார்.

10. முதுமொழிக்காஞ்சி

    முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் ஆவார். இந்நூல், பத்துப்பாக்களால் ஆகிய 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 'ஆர்கலியுலகத்து' எனத் தொடங்கும். நீதி நூல்களில் இஃதொன்றே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகிறது.

11.  பழமொழி

      தொல்காப்பியர் கூறும் 'முதுசொல்' என்பது பழமொழியைக் குறிக்கும். 400 பாடல்களைக் கொண்ட பழமொழி நானூறு எனவும் கூறுவர். முன்றுரை அரையனாரால் பாடப்பட்ட ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி பயின்று வருகிறது. இந்நூல், திருக்குறள்  நாலடியார் போன்று அறம் கூறும் நூலாக விளங்குகிறது.

      மேற்கண்ட பதினோரு நூல்களும்  அறக்கருத்துக்களைக் கூறும் நூல்களாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்  காணப்படுகின்றது. 

அகம் சார்ந்த நூல்கள் - அக நூல்கள்

     பதினெண் கீழ்க்கணக்கு நூற்களில் அகக்  கருத்துக்களைக் கூறும் நூல்களாக ஆறு நூல்கள் காணப்படுகின்றன. அவை,

1. கார் நாற்பது,  2. ஐந்திணை ஐம்பது,  3. ஐந்திணை எழுபது,

4.திணைமாலை 150, 5. திணைமொழி ஐம்பது, 6. கைந்நிலை

 என்பனவாகும்.

12. கார் நாற்பது

    மதுரை கண்ணன் கூத்தனார் என்பவரால் பாடப்பட்ட, கார் நாற்பது என்னும் இந்நூல், முல்லைத் திணையின் பெரும்பொழுதான கார்காலத்தில், முல்லை நிலத் தலைவியின் ஒழுக்கத்தினை கூறுவதாக அமைந்துள்ளது. இதில் அகக்கருத்துக்களைக் கூறும் 40 பாடல்கள் காணப்படுகின்றன.

13. ஐந்திணை ஐம்பது

 மாறன் பொறையனார் என்பவரால் பாடப்பட்ட ஐந்திணை ஐம்பது, ஐந்து திணைகளுக்கும் திணைகளுக்கு பத்து பாடல்கள் வீதம் 50 பாடல்களைக் கொண்டதாகும்.

14. ஐந்திணை எழுபது

   மூவாதியார் என்னும் புலவரால் பாடப்பட்ட ஐந்திணை எழுபது, ஐந்து திணைகளுக்கும் திணைகளுக்கு 14 பாடல்கள் வீதம் 70 பாடல்களைக் கொண்டதாகும்.

15. திணை மாலை 150

 திணை மாலை நூற்றிறைம்பதை பாடியவர் கணிமேதாவியா ராவார். ஐந்து திணைகளுக்கும் உரிய 153 பாடல்கள் இதில் காணப்படுகின்றன.

16. திணைமொழி ஐம்பது

 கண்ணன் சேந்தனார் என்பவரால் பாடப்பட்ட திணைமொழி ஐம்பதில் 50 அகப்பொருள் பாடல்கள் காணப்படுகின்றன.

17. கைந்நிலை

 புல்லங்காடனார் என்பவரால் பாடப்பட்டது கைந்நிலையாகும். இதில் ஐந்து திணைகளுக்கும் பாடல்கள் காணப்படுகின்றன. திணைக்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

 மேற்கண்ட ஆறு நூல்களும் அகத்திணை சார்ந்த  நூல்களாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ளது.

புறம் சார்ந்த நூல்

  பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் புறப்பொருளைக் கூறும் புறம் சார்ந்த நூலாக களவழி நாற்பது என்ற நூல் மட்டும் காணப்படுகின்றது.

18. களவழி நாற்பது

   களவழி நாற்பதில்    புறக்கருத்துகளை கூறும் 40 பாடல்கள் காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் பொய்கையார் ஆவார். இந்நூல் சோழன் செங்கணான்  என்னும் மன்னன், கழுமலம் என்னும் இடத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் மன்னனை போரிட்டு வென்ற செய்தியைக் கூறுவதாக அமைந்துள்ளது.

முடிவுரை

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 11 அற நூல்களும், 6 அகநூல்களும், ஒரு புறநூலும் காணப்படுகின்றது. இவை அனைத்தும் அக்கால மக்களின் வாழ்வியல் அற அக ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவனவாக விளங்குகின்றன.

!!!! இராஜாலி!!!!

செவ்வாய், 30 ஜனவரி, 2024

நாரை விடு தூது - சக்திமுத்தப் புலவர்

   நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திமுத்தப் புலவர். இவர் சத்திமுத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை. சத்திமுத்தம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள தலமாகும்.

நாராய் நாராய் செங்கால் நாராய்

   சத்திமுத்தப் புலவர்,  வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்,

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

"எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

என்ற பாடலில் "நாரையே! நாரையே! சிவந்த கால்களை உடைய நாரையே! பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே! நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு திரும்புவீரானால் எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி, நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம், எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில் குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய் போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி, காலைக் கொண்டு என் உடலை தழுவி, பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!" என்னும் பொருள் படும்படி பாடியுள்ளார்.

    அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான் என்பது செய்தி.

**** இராஜாலி**** 

திங்கள், 29 ஜனவரி, 2024

ஆமணக்குக்கும் யானையும் - காளமேகம்

     காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், தனது காதலி  மோகனாங்கி  என்பவருக்காக சைவ சமயத்திற்கு மாறினார்.  இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

ஆமணக்குக்கும் யானையும் 

  காளமேகப்புலவர் இரு பொருள்படும்படி சிலேடையாக  ஆமணக்கையும் யானையையும்  ஒரு தனிப்பாடலில்  பாடியுள்ளார்.

ஆமணக்குச் செடி 

     ஆமணக்குச் செடியில் அமணக்குக் கொட்டையில் வெண்ணிற முத்து இருக்கும்.  காற்றில் அதன் கொம்பை ( கிளை ) அசைக்கும். உள்ளே வெற்றிடமான துளையை உடைய தண்டுகளுடன் வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தினால் தலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும்.

யானை

 யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும். என்பதை,

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்

கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்

ஆமணக்கு மால்யானை யாம்.

என ஆமணக்குச் செடியின் தன்மையையும், யானையின் தன்மையையும் இந்தப் பாடலில் சிலேடையாகக் கூறியுள்ளார்.

**** இராஜாலி ****

என் கொணர்ந்தாய் பாணா நீ - வீரராகவ முதலியார்

      வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பூதூரில் வேளாண் குலத்தில் வடுகநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பிறவியிலேயே பார்வையற்றவர். அந்தகக்கவி என அழைக்கப்பட்டார். சிலேடைச் சுவை நிறைந்த தனிப்பாடல்களுக்காகப் புகழ் பெற்றவர். சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். அவர் பாடிய தனி பாடல்களில் ஒன்று ' என் கொணர்ந்தாய் பாணா நீ' என்ற பாடலில் யானையின் பல்வேறு பெயர்களை நயம்பட எடுத்துக் கூறியுள்ளார். 

என் கொணர்ந்தாய் பாணா நீ

       இராமன் என்பவன் மழை போலக் கொடை வழங்கும் வள்ளல். புலவர்    ஒருவர் அவனைக் கண்டு பாடினார். அவன் புலவருக்கு யானை ஒன்றைப் பரிசாகத் தந்தான். புலவர் யானையுடன் வீடு திரும்பினார். அவரது மனைவி பாணி 'என்ன கொண்டுவந்தாய்' என வினவினாள். புலவர் யானையைக் குறிக்கும் சொற்களை ஒவ்வொன்றாகச் சொல்ல மனைவி அதனை வேறு வகையாகப் புரிந்துகொண்டு பேசுகிறாள். புலவர் களபம் (யானை, சந்தனம்) என்றார். மனைவி சந்தனம் என எண்ணி பூசிக்கொள் என்றாள். புலவர் மாதங்கம் (யானை, மா தங்கம்) என்றார். மனைவி பெரும் பொருள் எனக் கருதி, இனி நமக்குக் குறைவு ஒன்றும் இல்லை, வாழ்ந்தோம் என்றாள். புலவர் வேழம் (யானை, கரும்பு) என்றார். மனைவி கரும்பு எனக் கருதி,  தின்னும் என்றாள். புலவர் பகடு (யானை, எருது) என்றார். மனைவி மாடு என எண்ணி, ஏரில் பூட்டி உழவு செய்க என்றாள். புலவர், கம்பமா (யானை, கம்பு மாவு) என்றார். மனைவி கம்பு மாவு எனக் கருதி, களி கிண்டி உண்ண உதவும் என்றாள். புலவர் கைம்மா  என்றார். மனைவி நீண்ட தும்பிக்கையை உடைய  யானை என்பதை புரிந்துகொண்டு, நமக்கே உணவு இல்லாதபோது யானைக்கு உணவு வழங்குவது எப்படி என்று எண்ணிக் கலங்கினாள். என்பதை,

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்

மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள்

பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை

கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்

கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.

   என்ற தனிப்பாடலில், களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா போன்ற பெயர்களில் யானை அழைக்கப்படுகிறது என்பதனை இப்பாடலில் எடுத்துக் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

சனி, 27 ஜனவரி, 2024

அவ்வையாரின் தனிப்பாடல் - எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது

     தமிழ் புலவர்களில் அவ்வையார் என்ற பெயரில் பல புலவர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். குறிப்பாக சங்ககாலத்து அவ்வையார், பிற்காலத்து அவ்வையார் என்பவர்கள் காலத்தால் அறியப்படக்கூடியவர்கள். அவர்களில் ஒருவர் பாடிய தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள பல பாடல்களில் எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதாகும்.

பாடலின் விளக்கம்

       இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்திறமையைப் பெற்று காணப்படுகின்றன. திறமை உள்ளவர்கள் திறமையற்றவர்கள் என்று யாரையும் பழித்து பேச முடியாது குறிப்பாக, வான் குருவி எனப்படும் தூக்கணாங்குருவியின் கூட்டை போல் யாராலும் அமைக்க முடியாது. அரக்கு எனப்படும் பசையைக் கொண்டு கரையான் கட்டும் புற்றைப் போல் எந்த வல்லுனராலும் கட்ட முடியாது. தேனீக்கள் கட்டும் தேன் கூட்டினை எவராலும் உருவாக்க முடியாது. சிலந்தியின் வலையினை யாராலும் பின்ன முடியாது. எனவே இவ்வுலகில் நான்தான் அறிவு மிக்கவன் திறமையானவன் என்ற ஆணவம் கூடாது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு பண்பு இருக்கிறது என்பதினை,

 வான்குருவியின் கூடு வல் அரக்கு தோல்கரையான் 

 தேன் சிலம்பி யாவருக்கும் செய் அரிதால்.... யாம் பெரிதும்

 வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்!

 யாவர்க்கும் ஒவ்வொன்று எளிது!

என அவ்வையார் பாடியுள்ளார். இப்பாடல், கவிச்சக்கரவர்த்தி கம்பனின்  கவித்துவ ஆணவத்தை போக்குவதற்காக அவ்வையாரால் பாடப்பட்டது எனக் கூறுவர்.

****இராஜாலி ****

திங்கள், 25 டிசம்பர், 2023

முக்கூடற் பள்ளு - ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள்!

நூல் குறிப்பு

  சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான பள்ளு இலக்கியம் பள்ளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். பள்ளர்கள் என்பவர்கள்- பள்ளங்களில் - வயல்வெளிகளில் பயிர் தொழில் செய்யும் உழவர்கள் ஆவார்கள். அவர்களின் வாழ்வியல் சிறப்புகளை எடுத்துக்கூறும் இலக்கியமாக பள்ளு இலக்கியங்கள் காணப்படுகின்றன.

   பள்ளு இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கது முக்கூடற் பள்ளு ஆகும். இது, திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி நதியோடு சிற்றாறும் கயத்தாரும் கூடும் இடம் முக்கூடல் எனப்படுகிறது.  அங்கு, கோயில் கொண்டிருக்கும் அழகர் மீது பாடப்பட்டது.  வயலும் வயல் சார்ந்த இடமாகிய மருத நிலம் பற்றி விவரித்துக் கூறப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை.

ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள்!

 ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி முக்கூடற் பள்ளு கூறும் போது..

"நாளை ஆற்றில் வெள்ளம் வருவதற்கான குறிகள் தோன்றுகின்றன. தென்மேற்குத் திசையில் உள்ள மலையாள நாட்டை ஒட்டிய மின்னலும், தென் கிழக்குத் திசையில் உள்ள இலங்கை நாட்டுத் திசையில் மின்னும் மின்னலும் வளைத்து மின்னுகின்றன. நேற்றைக்கும் இன்றைக்கும் மரக்கிளைகளைச் சுற்றிச் சுழன்று காற்று வீசுகின்றது. கிணற்றில் வாழ்கின்ற சொறித்தவளை மழை வருவதற்கு அறிகுறியாகக் குரல் எழுப்புகிறது. வயலில் சேற்றில் வாழும் நண்டுகள் காலத்தைக் குறிப்பால் உணர்ந்து சேற்று மண்ணைக் கொண்டு வளைக்குள் நீர் புகுந்துவிடாமல் வளையின் வாயை உயர்த்தி அடைக்கின்றன. மழையைத் தேடி வானத்தில் கோடி எண்ணிக்கை உடைய வானம்பாடிப் பறவைகள் பாடியாடுகின்றன. உலகமெல்லாம் போற்றி வழிபடும் திருமாலான அழகருக்கு ஏற்றவர்களான சேரியில் வாழும் பல்வேறு பள்ளர் இனத்தவர்களே! வாருங்கள் பாடியாடித் துள்ளிக் குதித்து மகிழ்வோம்." என முக்கூடற்பள்ளு கூறுகிறது.

**** இராஜாலி ****

குற்றாலக் குறவஞ்சி - மலை எங்கள் மலையே!

நூல் குறிப்பு

   சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான குறவஞ்சி இலக்கியம் பாட்டுடைத் தலைவனை அவனது வீதி உலாவின்  போது கண்டு காதல் கொண்ட தலைவி  காதல் நோயால் வாடி தவிப்பதை போக்கும் நிலையில் குறமகள் ஒருத்தி குறி கூறுவதாக அமைந்ததாகும்.

     குறவஞ்சி இலக்கியங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது திரிகூடராசப்பக் கவிராயரால்  பாடப்பட்ட குற்றாலக் குறவஞ்சி ஆகும். இதில் குற்றாலநாதர் மீது காதல் கொண்ட  வசந்த வல்லிக்கு குறமகள்  குறி சொல்லுவதாக ஆசிரியர் படைத்துள்ளார்.

திரிகூட மலையெங்கள் மலையே!

   தேவலோக வாத்தியங்கள் முழங்கும் அந்நகரில் கோயில் கொண்டுள்ள குற்றால நாதரின் சிறப்புகளைப் பாடிக் கொண்டே வந்த குறமகளைக்  கண்டு வசந்தவல்லி மன மகிழ்ச்சி கொண்டாள். குற்றால நாதர் வீற்றிருக்கும் திரிகூட மலையின் சிறப்புகளை அறிய விரும்பி, "சந்தனம் பூசிய மார்பும், துவளும் இடையும், முத்துப் பற்களும், பவள இதழ்களும் உடைய குறப்பெண்ணே உன் சொந்த மலையின் வளத்தைப் பற்றி எனக்குக் கூறுவாயாக?" எனக் கேட்டாள்.

   அதனைக் கேட்ட குறமகள், வசந்தவல்லியிடம்   தங்கள் மலையின் வளத்தை பின்வருமாறு கூறினாள்.

"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல் இளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே" - என,

"எங்கள் திரிகூட மலையில்,  ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்துக் கொடுத்துத் தம் மந்திகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும். அம்மந்திகள் கீழே சிந்தும் கனிகளை எதிர்பார்த்துத் தேவர்கள் கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். வேடுவர்கள் தம் கண்களால் வானவர்களைக் கீழே வருமாறு அழைப்பர். சித்தர்கள் பலரும் வந்து காய சித்தி மூலிகைகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். தேன் அருவியின் அலைகள் மேலே எழும்பிச் சென்று வானின் வழியாக ஒழுகும். அதனால் சூரியனின் தேர்ச் சக்கரங்களும், குதிரைக் கால்களும் வழுக்கும். வளைந்த பிறையினைச் சடையில் சூடிய குற்றால நாதரின் வளமுடைய திரிகூட மலைதான் எங்கள் மலை" எனக் குறமகள் திரிகூட மலையின் சிறப்புகளை வசந்தவல்லிக்குக் கூறினாள். 

**** இராஜாலி ****

தமிழ்விடு தூது - 1 முதல்10 கண்ணிகள்

நூல் குறிப்பு

 தமிழ் மொழியில் காணப்படும் 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது இலக்கியமாகும். அகத்துறை சார்ந்த இவ்விலக்கியம். கலிவெண்பா என்னும் செய்யுளில் பாடப்படும். தலைவன் தலைவியர்கள் காதல் காரணமாகத் துன்புறும்போது, ஒருவர் மற்றொருவரிடம் தம் வருத்தத்தைத் தெரிவிக்கும் படி உயர்திணைப் பொருட்களையோ, அஃறினைப் பொருட்களையோ தூது அனுப்பும் நிலையில் பாடப்படுவது தூது இலக்கியம் ஆகும்.

தமிழ்விடு தூது

  மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப்பெற்றது தமிழ்விடு தூது என்னும் நூலாகும். 268 கண்ணிகளைக் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் யார் என தெரியவில்லை. இந்நூலில் தூது பொருளான தமிழ் மொழியின் சிறப்புகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. 

சான்றோர் வளர்த்த தமிழ் மொழி


தமிழ் மொழியின் சிறப்புகளை தமிழ்விடு தூது கூறும்போது,

   "புகழ்மிக்க தமிழே! நீ சிறப்புமிக்க கூடலென்றும், மதுரை என்றும் போற்றப்படுகின்ற சிவராசதானியைக் காத்து அழகு பொருந்திய தமிழ்ச் சங்கத்தில் 49 புலவர்களில் முதல் புலவராக அமர்ந்து கவி பாடிய சிவபெருமானாலும்; எட்டுத்திக்கும் புகழ் பரப்பிய தமிழரசி என போற்றப்படும் உமையவளாலும்; மனம் விரும்பி சிவன் ஞானத் தொகுதியுடைய ஏட்டுச்சுடிகளில் ஒரு சுவடியை   கையில் எடுத்த கணபதியாலும்; ஒரு காலத்தில் மதுரை நகரில்  அரசாட்சி செய்து, மதுரை தமிழ் சங்கத்து புலவர்களின் எதிரே அமர்ந்து தமிழ் பாடல்களின் சிறப்பை உணர்த்திய வேற்படையை உடைய முருகக்கடவுளாலும்; மூன்று வயதில் அன்னை உமையவளிடம் ஞானபால் உண்டு வடமொழி நூல்களையும், தென்மொழி நூல்களையும் கற்றறிந்து, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தராலும்; முக்கண்ணனாகிய சிவபெருமானை வேண்டி முன்பு முதலையுண்ட பிள்ளையை உயிர் பெற்றுத் தரச் செய்த சுந்தராலும்; பிரம்மனும் திருமாலும் தேடியும் அறிய முடியாத  சிவபெருமானின் திருவடிகளைத் திருநல்லூரில் தமிழ்ச் செய்யுள் பாடி தன் தலை மேல் பெற்ற திருநாவுக்கராலும்; மணம் மிக்க தாழம் பூவை தலையில் சூடாத சிவபெருமான், காய்ந்த பனை ஓலையில் பாட்டெழுதி தரும்படி வேண்டிய மாணிக்கவாசகராலும்; சிறப்புமிக்க முத்தமிழை ஓதிய மாமுனி ஆகிய அகத்தியராலும்; தொல்காப்பியத்தை படைத்தருளிய தொல் முனியாகிய தொல்காப்பியராலும்; பதி எனப்படும் சிவபெருமானிடம் உயிர்கள் செல்வதற்கு 12 நூற்பாக்கள் பாடிய  மெய்க்கண்ட தேவராலும் போற்றி வளர்க்கப்பட்ட தமிழே!" எனத் தமிழ் மொழி சிவபெருமான், உமையவள், கணபதி, முருகப்பெருமான், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், அகத்தியர், தொல்காப்பியர், மெய்க்கண்ட தேவர் போன்றோர்களால் வளர்க்கப்பட்டது எனத் தமிழ்விடு தூது கூறுகிறது.

**** இராஜாலி****

வெள்ளி, 22 டிசம்பர், 2023

கலிங்கத்துப்பரணி - களம்பாடியது

 நூல் குறிப்பு

     சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான பரணி இலக்கியம், போர்க்களக் காட்சியையும் போரில் வெற்றி பெற்ற வீரரின் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் தன்மையில் பாடப்படுவதாகும்.

 ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

 மான வனுக்கு வகுப்பது பரணி 

எனப் பரணி இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது 'இலக்கண விளக்கம்' என்னும் நூல். பரணி நூல்களில் முதன்மையானது கலிங்கத்துப்பரணியாகும். இந்நூல், செயங்கொண்டார் என்பவரால் பாடப்பட்டதாகும். கி.பி 12-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் அவை புலவராக இருந்த செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியைப் பாடியதால் 'பரணிக்கோர் செயங்கொண்டார்' என அழைக்கப்படுகிறார். குலோத்துங்க சோழனின் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும்,  கலிங்க மன்னன்  அனந்தவர்மன்  என்ற மன்னனுக்கும் இடையில் கலிங்கத்தில் நடந்த போர் செய்தியையும் அதில் வெற்றி பெற்ற கருணாகரத் தொண்டைமானின் சிறப்புகளையும் கூறுவதாக இன்னூல் அமைந்துள்ளது.

களம் பாடியது

        கலிங்கத்துப்பரணியில் இறுதி உறுப்பாகக் காணப்படுவது 'களம் பாடியது' என்னும் உறுப்பாகும். இதில், போர் முடிந்த பின்னர் போர்க்களத்தில் காணப்படும் காயம்பட்ட வீரர்களின் நிலைகளும் போர்க்களத்தின் தன்மைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, போர்க்கள தெய்வமாகிய காளி தேவியைப் பார்த்து போர்க்களத்துப் பேய்கள், 'போர்க்களத்தின் தன்மைகளை எங்களுக்கு கூறவேண்டும்' என வேண்டின. அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காளி தேவி, போர்க்களக் காட்சியினை பேய்களுக்கு பின்வருமாறு எடுத்துக்கூறுவதாக செயங்கொண்டார் பாடியுள்ளார்.

உயிர் துறந்த வீரர்களின் முகமலர்ச்சி

   "விருந்தினரும் வறியவரும் ஒன்றாக இணைந்து உணவு உண்பதைக் கண்டு மேன்மக்கள் முகமலர்ச்சி கொள்வதைப் போல, இறந்த வீரர்களின் உடலை பருந்துகளும் கழுகுகளும் ஒன்றாக இணைந்திருந்து உண்ணும் போது உயிர் துறந்த வீரனின் முகம் தாமரை பூ போல் மலர்ச்சியாகக் காணப்படுவதை காணுங்கள்"  எனக் காளிதேவி உயிர் துறந்த வீரர்களின் உடலை பேய்களுக்கு காட்டிக் கொடுத்தாள்.

    மேலும், போர்க்களத்தில் காயங்கள் பலப்பட்டு உயிர் போகாமல் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களின் அருகே காத்திருக்கும் நரி கூட்டங்களைப் பார்த்து "உயிர் போகும் வரை பிறருக்கு எதுவும் உதவாமல் இருக்கும் உலோபிகள் போல, காயம் பட்டு  உயிர் போகும் நிலையில் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களை காணுங்கள் " எனக் காளிதேவி, போர்க்களத்தில் உயிர் போகாமல்  துடிக்கும் வீரர்களை பேய்களுக்கு காட்டிக் கொடுத்தாள்.

வீழ்ந்த யானைகளை விட்டு  பறந்த  வண்டுகள்

           போர்க்களத்தில் அம்பு பட்டு மதநீர் ஒழுக  வீழ்ந்து கிடக்கும் யானைகளின் நிலையினை கூறும் போது, "செல்வம் வற்றியதும்  பிரிந்து செல்லும் விலைமாதரைப் போல, வண்டுகள் மதநீர் ஒழுகும் யானைகளின் மதநீரை உண்டு களித்தன, யானையின் ஆவி பிரிந்ததும், தேவர்கள் தூவும் மலர்களில் உள்ள தேனை உண்பதற்காகப்  பறந்து செல்கின்றன அந்தக் காட்சியைக் காணுங்கள்!" எனக் காளிதேவி யானைகளின் நிலைகளை காட்டிக் கொடுத்தாள்.    

     மேலும்,  போர்க்களத்தில் அம்புபட்டு குருதி ஒழுக,  கொடியோடு வீழுந்து கிடக்கும் யானைகளைக் கண்ட காளி,

 காந்தருடன் கனலமளி  யதன்மேல்  வைகுங்

 கற்புடைய  மாதரை ஒத்தல்  காண்மின் காண்மின்

எனக் "கற்புடைய பெண்கள் உயிர் பிரிந்த  தன் காதலனோடு சிவந்த நெருப்பு  படுக்கையில் படுத்திருப்பதைப் போல, யானைக் கூட்டங்கள் கொடிகளோடு வீழ்ந்து கிடப்பதை பாருங்கள்" எனப் பேய்களுக்கு காட்டி கொடுக்கிறாள்.

கணவரைத் தேடிய மனைவியர் செயல்


  போர்க்களம் வந்து மடிந்த வீரர்களைத் தேடி வந்த மனைவிமார்கள் அங்கு நிற்கும் சாதகரான காளியின் மெய்க்காப்பாளரிடம் " தன் கணவருடன் தாமும் போக வேண்டும்" என்று கேட்பார்கள். அவர் பதில் கூறாத நிலையில் கணவனின் உடலை தேடி, தடவி பார்ப்பார்கள். கிடைக்காத நிலையில் அங்கு நிற்கும் இடாகினியாகிய பிணம் தின்னும் பேயிடம் " என் கணவர் கிடந்த இடம் எங்கே?  என்று கேட்டு அலையும் பெண்களைப் பாருங்கள்!"

     எனக் காளிதேவி, போர்க்களத்தில் கணவன் உடலைத் தேடி அலையும் பெண்களின் நிலையினை, போர்க்கள பேய்களுக்கு கூறுவதாக செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் கூறியுள்ளார்.

**** இராஜாலி ****

வெள்ளி, 20 அக்டோபர், 2023

இராவண காவியம் - தாய்மொழிப் படலம்

நூல் குறிப்பு


   புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட இராவண காவியம் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் பரப்பும் நோக்கத்தில் படைக்கப்பட்டதாகும். இதில் 5 காண்டங்களும், 57 படலங்களும், 3100 பாடல்களும் காணப்படுகின்றன. இக்காப்பியம் இராமாயண காவியத்திற்கு எதிர்மறையான சிந்தனை கொண்டதாகும்.

தாய்மொழிப் படலம்

   இராவண காவியத்தில் முதல் காண்டமான தமிழ்க் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது தாய்மொழிப் படலம் ஆகும். இதில் தமிழ் மொழியின் சிறப்புகளும், தமிழ் மொழி வளர்ச்சியின் அவசியங்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்

  புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் தமிழ் பற்றாளர்களின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ள நிலையினை பற்றி கூறும்போது,  "நற்றமிழாகிய தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதால், இங்குள்ள மக்களின் கைகளில் ஏடுகள் ஆகிய புத்தகங்கள் இல்லாமல் இல்லை. இங்கு இயல் இசை கல்லாதவர்கள் இல்லை. பாடும் புலமைப் பெறாதவர்கள் இல்லை. பள்ளிக்குச் சென்று நல்லறிவு பெறாதவர்கள் இல்லை" எனக் கூறுகிறார்.

  மேலும் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்கள், தமிழ் மொழியைத் தங்கள் இருவிழிகளாகப் போற்றினர். அவர்கள் பார்வைக்குத் தெரிந்தது அனைத்தும் தமிழ் உருவங்களாக விளங்கின. அவர்களுக்கு தமிழ் மொழியே காப்பாக அமைந்தது. அவர்கள் தமிழ் மொழியை தனது உரிமையாக கருதி வாழ்ந்தார்கள். அதன் காரணமாக,

நாடெல்லாம் புலவர் கூட்டம்
நகரெல்லாம் பள்ளி ஈட்டம்
வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்
விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்

என்ற நிலையில் தமிழ் மக்களின் வாழ்வோடு தமிழ் மொழி இணைந்து சிறப்படைந்தது.

தமிழ் மொழி பயிலாக்காலே

  தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழியை கற்கும் நிலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் " உணவினைப் பெரிதாக எண்ண மாட்டார்கள். பொன்னாளாகிய பட்டாடைகளை விரும்ப மாட்டார்கள். பொன் நகைகளை விரும்பி அணிய மாட்டார்கள். மலர் மாலைகளைச் சூட மாட்டார்கள். இனிமையான இசையினை கொடுக்கும் யாழை மீட்ட மாட்டார்கள். " என புலவர் குழந்தை கூறுகிறார்.

  மேலும், தமிழறிந்த சான்றோர்கள் பலர், பாடல்கள் ஏற்றியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் உரைகளை எழுதியும் தமிழ் மொழியினை வளர்த்தார்கள். அவ்வாறு வளர்க்கப்பட்ட செந்தமிழே நம் தாய்மொழி. எனப் புலவர் குழந்தை அவர்கள் தாய்மொழிப் படலத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறியுள்ளார்.

****இராnஜாலி ****

வெள்ளி, 13 அக்டோபர், 2023

எட்டுத்தொகை நூல்கள்

முன்னுரை

 தமிழ் இலக்கியங்களில் பழமை வாய்ந்தது, சங்க இலக்கியங்கள் ஆகும். ஏறத்தாழ கி.மு 200 முதல் கி.பி 200 வரையில் வாழ்ந்த சங்கப் புலவர்களால் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டன. அப்பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை. பல பாடல்கள் அழிந்துபோயின, நல்லறிஞரகள் எஞ்சியிருந்த பாடல்களைத் திரட்டி, சிறந்த பாடல்களை மட்டும் பொருள் அடிப்படையிலும், செய்யுள் அடிப்படையிலும், அடி வரை அடிப்படையிலும், வகுத்து அவற்றை எட்டுத்தொகை நூல்களாக தொகுத்தனர். இத்தொகுப்பை பழைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெரும் தொகை' என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய பழமை வாய்ந்த எட்டுத்தொகை நூல்களைப் பற்றி, இக்கட்டுரையில் காணலாம்.

எட்டுத்தொகை நூல்கள்

  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதனை,

            நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
            ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
            கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
            இத்திறத்த எட்டுத்தொகை

எனப் பழைய வெண்பா குறிப்பிடுகிறது.இவ்வெட்டு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன. பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றியன. பரிபாடல் என்பது அகப்பொருள் புறப்பொருள் இரண்டும் கலந்து வரும் நூலாகும். எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் பாடல்கள், 400க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். பெண்பாற் புலவர்களும், அரச குடும்பத்தவரும் பல பாடல்களை இயற்றியுள்ளனர்.

எட்டுத்தொகையில் அகநூல்கள்

  எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன.

நற்றிணை

     இந்நூலில் 9 முதல் 12 அடி வரையில் உள்ள 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். நற்றிணை என்பது நல்ல திணை எனப் பொருள்படும். இந்நூல் ஐந்து திணைகளுக்கும் உரிய நானூறு பாடல்களைக் கொண்டமையால் இதனை, நற்றிணை நானூறு எனவும் வழங்குவர். இந்நூல் 193 புலவர்களால் பாடப்பெற்ற, இந்நூல் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவரால் தொகுப்பிக்கப்பட்டது. இந்நூலை, தொகுத்தவர் யார் என தெரியவில்லை. 
     தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு நற்றிணையில், சங்கத் தமிழ் மக்களின் உணர்வு,பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன. திருக்குறளின் கருத்துக்கள் பல இந்நூலில் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.

குறுந்தொகை

     நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணரலாம். இந்நூல் 4 முதல் 8 அடி வரையில் உள்ள ஐந்து திணைகளுக்கும் உரிய 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். 206  புலவர்களால் பாடப்பட்ட இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார். இந்நூலைத்  தொகுப்பித்தவர் யார் என தெரியாது.

   முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் குறுந்தொகை. உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் இந்நூலை மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ளது மூலம் இந்நூலின் சிறப்பை உணர முடிகிறது. குறுந்தொகையில் பரணர் பாடிய பாடல்கள் பல வரலாற்றுக் குறிப்புகளை தெரிவிக்கின்றன. சங்கத் தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு உணர்வு, பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன.  

ஐங்குறுநூறு

    ஐந்து திணைகளுக்கும், திணைக்கு 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது ஐங்குறுநூறாகும். இந்நூலில் 3 அடி முதல் 5 அடிவரையுள்ள பாடல்கள் காணப்படுகின்றன. இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர்கிழார்.  தொகுப்பித்தவர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர். இந்நூலில் காணப்படும் குறிஞ்சித்திணை பாடல்களைப் பாடியவர் கபிலர். முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார். மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் அம்மூவனார். பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார் ஆவார்.

கலித்தொகை

எட்டுத்தொகை நூல்களில் கலிவெண்பாவால் பாடப்பட்ட நூல் கலித்தொகை ஆகும் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என சிறப்பித்துக் கூறுவதன் மூலம் கலித்தொகையின் சிறப்பினை உணரலாம். 150 பாடல்களைக் கொண்ட இந்நூல், 11 அடி முதல் 80 அடி வரையிலான பாடல்களைக் கொண்டது. இதனை தொகுத்தவர் நல்லந்துவனார். Jjதொகுப்பித்தவர் யார் என தெரியாது. கலித்தொகையில் 29 பாடல்களை கொண்ட குறிஞ்சித் திணைப் பாடல்களை கபிலரும், 17 பாடல்களைக் கொண்ட முல்லைத் திணைப் பாடல்களை சோழன் நல்லுருத்திரனரும், 35 பாடல்களைக் கொண்ட மருதத்திணைப் பாடல்களை மருதனிளநாகனாரும், 33 பாடல்களைக் கொண்ட நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனாரும், 36 பாடல்களை கொண்ட பாலைத்திணை பாடல்களை பாலை பாடிய பெருங்கடுங்கோவும் பாடியுள்ளார்கள்.

   கலித்தொகை பாடல்கள் பெரும்பாலும் நாடகப் பாங்கினை கொண்டதாக காணப்படுகின்றன. மேலும், சங்கத் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும், பழக்கவழக்கங்களையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது

அகநானூறு

    அகநானூறு, இது ஓர் அகத்திணை சார்ந்த நூல். இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1,3.5,7,9,11 ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.

2,8,12,18..என்ற எண்ணாலான பாடல்கள் 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.

4,14,24.. என்ற எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. 

6,16.26.. என்ற எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.

10,20,30.. என்ற எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

 இந்நூலைத்  தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

● களிற்றியானைநிரை

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

● மணிமிடை பவளம் 

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாகஅமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
  • நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களில் அகம் சார்ந்த நூல்கள் ஆகும். இவை, பண்டையகால மக்களின் அகம் கருத்துக்களையும், வாழ்வியல் சார்ந்த ஒழுக்கங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் புறம் சார்ந்த நூல்கள்

  எட்டுத்தொகையில் புறக்கருத்துக்களை கூறும் நூல்களாக பதிற்றுப்பத்தும், புறநானூறும் காணப்படுகின்றது. 

பதிற்றுப்பத்து

     (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். சேர மன்னர்களைப் பற்றி பத்துப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப்பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள 80 பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.  இது சேரமன்னர்களின் மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை,போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் எடுத்துக்கூறுவதாகக் காணப்படுகின்றது. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

பாடல் தொகுதிகளின் பட்டியல்
  • முதல் பத்து - கிடைக்கவில்லை.
  • இரண்டாம் பத்து - பாடியவர் குமட்டூர் கண்ணனார், பாடப்பெற்ற மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவார்.
  • மூன்றாம் பத்து - பாடியவர் பாலைக் கௌதமனார், பாடப்பெற்ற மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்  ஆவார்.
  • நான்காம் பத்து - பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பெற்ற மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் ஆவார்.
  • ஐந்தாம் பத்து - பாடியவர்  பரணர், பாடப்பெற்ற மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவார்.
  • ஆறாம் பத்து  - பாடியவர் காக்கைபாடினியார் (நச்செள்ளையார்), பாடப்பெற்ற மன்னன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவார்.
  • ஏழாம் பத்து  - பாடியவர்  கபிலர், பாடப்பெற்ற மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவார்.
  • எட்டாம் பத்து  - பாடியவர்  அரிசில் கிழார், பாடப்பெற்ற மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார்.
  • ஒன்பதாம் பத்து - பாடியவர்  பெருங்குன்றூர் கிழார், பாடப்பெற்ற மன்னன் இளஞ் சேரல் இரும்பொறை ஆவார்.
  • பத்தாம் பத்து - கிடைக்கவில்லை.
 பதிற்றுப்பத்தை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை.

புறநானூறு

   புறத்திணை பற்றிப் பேசும் 400 பாடல்களின் தொகுப்பே புறநானூறு ஆகும். பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள், சிற்றரசர்கள், கடையெழு வள்ளல்கள், புலவர்கள், மற்றும் பண்டைய தமிழர்களின்  வாழ்க்கை முறை, பழக்கவழக்கப் பண்பாடுகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் நூலாக  புறநானூறு காணப்படுகிறது.
      165 புலவர்களால் பாடப்பட்டதாகும். புறநானூறில் 4 அடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் என தெரியவில்லை. ஜி.யு. போப் அவர்கள் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற உயர்ந்த கருத்துக்களை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

எட்டுத்தொகையில் அகம் புறம் சார்ந்த நூல்

 எட்டுத்தொகை நூற்களில் அகக்கருத்துக்களையும் புற கருத்துக்களையும் ஒருங்கே கூறும் நூலாக பரிபாடல் காணப்படுகிறது.

பரிபாடல்

     பா வகையால் பெயர் பெற்ற பரிபாடலில் 25 அடி முதல் 400 இடம் பெற்றுள்ளது.  22 பாடல்கள் மட்டுமே இந்நூலில்  இருந்து கிடைத்துள்ளது. அவற்றில் குறிப்பாக, திருமாலை பற்றி ஆறு பாடல்களும், வைகை ஆற்றைப் பற்றி எட்டுப் பாடல்களும், செவ்வேள் எனப்படும் முருகனைப் பற்றி எட்டுப் பாடல்களும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை. வைகை ஆற்றின் வளம், மதுரை நகரின் சிறப்பு போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

முடிவுரை

     சங்க இலக்கியப் பிரிவுகளில் ஒன்றான எட்டுத் தொகையில், 8 தொகுக்கப்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. அவற்றில் 5 நூல்கள் அகம் சார்ந்தவையாகவும், இரண்டு நூல்கள் புறம் சார்ந்தவையாகவும், ஒரு நூல் அகம் புறம் சார்ந்த நூலாகவும் காணப்படுகின்றது. இவை எட்டும் பண்பட்ட பண்டையத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் களஞ்சியங்களாக விளங்குகின்றது.

††††இராஜாலி††††

சனி, 7 அக்டோபர், 2023

கடுவெளிச் சித்தரின் - ஆனந்தக் களிப்பு

முன்னுரை

தமிழகத்தில் சித்தர்கள் பலர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருந்தாலும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே தமிழ் சித்தர் பரம்பரையின் முன்னவராக விளங்குகிறார். தமிழ் மரபில் பதினெண் சித்தர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களில் ஒருவர் கடுவெளிச் சித்தர் ஆவார். 'கடுவெளி என்பது வாக்கும் மனமும் கடந்த நிலையில் உள்ள பரவெளி'- இதனைப் பற்றி அதிகமாக இவர் பாடியுள்ளதால் கடுவெளிச் சித்தர் என அழைக்கப்பட்டார். இவர் பாடிய ஆனந்தக் களிப்பு 34 கண்ணிகளைக் கொண்டதாகும். இதில் மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை என்றும், செய்யக்கூடியவை எவை என்றும் விளக்கமாகக் கூறியுள்ளார்.

மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை?

கடுவெளிச் சித்தர் மனிதர்கள்  செய்யக்கூடாதவை எவை எனப் பின் வருவனவற்றைக் கூறுகின்றார். 

கோபத்தைக் கட்டுப்படுத்து!

பாபம் செய்யாதே! மனிதனே உன்னுடைய வாழ்வில் யாருக்கும் சாபம் கொடுத்துவிடாதே; நடக்கும் ஒவ்வொரு செயலும் விதிப்படிதான் நடக்கும். விதியை நம்மால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிட முடியுமா?. எமன் வந்து நம்மை எந்த நேரத்தில் கொண்டு செல்வான் என்று தெரியாது. எனவே கோபப்பட்டு பிறருக்கு சாபம் கொடுத்து பாவத்திற்கு மேல் பாவம் செய்யக்கூடாது எனக் கூறுகிறார்.

சூதுசெய்யாதே!

சூது என்பது தன்னையும் அழித்துப் பிறரையும் அழிப்பதாகும். எனவே சூது என்ற வஞ்சகச் செயலை நீ செய்யாதே! அப்படி நீ சூது செய்தால் அது உன்னை மட்டுமல்ல உன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் முழுமையாக நாசப்படுத்திவிடும். இதனை,

"சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

என்று பாடியுள்ளார்.

நல்லவர்களைத் தள்ளாதே!

உன்னோடு கூடவே இருக்கும் நல்லவர்களையெல்லாம் உன்னைவிட்டு ஒதுக்கித் தள்ளாதே! பொல்லாங்கு ஒன்றும் கொள்ளாதே. கெட்ட நடத்தையாகிய தீமையைத் தரக்கூடிய பொய்மை மொழி பேசி கோள்கள் பொருந்துமாறு நீ நடந்து கொள்ளாதே என்றும் கடுவெளிச்சித்தர் அறிவுரை கூறுகிறார்.

பெண்ணாசை கொள்ளாதே!

நீ பிறரிடத்தில் எதையும் யாசித்துப் பெற வேண்டும் என்று நினைக்காதே! மிகவும் அழகாக பெண்கள் இருக்கின்றார்கள் என்று பெண்கள்மீது ஆசைகொண்டு  மகிழ்ந்து திரியாதே! இத்தகைய சிற்றின்பங்கள் உன்னை வாழ வைக்காது! என்பதை, 

பிச்சை யென்றொன்றும் கேளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்க மாளாதே!

 என அறிவுறுத்துகிறார்.

திட்டியவரைக்கூடத் திருப்பித் திட்டாதே!

உன்னைத் தவறாக பேசிய வரை கூட, நீ தவறாகப் பேசாதே! உலகத்தில் உள்ள அனைவரும் பொய் பேசி திரிந்தாலும் நீ பொய் பேசாதே! கொடிய பாவ வினைகளைச் செய்யாதே! பறவைகள் மீது கல்லெறியாதே! என்பதை,

வைதோரைக் கூட வையாதே! - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

எனக் கூறுகிறார்.

கஞ்சாப் புகை பிடியாதே!

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கஞ்சாப் புகையிலையினைப் பிடிக்காதே! வெறியூட்டும் மனிதனை மயக்கும் கள்ளையும் குடிக்காதே! யாருக்கும் கிடைக்காத பெரும் பேறாகக் கிடைத்துள்ள இந்த உயிரை வீணாக மாய்த்துக் கொள்ளாதே! பக்தியில்லாத அஞ்ஞானத்தையுடைய நூல்களைப் படிக்காதே! என அறிவுறுத்துகிறார்.

கள்ளவேடம் புனையாதே!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்ளவேடம் புனைந்து திரியாதே! வெளியே பல தவறுகளைச் செய்துவிட்டு வெளிவேசத்தால் போல் நடிக்காதே! நீ செய்த பாவத்தைப் போக்க  கங்கையிலே உன்னுடைய உடம்பை நனைத்துத் திரியாதே! பிறர் பொருளை அபகரிக்க நினைக்காதே! பிறரிடம் நட்பு பாராட்டி இருந்துவிட்டு அந்த நட்புக்குக் களங்கம் ஏற்படும் வகையில் பிரிந்து செல்ல எண்ணாதே எனக் கூறுகிறார். 

மேலும் செய்யக்கூடாதவை...

1. சிவமன்று வேறு வேண்டாதே!

2. யாருக்கும் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே!

3. தவநிலை விட்டுத் தாண்டாதே!

4. நல்ல சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே!

5. தேவையற்ற சடங்குமுறைகளைச் செய்யாதே!

6. உன்னைப் புகழ்ந்து பலரிடம் கூற வேண்டும் என்று எண்ணாதே!

7. பிறர் வெறுக்கும்படியான  தாழ்ந்த நிலையை நீ உருவாக்காதே!

8. மெய்யான குருவின் சொல் தட்டாதே! 

9. நன்மை மேன்மேலும் செய்வதை நிறுத்தாதே!

10.போலியான வாழ்க்கை வாழாதே!

11. நல்ல நல்ல அறிவை பொய்யான வழியில் செலுத்தாதே!

இவ்வாறு, கடுவெளிச் சித்தர் ஒரு மனிதனுக்குத் தீங்கு தருபவை எவை எனப் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்த வகைத் தீங்குகளினால் ஏற்படும் தீமை பற்றியும்  எச்சரித்துள்ளார்.

மனிதன் செய்யக்கூடியவை எவை? 

உலக வாழ்க்கையைப் பாடியவர் கடுவெளிச்சித்தர். அவர்தம் ஆனந்தக் களிப்புப் பகுதியில்,  மனிதன் எவையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பின் வருமாறு கூறுகிறார். 

நல்லவழிதணை நாடு!

மனிதனாகப் பிறந்தவன் தனக்கென ஒரு நல்ல வழியைப் பின்பற்ற வேண்டும். அது பிறருக்குத் தீங்கு செய்வதாக இருக்கக்கூடாது.  எல்லா நாளும் பரமன் ஒருவனையே விரும்பித் தேட வேண்டும். என்பதை,

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு

எனக்  கூறுகிறார். மேலும்,  வல்லவர்களாகிய நல்லவர்கள் கூட்டத்திலேயே சேர வேண்டும். தீயவர்ளோடு சேருவதை விடுக்க வேண்டும். அள்ளி அருளைத் தருகின்ற வள்ளலாகிய பரமனை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி வாழ்த்திக் கொண்டாட வேண்டும்" என்று கடுவெளிச் சித்தர் அறிவுறுத்துகிறார்.

வேதவிதிப்படி நில்லு!

வேதம் என்ன சொல்கின்றதோ அந்த விதிகளை நன்கு அறிந்து அவற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லவர்கள் நன்மை புரிபவர்கள் பின்பற்றுகின்ற வழியையே நீயும் வேண்டிச் சென்று பின்பற்ற வேண்டும். மனித குலத்திற்கு நன்மை செய்கின்ற சாதகமான நிலைமையை மட்டுமே நீயும் பின்பற்றி அதனையே பிறரையும் பின்பற்றும்படி சொல்லு எனக் கூறுகிறார.

மெய்ஞான  மார்க்கத்தைக் கூறு!

நீ உண்மையான தவஅறிவு என்ன என்பதைப் புரிந்து தெரிந்து கொள். அந்தத் தவத்தின் ஞான அறிவைப் பெற்று அதன் வழியிலே செல்வதற்கு முயற்சிசெய். இந்த உலகில் வேதாந்த பிரமம் என்கிற இந்தப் பிரபஞ்சத்தின் வெளியாகக் கண்டு அந்த வெட்ட வெளியைத் தேடி அறிந்துகொள். அறிவற்ற அஞ்ஞான மார்க்கத்தை நீ அறவே விரட்டி ஒழித்துவிடு. அதுவே உனக்கும் உன்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் ஆனந்த  வழியாகும்.  அந்த மெய்ஞான மார்க்கத்தை அடையும் வழியை உன்னைச் சார்ந்தவர்களுக்கும் கூறு" எனக் கூறுகிறார்.

சாதியாவும் ஒன்றே எனப் போதி!

இவ்வுலகத்தில் சாதி என்பது கிடையாது. அனைவரும் ஒன்றே! அனைவருக்கும் சமமானதே நீதி என்று உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறுவதோடு, நல்ல நீதிகள், நல்ல செயல்கள், நற்குணங்கள் எந்த வகை உருவில் இருந்தாலும் அவற்றை நீ நன்கு அறிந்து கற்று, அவற்றின் வழி நடந்து, பிறருக்கும் எடுத்துக் கூற வேண்டும் எனக் கூறுகிறார்.

மேலும் செய்ய வேண்டியவை  சில...

1. நல்ல புத்தி விசுவாசம் வைக்க வேண்டும்.

2.உள்ளத்தில் எழும் நான்கு வகையான பகையினை நீக்கிவிட்டால் நாட்டை ஆளலாம்.

3. ஐம்புலங்களால் வரும் கள்ளத்தனத்தை எரித்துவிட்டால் சொர்க்கம் அடையலாம்.

4. அன்பு மலர்தூவி  ஆனந்த பரம்பொருளின் திருவடிகளை வணங்கினால் உடலும் உயிரும் மகிழ்வடைய நல்ல இன்பம் கிடைக்கும்.   
5. அடியவர்களைத் துதித்தால், ஏழைகளுக்கு இறங்கினால் அருளுவான் ஈசன்.
என ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய நற்செயல்கள்  எவை என்பதை பற்றி கடுவெளிச் சித்தர் கூறியுள்ளார்.

முடிவுரை

மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் எமன் நம்மை எடுத்துக் கொள்வான். எனவே இவ்வுலகியலின் உண்மை உணர்ந்து நல்லநெறிப்படி மனிதன் வாழ வேண்டும் என்றும் அப்படிப்பட்ட இந்த உலக வாழ்க்கையில் எவற்றையெல்லாம் மனிதன் விட்டொழிக்க வேண்டும், எவற்றையெல்லாம் மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதை கடுவெளிச்சித்தர் வலியுறுத்தியுள்ளார்.

**** இராஜாலி ****


திங்கள், 11 செப்டம்பர், 2023

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

முன்னுரை

       விஷ்ணுவை (திருமால்) முழுமுதல் கடவுளாகக் கொண்ட சமய நெறி வைஷ்ணவம். இதனைத் தமிழில் வைணவம் என்பர். முழுமையாக வைஷ்ணவத்தை வளர்த்துத் தமிழையும் வளர்த்தவர்கள் பன்னிரு ஆழ்வார்களே ஆவர். இவர்கள் இயற்றிய நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். திவ்வியப் பிரபந்தம் என்பதற்குத் தெய்வீக எழில் நிறைந்த சிற்றிலக்கியம் என்பது பொருள். திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்களின் இனிய பாசுரங்களின் தொகுப்பு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள் என்பவர் ஆவார். அத்தகைய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பாடல் வைப்பு முறை 


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்   பாடிய ஆழ்வார்கள்

    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் ஆவார்கள்.

முதல் ஆழ்வார்கள் 

  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுகின்றனர்.

1. பொய்கையாழ்வார்

  காஞ்சிபுரத்தில், தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனும் பெயர் பெற்றார். இவரது பாடல்கள் முதல் திருவந்தாதி எனப்படுகின்றன. இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன.இப்பாடல்கள் அந்தாதித் தொடையிலும் நேரிசை வெண்பா யாப்பிலும் அமைந்தவை. இவை மூன்றாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. 

2. பூதத்தாழ்வார்

   மாமல்லபுரத்தில் பிறந்தவர். பூதம் என்னும் சொல்லைக் கையாண்டு கவிபாடியதால் பூதத்தாழ்வார் எனும் பெயர் பெற்றார். இவரது பாடல்கள் 2ஆம்திருவந்தாதி ஆகும். இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன. இவை ஞானத்தமிழ்ப் பாடல்கள். அந்தாதித் தொடையிலும் வெண்பா யாப்பிலும் அமைந்தவை. இது மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.  

3. பேயாழ்வார்

  இவர் மயிலாப்பூரில் பிறந்தவர். இறைவன்மீது பேய் கொண்டாற் போல அன்பு பூண்டு பாடல்களைப் பாடியதால், பேயாழ்வார் என்று பெயர் பெற்றவர். இவரது பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி எனப்படுகின்றன. இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன. இது மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. 

 இம்மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று வைணவ சமயத்தவர்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு ஆகும்.

4. திருமழிசை ஆழ்வார்

 இவர் திருமழிசைப் பிரான். பக்திசாரர் என்றும் அழைக்கப்படுகிறார். திருமழிசையில் பிறந்தவர். திருமாலின் சுதர்சன சக்கர அம்சமாகப் பிறந்தவர் என்பர். இவர் பாடிய திருச்சந்த விருத்தம் முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இவர் பாடிய, திரு விருத்தம், திருவாசியகம், நான்முகன் திருவந்தாதி போன்றவை மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. சைவத்திற்குத் திருமூலர் போன்று வைணவத்திற்குத் திருமழிசையாழ்வார் திகழ்ந்தார். இவரது காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்.

5.பெரியாழ்வார்

 திருவில்லிபுத்தூரில் தோன்றிய அந்தண மரபினர். கருடனின்அம்சமாகப் பிறந்தவர். விஷ்ணுசித்தன் என்பது இயற்பெயர். பட்டர்பிரான் என்று வைணவர்கள் போற்றுவர். ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. ஆழ்வார்களுள் பெரியவர் என்னும் கருத்தில் பெரியாழ்வார் எனப்படுகிறார். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் பாடிய திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி ஆகிய இரண்டும் முதலாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. பிற்காலத்திய பிள்ளைத்தமிழ் இலக்கிய வகைக்கு முன்மாதிரியாக இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன.

6.ஆண்டாள்

 இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு திருவில்லிபுத்தூரில் துளசிச்செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்டவர். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். நிலமகளின் அம்சம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, சூடிக்கொடுத்த நாச்சியார், ஆண்டாள் என அழைக்கப்படுகிறார். தந்தை பெரியாழ்வார் திருமாலுக்குத் தொடுத்து வைத்த மாலையைத் தம் சூடி மகிழ்ந்தவர், ஆண்டவனையே கணவனாகப் பெற்று ஆண்டாள் ஆனார் ஆண்டாளின் பாசுரங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனப்படுகின்றன. இவை முதலாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளன. திருப்பாவை 30 பாசுரங்களை உடையது.

7.திருமங்கையாழ்வார்

    இவர் சோழநாட்டுத் திருக்குறையூரில் திருமாலின் வில்லின் அம்சமாகப் பிறந்தவர். இயற்பெயர் நீலன். சோழனின் தளபதியாக. பல வெற்றி கண்டு. பரகாலன் என்னும் பட்டம் பெற்றவர். சோழன் இவரைத் 'திருமங்கை' என்னும் நாட்டுக்கு அரசனாக்கினான். அதனால் இவர் மங்கை வேந்தன் என்றும் கலியன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் 1253 பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் எனப்படுகின்றன. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இரண்டாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

8.குலசேகராழ்வார்

   இவர் சேர மன்னர். திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர். திருமாலின் கௌத்துவ மணியின் அம்சமாகப் போற்றப்படுகிறார். இவரது காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு. குலசேகரர் இராம பக்தியில் திளைத்தவர். குலசேகராழ்வார் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த புலமை வாய்ந்தவர். இவரது 105 தமிழ்ப் பாசுரங்களும் 'பெருமாள் திருமொழி' என்று கூறப்படுகின்றன. இது முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

9.தொண்டரடிப்பொடியாழ்வார்

   இவர் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருமாலின் வனமாலை அம்சமாகத் தோன்றியவர். இவரது இயற்பெயர் விப்ரநாராயணன். தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்று போற்றப்படுகிறார். இவர் 55 பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்னும் இரு சிற்றிலக்கியங்களாக உள்ளன. இவை முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

10.திருப்பாணாழ்வார்

      இவர் உறையூரில் பிறந்தவர். திருமாலின் ஸ்ரீவத்சம் என்னும் மச்சத்தின் அம்சமாகப் பிறந்தவர். தாழ்ந்த இனத்தில் பிறந்தமையால் திருவரங்கக் கோயிலுள் செல்லாது, காவிரி ஆற்றின் தென்கரையில் நின்று பெருமானைப் புகழ்ந்து பாடிவழிபட்டார். திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமந்து தம் சந்நிதிக்கு அழைத்து வருமாறு பணித்தார். பெருமான் மீது 'அமலாதிபிரான்' எனத் தொடங்கும் 10 பாசுரங்களைப் பாடினார். இது முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

11.நம்மாழ்வார்

  திருவரங்கப்பெருமானால் 'நம் சடகோபன்' என்று அழைக்கப்பட்டவர்.எனவே வைணவர்கள் இவரை நம்மாழ்வார் என்று உரிமையுடன் போற்றுகின்றனர். இவர் மாறன், பராங்குசன், காரிமாறன், தமிழ்மாறன்,வகுளாபரணன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் கி.பி.9ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி என்னும் திருக்குருகூரில் பிறந்தவர். இவர் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறார். ஆழ்வார்களுள் இவரே முதன்மையானவர். நம்மாழ்வாரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று போற்றுகின்றனர். நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் 4 பிரபந்தங்களைப் பாடியுள்ளார். இவற்றில் 1298 பாசுரங்கள் உள்ளன. ஆழ்வார்களுள் இவரே மிகுதியான பாசுரங்களைப் பாடியுள்ளார். நான்காம் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

12. மதுரகவியாழ்வார்

  இவர் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆழ்வார் திருநகரியை அடுத்த திருக்கோளூரில் கருடன் அம்சமாகப் பிறந்தவர். செவிக்கு இனிமையாக. மதுரமாகப் பாட வல்லவர் என்பதால் மதுரகவி ஆழ்வார் எனப்பட்டார். நம்மாழ்வாரின் மாணவர். இவர் நம்மாழ்வாரைத் தெய்வமாகக் கருதிப் போற்றியவர். அவரைப் புகழ்ந்து 14 பாசுரங்களைப் பாடினார். அவை 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்று கூறப்படுகின்றன. இது முதலாம் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது. 

முடிவுரை 

  இவ்வாறு பன்னிரு ஆழ்வார்கள் திருமால் மீது பக்தி பாசுரங்களை பாடி பரவசப்படுத்தியதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பேருதவிபுரிந்தனர். என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

***** இராஜாலி *****

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திருக்குறள் - அறன் வலியுறுத்தல்

 நூல் குறிப்பு

       உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் முதலாம் நூற்றாண்டில் தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாகும். அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்நூல் 133 அதிகாரங்களையும் அதிகாரங்களுக்கு பத்து பாடல் வீதம் 1330 பாடல்களையும் கொண்டதாகும். முப்பால், உத்தர வேதம், தெய்வ நூல், பொய்யா மொழி  என பலவாறு அழைக்கப்படும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அறன் வலியுறுத்துதல்

    அறத்துப்பாலில் நான்காவது அதிகாரமாக விளங்குவது அறன் வலியுறுத்துதல் என்னும் அதிகாரமாகும். இதில் வாழ்வியல் அறங்கள் எவை என்பதையும் அவற்றின் பயன்களையும் வள்ளுவர் வகைப்படுத்தி பின்வருமாறு  கூறியுள்ளார்.
  • அறம் என்னும் நற்பண்பு ஒருவருக்கு சிறப்பையும் கொடுக்கும். செல்வத்தையும் கொடுக்கும். அத்தகைய உயர்ந்த அறத்தை விட நன்மை தருவது இவ்வுலகத்தில் வேறு ஒன்றும் கிடையாது.
  • ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை போன்று நன்மை விளைவிக்கும் செயல்கள் வேறு இல்லை. அத்தகைய அறத்தை போற்றி காக்காமல் மறந்து போவதை போல தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
  • ஒருவர் தம்மால் முடிந்தவரை இடைவிடாமல் எல்லா இடங்களிலும் அறச்செயல்களை செய்வதற்கு முற்பட வேண்டும்.
  • ஒருவர் மனதளவில் குற்றமற்றவராக இருந்தால் அதுவே அறமாகக் கருதப்படும். மற்றவை எல்லாம் வெற்று ஆரவாரமாக கொள்ளப்படும்.என்பதை,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. - என வள்ளுவர் கூறுகிறார்.
  • பொதுவாக, பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்வதே உயர்ந்த அறமாகக் கருதப்படும்.என்பதை,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 
- என அறம் என்பது எது என விவரித்துக் கூறியுள்ளார்.
  • அறச்செயல்களை செய்வதற்கு நாட்களைக் கடத்த கூடாது. முதுமையில் அறங்களை செய்யலாம் என  எண்ணாமல் இப்பொழுது அறத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவே முதுமையில் நமக்கு துணையாக நிற்கும்.
  • அறச்செயலை மேற்கொள்பவர்கள் பல்லாக்கின் மேலிருந்து பயணிப்பவர்கள் போன்றவர்கள். மற்றவர்கள் பல்லாக்கை தூக்கிச் செல்பவர்கள்  போன்றவர்கள். அறச்செயலை செய்பவர்கள் எப்பொழுதும் அமைதியான நிலையில் காணப்படுவார்கள். மற்றவர்கள் மன அமைதியற்ற நிலையில் இருப்பார்கள்.
  • ஒருவன் நாள் தவறாமல் நற்செயல்களைப் புரிவான் எனில் அச்செயல்கள் அவனுக்கு மறுபிறவி கொடுக்கும் பாதையை அடைக்கும் கல்லாக இருந்து மறுபிறவி இல்லாமல் காக்கும்.
  • அறத்தின் வழியில் வாழ்வதால் கிடைப்பது இன்பமாகும். மற்றவை இன்பமாகாது.என்பதை,
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - என உறுதியாகக் கூறுகிறார்.
  • ஒருவன் தன் வாழ்நாளில் முயற்சி செய்து செய்ய வேண்டியது அறச்செயல்களே ஆகும். விட்டுவிட வேண்டியது தீய செயல்களே.

என அறன்வலியுறுத்துதல் என்னும் அதிகாரத்தில் அறத்தின் மேன்மைகளை  திருவள்ளுவர் எடுத்துக்கூறியுள்ளார்.

**** இராஜாலி****

மின் நூல் - தமிழ் நூல்கள் அறிமுகம்

தமிழ் நூல்கள் அறிமுகம்  - தமிழ் இலக்கியங்கள் குறித்த அட்டவணை